Saturday, May 28, 2011

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஃபதக்' நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் இப்னு அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத்

இப்னு உபாதா(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள் - இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. - அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) 'அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்' இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது. - அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணைவைப்பாளர்கள்,

யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் இப்னு உபை தன்னுடைய மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, 'எங்களின் மீது

புழுதி கிளப்பாதீர்' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) கூறினார்கள். பிறகு தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.
இதைக்கேட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் (நபி(ஸல்)

அவர்களிடம்) 'மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்' என்றார். இதைக்கேட்ட அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி), 'ஆம்!

இறைத்தூதர் அவர்களே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்' என்றார். இதைக் கேட்ட முஸ்லிம்களுக்கும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பாரமாக தாக்கிக்கொள்ளும் அளவிற்குச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்)

அவர்கள், மக்கள் மெளனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறி ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் 'சஅதே! அபூ ஹுபாப் - அப்துல்லாஹ் இப்னு உபை - சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்' என்றார்கள். ஸஅத் இப்னு

உபாதா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவரை மன்னித்துவிட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீதாணையாக! தங்களுக்குத் தான் அருளிய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்துவிட்டான். இந்த (மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கீரிடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு

வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்தால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்' என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கொப்ப இணைவைப்பவர்களையும்

வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.
அல்லாஹ் கூறினான்:
(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்கு முன்வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் ஏராளமான நிபந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்)

நீங்கள் பொறுமைகாத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால், அதுதான் உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (திருக்குர்ஆன் 03:186)
மேலும் அல்லாஹ் கூறினான்:
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக்காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த

பொறாமையினாலேயாகி. ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். திண்ணமாக! அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். (திருக்குர்ஆன் 02:109)
அவர்களின் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி(ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், இறைத்தூதர்(ஸல்)

அவர்கள் பத்ருப்போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலும் அவருடனிருந்த இணைவைப்பாளர்களும், சிலைவணங்கிகளும் '(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. எனவே, இந்த (இறை)த் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள்' என்று கூறி (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை எற்றனர்.புகாரி 4566

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More