மாமியாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், உச்சக் கட்ட கோபத்தில் தான் சுமந்து பெற்ற மகவையே வீசியெறிந்து கொன்றுள்ளார் மங்கை ஒருவர்.
சாஹிபாபாத்தின் ஜனக்புரி பகுதியில் தன் கணவர் ராஹுல் ஷர்மாவுடனும் மாமியாருடனும் இரண்டாம் தளமொன்றில் வசித்து வந்தவர் பூஜா ஷர்மா. ராஹூல் பூஜா தம்பதிகளுக்குக் கல்யாணம் நடந்து இரண்டு வருடமே ஆகிறது. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண்குழந்தை கோலுவைப் பெற்றெடுத்தனர்.
குழந்தை பிறந்ததன் பின்னர் கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளியன்று கணவன் வெளியே சென்றிருந்த போது, குழந்தைக்கு பாலூட்டும் விசயமாக மாமியாருடன் ஆவேசமாக சண்டை போட்ட பூஜா, ஒரு கட்டத்தில் தன்னுடைய குழந்தை என்றும் பாராமல் இரண்டாம் மாடியிலிருந்தே அக்குழந்தையை வீசியெறிந்துள்ளார். சற்று நேரத்தில் தான் செய்த விபரீதம் உணர்ந்த பூஜா உடனடியாகத் தலைமறைவாகிவிட்டார்.
தெருவில் வீசியெறியப்பட்ட குழந்தையை அக்கம் பக்கத்தவர்கள் விரைந்து மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றும், வழியிலேயே அக்குழந்தை மரணம் தழுவியது. மாமியார் மருமகள் சண்டை நடந்த போது,அவ்வீட்டிலிருந்த பணிப்பெண் நடந்த நிகழ்வை காவல்துறையில் சாட்சியமளித்துள்ளார். பூஜா மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்தார் என்றும் தெரிகிறது.
பின்னர் வீட்டினைப் பூட்டிவிட்டு மாமியாரும் எங்கோ சென்றுவிட்டார், பூஜாவின் கணவரும் அகப்படவில்லையாம். "எங்களுக்கு எந்த முறையீடும் வரவில்லை என்றாலும் உரிய விசாரணையை மேற்கொள்வோம்" என்று சாஹிபாபாத் நகரத்தின் காவல் கண்காணிப்பாளர் எஸ் எஸ் யாதவ் தெரிவித்துள்ளார்
உத்தரபிரதேசத்தின் பஞ்ச்சீல் நகரில் சில நாள்களுக்கு முன்பு மந்திர தந்திரத்துக்கு அடிமையான பெற்றோர், பிறந்து ஒன்பதுநாளேயான பச்சிளம் சிசுவை உயிருடன் புதைத்த கொடுமையும் நினைவு கூரத்தக்கது.





0 comments:
Post a Comment