Tuesday, September 13, 2011

நீண்ட நேரம் டாய்லெட்டில் பயணிகள்: தீவிரவாதிகள் என்ற அச்சத்தால் விமானங்களை சூழ்ந்த யுஎஸ் போர் விமானங

F16நியூயார்க்: நியூயார்க் மற்றும் டெட்ராய்ட் நகர்களுக்குச் சென்ற விமானங்களில் பயணித்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பயணிகள் நீண்ட நேரம் டாய்லெட்டில் இருந்ததால், அச்சமடைந்த விமான சிப்பந்திகள் தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு பயத்துடன் தகவல் தந்தனர். இதையடுத்து அந்த விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் பின் தொடர்ந்து சென்று, பாதுகாப்புடன் தரையிறங்க வைத்தன.

நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதல்கள் நடந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்ட தினத்தை அமெரிக்கா நினைவுகூர்ந்து வருகிறது. இந் நிலையில் அமெரிக்காவுக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலையடுத்து அவர்களைப் பிடிக்க நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

சந்தேகத்துக்கிடமான பயணிகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்காவின் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அமெரிக்க விமான பைலட்டுகளும் சிப்பந்திகளும் அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளனர்.

இந் நிலையில் இன்று காலை சாண்டியாகோ நகரில் இருந்து டென்வர் வழியாக டெட்ராய்ட் சென்ற பிராண்டியர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்திலிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு ஆபத்து சமிக்ஞை தரப்பட்டது.

இந்த விமானத்தில் பயணித்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பயணிகள் நெடு நேரமாக டாய்லெட்டில் இருந்ததால் சந்தேகமடைந்த சிப்பந்திகள், விமானிகளை எச்சரிக்க, அவர்கள் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தந்தனர்.

இதையடுத்து அந்த விமானத்தை 2 எப்-16 ரக போர் விமானங்கள் சூழ்ந்தன. அந்த விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கும் வரை அதை போர் விமானங்கள் பின் தொடர்ந்தன. விமானம் தரையிறங்கியதும் கமாண்டோக்கள் விமானத்துக்குள் ஏறி, சந்தேகத்துக்குரிய 3 பயணிகளையும் கையில் விலங்கு மாட்டி இறக்கினர்.

அவர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். தரையிறக்கப்பட்ட விமானம் தனியாக ஒரு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு முழுமையாக பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அதில் வெடிகுண்டோ அல்லது சந்தேகத்துரிய பொருட்களோ ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து அந்தப் பயணிகளை போலீசார் விடுவித்துவிட்டனர்.

முன்னதாக நேற்று நியூயார்க் சென்று கொண்டிருந்த ஒரு விமானத்திலும் 3 பயணிகள் மீது சந்தேகம் எழுந்ததால் தரைக்கப்பட்டு நிலையத்துக்கு எச்சரிக்கை தரப்பட, அந்த விமானத்தையும் 2 எப்-16 போர் விமானங்கள் பின் தொடர்ந்தன. அந்த விமானம் தரையிறங்கும் வரை போர் விமானங்கள் உடன் வந்தன.

லாஸ் எஞ்செல்சில் இருந்து நியூயார்க் வந்த அந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 3 பயணிகள் அடிக்கடி டாய்லெட்டுக்குச் சென்றதால் விமான சிப்பந்திகள் சந்தேகமடைந்தாகத் தெரியவந்துள்ளது.

இந்தப் பயணிகளையும் போலீசார் விசாரணைக்குப் பின் விடுவித்துவிட்டனர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More