Saturday, May 28, 2011

எதிர்க்கட்சியினரின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்: முதல்வர் உறுதி

சென்னை: ""எதிர்க்கட்சியினருக்கு குறைந்த இடங்களே கிடைத்திருந்தாலும், எதிர்க்கட்சியினர் கருத்துகளுக்கு மதிப்பளிக்க, ஆளுங்கட்சி தயங்காது,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயகுமாரை பாராட்டி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: மக்களாட்சி ஏற்பட்ட பின்பும், தனி மனித ஆதிக்கம் செலுத்தும் ஆட்சிகள் மக்களாட்சி போர்வையில், பல்வேறு இடங்களில் நடந்தே வந்துள்ளன. ஒரு குடும்பம் ஆதிக்கம் செலுத்தும், "குடும்ப ஆட்சி' கூட ஜனநாயகத்துக்கு விரோதமாக, மக்களின் பொது நன்மைக்கு எதிராக, மக்களாட்சி போன்ற தோற்றத்தில் அமைக்கப்படுவது தான். இந்த சபையில், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் உள்ளனர்; எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். ஒரு உண்மையான மக்கள் அரசு, எவ்வாறு, ஓட்டளித்தோருக்கும், ஓட்டு அளிக்காதோருக்கும், பொதுவாக செயல்படுகிறதோ, அதேபோல, இந்த சபையில் உள்ள, அனைத்து சாராருக்கும் பொதுவானவர், சபாநாயகர். சபையின் மாண்பையும், கண்ணியத்தையும், உறுப்பினர்களின் மதிப்பையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை, உறுப்பினர்கள் தங்களிடம் (ஜெயகுமார்) ஒப்படைத்திருக்கின்றனர்.

அமைச்சராக இருந்த அனுபவமும், எதிர்க்கட்சி உறுப்பினராக பணியாற்றிய அனுபவமும் தங்களுக்கு உண்டு. இரு சாராரின் மனநிலையை தாங்கள் அறிந்தவர் என்பதால், சபாநாயகராக, மிக நல்ல முறையில் பொறுப்பை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றுவிட்டது. எதிர்க்கட்சியினருக்கு மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன என்ற நிலை இருந்தாலும், எதிர்க்கட்சியினரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க, ஆளுங்கட்சி தயங்காது. சட்டசபை ஜனநாயகம் வாழவும், வளரவும், நாங்கள் உறுதுணையாக இருப்போம். கட்சி சார்பற்ற நடுநிலையை, இந்த சபையில் தாங்கள் கடைபிடிக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த சபையில் நடுநிலை எப்படி கடைபிடிக்கப்பட்டது என்பதை நன்கு அறிவீர்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றியது, சபை நடவடிக்கையையே சில மணித்துளிகளுக்கு ஒத்தி வைத்தது, "மைனாரிட்டி' என்ற சொல்லை சட்டசபை மரபுக்கு ஒவ்வாத சொல்லாக பாவித்தது, தமிழ் பண்பாட்டையே சீர்குலைக்கும் வகையில், வணக்கம் தெரிவித்தால் பதில் வணக்கம் கூட தெரிவிக்காதது என, மரபு மீறிய, விதிகளுக்கு முரணான பல சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.

"ம்' என்றால் வெளியேற்றம், "ஏன்' என்றால் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறை தான், கடந்த ஐந்து ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்டது. யாரையும் குற்றம்சாட்ட வேண்டும், குறை கூற வேண்டும் என்பதற்காக, இவற்றை சுட்டிக் காட்டவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனிதர்களை மதிக்கும் நல்ல பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் எடுத்துக் கூறுகிறேன். அவ்வாறே, சபையின் மாண்பை, தாங்கள் மீண்டும் நிலைநிறுத்துவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. தவறு நிகழ்ந்த பின் தண்டிப்பது என்ற தத்துவத்தை விட, தவறு நிகழாதபடி கண்டிப்பது என்பது மிகவும் சிறந்தது. நடுநிலை தவறாமல், நல்லதை பாராட்டி, தவறை தட்டிக் கேட்கும், சபாநாயகராக, நடுநிலை நழுவா நாயகராக, தாங்கள் விளங்க வேண்டும். தங்களுக்கு துணையாக, இதற்கு முன் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த தனபால், துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதுகலை பட்டம் பெற்று, ஏற்கனவே கூட்டுறவு, உணவுத் துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More