Monday, May 20, 2013

புக்கிகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது: பி.சி.சி.ஐ.,

சென்னை: புக்கிகளை பி.சி.சி.ஐ., அமைப்பால் கட்டுப்படுத்த முடியாது என கூறிய பி.சி.சி.ஐ., தலைவர் ஸ்ரீனிவாசன், ஸ்பாட் பிக்சிங் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கைப்படி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் வீரர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பி.சி.சி.ஐ., தயங்காது எனவும் கூறினார்.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின், ஆறாவது சீசன் கிரிக்கெட் போட்டிகள், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி, சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், "ஸ்பாட் பிக்சிங்' என்ற சூதாட்டம் நடந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, டில்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னையிலும், கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக, கிடைத்த தகவலை அடுத்து, கடந்த, 20 நாட்களாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கினர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, 13 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். இதில், 6 பேரை கைது செய்தனர். இவர்களின் சூதாட்ட களமாக பயன்பட்ட, சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள, "ஹைடெக்' அலுவலகத்தில் இருந்து, 14 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 லேப் - டாப்கள், ஐந்து வயர்லெஸ் போன்கள், 24 மொபைல் போன்கள், நான்கு கம்ப்யூட்டர்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். கோவையிலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக விவாதிக்க பி.சி.சி.ஐ.,யின் அவசர செயற்குழுக்கூட்டம் சென்னையில் இன்று துவங்கி நடந்தது. பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், துணைத்தலைவர்,
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தலைவர் ராஜிவ்சுக்லா, பி.சி.சி.ஐ.,யின் ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரி ரவிஷவான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஸ்பாட் பிக்சிங் குறித்தும், இதில் ஈடுபட்ட வீரர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் சூதாட்டம் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

சூதாட்ட புகார் குறித்து விசாரிக்க குழு

இந்த கூட்டம் முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், விளையாட்டு வீரர்களை குறிப்பிட்ட அளவுக்கு தான் பி.சி.சி.ஐ., கட்டுப்படுத்த முடியும். சூதாட்ட தரகர்களை பி.சி.ஐ.,யால் கட்டுப்படுத்த முடியாது. சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்தது. சூதாட்ட தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் போலீஸ் கிடையாது. ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக டில்லி போலீசாரிடம் விசாரணை விபரங்களை கேட்டுள்ளோம். மூன்று வீரர்கள் மீதும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் புகார் கொடுக்க உள்ளது. சூதாட்ட புகார்களை பற்றி விசாரிக்க பி.சி.சி.ஐ, சார்பில் குழு ரவி சவானி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையின் படி பி.சி.சி.ஐ., நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு அணியிலும் ஊழல் தடுப்பு குழ அதிகாரிகள் இடம்பெறுவார். வீரர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம். வீரர்களுக்கான நன்னடத்தை விதிகள் குறித்து பி.சி.சி.ஐ., ஆலோசனை செய்யும். மூன்று வீரர்களை தவிர மற்ற வீரர்கள் தவறு செய்தனரா என்பது பற்றி தெரியவில்லை. சூதாட்டத்தை பி.சி.சி.ஐ., ஊக்குவிக்கவில்லை. ஐ.பி.எல்., அமைப்பு தவறான அமைப்பு என குற்றம்சாட்டக்கூடாது என கூறினார்.

வீரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை : பி.சி.சி.ஐ. அவசர செயற்குழுக் கூட்டத்தில் ராஜஸ்தான் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் நிறைவடைந்த நிலையில், மூன்று வீரர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர ராஜஸ்தான் அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று வீரர்கள் மீது ஏமாற்றுதல், பி.சி.சி.ஐ. ஒப்பந்த விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More