சென்னை: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் என்று விசாரணைக் கமிஷன் கூறுவோர் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.சட்டசபையில் பரமக்குடி விவகாரம் இன்று சூட்டைக் கிளப்பியது. இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் இடதுசாரி உறுப்பினர்களும், பாமகவினரும் வெளிநடப்புச் செய்தனர்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பரமக்குடியில் நடந்த வன்முறை, அதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோருகின்றனர். ஆனால் விசாரணைக் கமிஷன் அறிவிக்கப்பட்ட பிறகு தன்னிச்சையாக அரசு நடவடிக்கை எடுக்க முடியாது.
விசாரணைக் கமிஷன் தனது விசாரணையை முடித்து அரசிடம் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்யட்டும். அதில் கூறப்படும் பரிந்துரைகளை அரசு அப்படியே ஏற்கும். அதில் தவறு செய்தவர்களாக குறிப்பிடப்படுவோர் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.
அதேபோல பலியானோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை அதிகரிப்பது குறித்தும் கமிஷன் தான் பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.





0 comments:
Post a Comment