
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமச்சீர் கல்வியை அமல் செய்ய, சமச்சீர் கல்வி முறை அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் தலைமையில், கல்வியாளர்களிடம் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன்படி, 2010 - 2011 கல்வி ஆண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு வரையும், 2011-12 கல்வி ஆண்டில் எஞ்சிய வகுப்புகளுக்கும், சமச்சீர் கல்வியை அமல் செய்யலாம் என, முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, சமச்சீர் கல்விச் சட்டத்தை தள்ளுபடி செய்ய தொடரப்பட்ட வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், "பாடத்திட்ட நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். தனியார் பதிப்பகம் வெளியிடும் பாடப் புத்தகங்களை ஏற்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, பாடத்திட்ட நெறிமுறை வெளியிடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டு, கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி அமல்செய்யப்பட்டது.
சமச்சீர் கல்வி முறைக்கு, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தடை கோரி செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவுப்படி, இரண்டு முதல் 10ம் வகுப்புகளுக்கு (6ம் வகுப்பு தவிர) 200 கோடி ரூபாய் செலவில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, 2011-12ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு கட்டமாக பணிகளை மேற்கொண்டு, சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. சமச்சீர் கல்வியை கைவிடுவது, மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. சமூகநீதியை நிலைநாட்ட கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை தள்ளி வைப்பது, விவாதத்தைக் கிளப்பியுள்ளது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. சமச்சீர் கல்வி முறை ரத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில், வல்லுனர்களைக் கொண்டு ஆராய்ந்து கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை எளிதில் புறக்கணித்துவிட முடியாது. இதுபற்றி, அரசுக்கு அட்வகேட் ஜெனரல் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சமச்சீர் கல்வி முறையை எதிர்ப்பது, தி.மு.க., கொண்டு வந்த திட்டம் என்பதால் மட்டுமே என புரிந்து கொள்ள முடிகிறது. இதைத் தவிர வேறு காரணம் என்ன கூறமுடியும்? ஒருவேளை, தொல்காப்பியம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, ராமாயணம் பேன்ற இலக்கியங்களை இணைத்து, நான் எழுதிய பாடல், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் இருப்பதால் சமச்சீர் கல்வியை விரும்பவில்லையா? அப்படி இருந்தால், அந்தப் பாடலை எடுத்துவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment