
வணிகத்தில், எதையாவது செய்து, விரைவில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம், அனைத்துத் தரப்பினரிடையேயும் நிலவுகிறது. கிரிக்கெட்டுக்கு தொடர்பில்லாத "தாதா'க்கள், "பெட்' செய்து, பணம் பார்க்கின்றனர். இதற்கு, வீரர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த, மோசடிகளுக்கு யார் காரணம். அதை தடுக்க என்ன செய்துள்ளனர்.தொடரும் மோசடி விளையாட்டாக மாறிவிட்ட, ஐ.பி.எல்., போட்டியைத் தடை செய்ய வேண்டும் என,ஒரு தரப்பு கோரிக்கை விடுக்கிறது. இது பற்றிய கருத்துக்கள் இதோ:
கிரிக்கெட் மைதானத்தில் நடப்பதை, கோடிக்கணக்கான மக்கள், "டிவி'யில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வெற்றி பெறும் நிலையில் இருக்கும் ஒரு அணியின் பவுலர், திடீரென்று "நோ பால்' அல்லது "வைய்டு' பந்தை வீசுகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைகின்றனர். வேண்டுமென்றே தவறை செய்கின்றனர் என்ற சந்தேகத்தை கிளப்புகின்றனர். இதுபோன்ற சந்தேகத்தை பல ஆண்டுகளாக, பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதற்கு, எவ்வித பதிலும் போட்டி நடத்துபவர்களிடம் இல்லை.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில், ஊழலை ஒழிக்கத் தனிப் பிரிவை ஏற்படுத்தியிருப்பதாக, அதன் நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், ஒரு முறைகூட தவறு நடந்ததாக, கிரிக்கெட் வாரியத்தின், ஊழல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்ததில்லை. எந்த வீரரையும் பிடித்துக் கொடுத்ததுமில்லை.அசாருதீன், ஜடேஜா போன்றோரின் மீதும், கடந்த ஐ.பி.எல்., போட்டியின் போதும், பணம் வாங்கிக் கொண்டு விளையாடியதாக, போலீசார் தான் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின், ஊழல் தடுப்புப் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. இதனால், கிரிக்கெட் வாரியத்தின் மீதே, மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
பணம் வாங்கிக் கொண்டு விளையாடும் வீரர்கள் மீது, ஓராண்டு சஸ்பெண்ட், வாழ்நாள் தடை போன்ற நடவடிக்கையை, கிரிக்கெட் வாரியம் எடுக்கிறது. கடந்த ஐ.பி.எல்., போட்டியில் சஸ்பெண்ட் ஆன வீரர்கள், நடப்பு ஐ.பி.எல்., போட்டியில் விளையாட வந்து விட்டனர். அதேபோல், 35 வயதுக்கு மேல் ஒருவருக்கு, வாழ்நாள் தடை விதிப்பதில் பயனில்லை. எனவே, மோசடியில் ஈடுபடும் வீரர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமந்த் சி ராமன்,வர்ணனையாளர்
எந்த சட்டத்துக்கும் உட்படாத ஐ.பி.எல்., கிரிக்கெட்டை, அரசு, தடை செய்ய வேண்டும். சமூகத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கும் கலாசாரத்தை புகுத்தும் வேலையை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி செய்து வருகிறது.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி என, வெறும் கிரிக்கெட் விளையாட்டைமட்டும், "டிவி'யில் காட்டுவதில்லை. பெரும் மிகைப்படுத்துதலுடன், போட்டியை காட்டுகின்றனர். அதற்கிடையே, இளைஞர்களின் நுகர்வு கலாசாரத்தை தூண்டும் வகையில் விளம்பரங்கள் வெளியாகின்றன.
இளம்பெண்களை மைதானத்தில் ஆட விடுவது, பனியன், ஜட்டி போன்ற உள்ளாடைகளில் துவங்கி, போதைக்கு அடிமையாக்கும் மது வரை, விளம்பரங்களை வெளியிட்டு, இளைஞர்களின் மனதை கெடுக்கின்றனர்.விளையாட்டுப் போட்டி என்ற பெயரில், பெரும் நுகர்வு கலாசார மோசடியை, பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதற்கு, இந்திய நாட்டு முதலாளிகளும், ஊடகங்களும் துணையாக நிற்கின்றன. ஐ.பி.எல்., என்பதே மோசடியான ஒன்று. அதில், ஸ்ரீசாந்த் என்ற வீரர் மட்டும் தவறுசெய்யவில்லை.
பல மணி நேரம் இளைஞர்களை,"டிவி' முன் அமர வைத்து, நாட்டின்உற்பத்தி திறனை முடக்குகின்றனர். ஐ.பி.எல்., போட்டி நடக்கும் நேரங்களும், உற்பத்திக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது. பெரும் பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்துகிறது. மேலும், எந்த விதிகளுக்கும், ஐ.பி.எல்., கட்டுப்படுவதில்லை. இந்திய சமூக முறைகளுக்கு எதிரான கலாசாரத்தை பரப்பும் வகையில், இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இளைஞர்களை பாதுகாக்க, சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளை, அரசு, உடனடியாகத் தடை செய்ய வேண்டும். இதில், எவ்வித சமரசத்தையும் செய்யாமல், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"பாடம்' நாராயணன்,சமூக ஆர்வலர்
போட்டியில் அணிகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள், சூதாடிகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இப்போது விளையாடி வருகின்றனர். அதன் விளைவே, கிரிக்கெட் போட்டிகளில் நடக்கும் மோசடிகளுக்குக் காரணம்.கிரிக்கெட் விளையாட்டு,அரசியலுக்கு இணையாக மாறிவிட்டது. அரசியல்வாதி, ஐந்தாண்டுகள் கிடைக்கும் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி, எவ்வளவு சொத்து சேர்க்க முடியுமோ, அவ்வளவு சொத்து சேர்த்து விட வேண்டும் என எண்ணுகிறார். ஐ.பி.எல்., போன்ற கிரிக்கெட் போட்டிகளிலும், கிடைக்கும் மிகக் குறுகிய வாய்ப்பைப் பயன்படுத்தி, எத்தனை கோடி ரூபாய் சம்பாதிக்கலாம், என கணக்கிட்டு, வீரர்கள் விளையாடுகின்றனர்.
இதற்கு, தனிப்பட்ட வீரர்கள் மட்டும் காரணமல்ல. கார்ப்பரேட் விளையாட்டாக மாறிவிட்ட கிரிக்கெட்டில், பல்வேறு முதலாளிகள், வணிகர்கள்,சூதாடிகளின் பங்கு மிக அதிகமாக உள்ளது. ஐ.பி.எல்., போட்டி என்றில்லாமல், சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சூதாட்டம் பெருகி விட்டது. இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், பணம் பெற்று விளையாடியதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிரிக்கெட் சூதாட்டமாகி விட்டது என, மக்கள் மத்தியில் பரவத் துவங்கி விட்டது. விளையாட்டை தனி நபர்கள் லாபத்துக்காக நடத்துகின்றனர், விளையாடுகின்றனர் என, நம்பத் துவங்கி விட்டனர். பிற விளையாட்டுகளை அழித்து, கிரிக்கெட்டுக்கு அளித்த முக்கியத்துவத்தின் பலனை, மக்கள் அனுபவிக்கத் துவங்கி விட்டனர். இந்நிலை தொடர்ந்தால், கிரிக்கெட், விரைவில் செத்துவிடும். போட்டியில் நடக்கும் மோசடிகளை, கிரிமினல்சட்டத்துக்கு உட்பட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுஷ்ய புத்திரன்,சமூக ஆர்வலர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் வீரர்கள், அணி உரிமையாளர்களை தாண்டி, பலர் பணம் பண்ணுகின்றனர். அவர்களின் தலையீடு, போட்டியில் அதிகரித்து விட்டது. மேலும், அளவுக்கு மீறிய பணம், கிரிக்கெட் போட்டிகளில் புழங்குகிறது. இதனால், விரைவில் பணக்காரர் ஆக, தவறுக்கு மேல் தவறுசெய்யத் துவங்கி விட்டனர்.
இங்கிலாந்து நாட்டில், கிரிக்கெட் மட்டுமல்லாமல், பேஸ் பால், பேஸ்கட் பால் போன்ற விளையாட்டுகளிலும் ஐ.பி.எல்., போல, தனியார் அணிகள் நடத்தும் லீக் போட்டிகள் நடக்கின்றன. அதைப் பார்த்துத் தான், இந்தியாவில் ஐ.பி.எல்., நடத்தப்படுகிறது. ஆனால், அதற்கான கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் இருப்பது போல், இந்தியாவில் இல்லை.இங்கிலாந்து பேஸ் பால் லீக் போட்டிகளில், பெரும் மோசடிகள் நடந்தன. இதனால், லீக் போட்டிகளை மக்கள் வெறுக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், பேஸ் பால் மோசடிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளன. அதற்கான, நடவடிக்கையை அந்நாட்டில் பாரபட்சமின்றி எடுத்து உள்ளனர்.
ஆனால், ஐ.பி.எல்., மோசடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது சந்தேகமாக உள்ளது. பல அணிகளின் உரிமையாளர்கள் யார் என்றே தெரியவில்லை. வெளியில் சொல்லப்படும் முதலாளிகள் ஒருவராகவும், உண்மையான முதலாளிகள் ஒருவராகவும் உள்ளனர். அணி யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்குகளும் கோர்ட்டில் உள்ளன.டெஸ்ட் போட்டிகளின் போது, வீரர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள், ஐ.பி.எல்., வீரர்களுக்கு இல்லை. நான்கு மணி நேர போட்டிக்குப் பின், வீரர்கள் அடிக்கும் கும்மாளத்துக்கு அளவில்லை. பேராசையில், ஒரு பந்தை எறிவதற்கு பணம் வாங்கும் வேலையை செய்யத் துணிகின்றனர்.
0 comments:
Post a Comment