Wednesday, September 14, 2011

ஊழலுக்கு எதிரான அத்வானியின் ரதயாத்திரை வெறும் அரசியல் நாடகம்: காங்கிரஸ்

டெல்லி: ஊழலுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அத்வானி மேற்கொள்ளவிருக்கும் ரதயாத்திரை வெறும் அரசியல் நாடகம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் அக்டோபர் 2-ம் தேதி ஊழலுக்கு எதிரான ரதயாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த யாத்திரை வெறும் அரசியல் நாடகம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ரதயாத்திரை என்னும் ஏமாற்று தந்திரத்தால் ஊழலை ஒழித்து விட முடியாது. ஊழலுக்கு எதிராக அத்வானி மேற்கொள்ளவிருக்கும் ரதயாத்திரையால் பாஜக அரசியல் நாடகமாடுகிறது. ரதயாத்திரை மேற்கொள்வதால் எப்படி ஊழலை, லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்று பாஜக மக்களுக்கு விளக்க வேண்டும்.

கடந்த முறை அத்வானி ரதயாத்திரை நடத்தியபோது அதனால் மக்கள் வெறுப்படைந்தனர். அதில் இருந்தே நாம் இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்னொரு ரதயாத்திரை நடத்தப்போவதாக அத்வானி அறிவித்துள்ளார். இந்த ரதயாத்திரையாலும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கி, அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அத்வானி துணை பிரதமராக இருந்தார். அப்போது அவர் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டார்? லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது பற்றியோ, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது பற்றியோ எப்போதாவது பேசியதுண்டா? ஊழல் பெயரை பயன்படுத்தி அரசியல் நாடகம் ஆடாமல், அரசியலில் உள்ள ஊழலை ஒழிக்கின்ற வழியைப் பாருங்கள் என்று நான் பாஜகவை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More