Saturday, May 28, 2011

காயத்தை மறைத்தார் காம்பிர்: வெடித்தது புதிய சர்ச்சை

world cup 2011
பெங்களூரு: தோள்பட்டை காயத்துடன், மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில், காம்பிர் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
இந்திய அணியின் முன்னணி வீரர் காம்பிர். கோல்கட்டா ஐ.பி.எல்., அணிக்காக ரூ. 11.04 கோடிக்கு வாங்கப்பட்ட இவர்,கேப்டனாக செயல்பட்டார். தவிர, விரைவில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணியின் கேப்டனாகவும் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், பீல்டிங்கின் போது காம்பிரின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக எம்.ஆர்.ஐ., "ஸ்கேன்' எடுத்து பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மும்பை அணிக்கு எதிரான "பிளே ஆப்' போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு செல்லமாட்டார் எனவும் செய்திகள் வெளியாகின.
எதிர்பார்ப்புக்கு மாறாக, நேற்று முன்தினம் நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் காம்பிர் மீண்டும் களமிறங்கினார். இந்த போட்டியில் பந்தை "த்ரோ' செய்யும் போதெல்லாம், இவர் வலியால் அவதிப்பட்டார். இப்படி காயத்துடன் காம்பிர் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எதையும் மறைக்கவில்லை:
இதனிடையே காம்பிரின் காயத்தை, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) கோல்கட்டா அணி நிர்வாகம் மறைத்துவிட்டது என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்த அணியின் அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில்,"" உலக கோப்பை தொடரின் பைனலில், காம்பிருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் எங்களிடம் முன்னதாகவே தெரிவித்தார். அப்போதே "ஸ்கேன்' செய்து, சரியான நேரத்தில் விவரத்தை பி.சி.சி.ஐ.,க்கு அனுப்பி விட்டோம். தவிர, கோல்கட்டாவில் விளையாடிய போது வலி ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கையாக "ஸ்கேன்' செய்து, அதையும் அனுப்பியுள்ளோம். பி.சி.சி.ஐ.,யிடம் நாங்கள் மறைப்பதற்கு ஒன்றுமில்லை,'' என்றார்.
ஓய்வு தேவை:
காம்பிரின் காயம் குறித்து கோல்கட்டா அணியின் "பிசியோதெரபிஸ்ட்' ஆன்ட்ரூ லெய்பஸ், பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இதில்,"" உலக கோப்பை தொடர் முடிந்து, ஐ.பி.எல்., தொடருக்காக கோல்கட்டா வந்த காம்பிர், தோள்பட்டை வலி குறித்து தெரிவித்தார். இந்த காயம் தற்போது அதிகமாகியுள்ளதால் குறைந்தது இவருக்கு 4 முதல் 6 வார கால ஓய்வு தேவைப்படும்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெய்னா கேப்டன்?
காயம் அதிகமாகியுள்ளதால் வரும் 1ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணியில் காம்பிர் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது. அணியின் புதிய கேப்டனாக ரெய்னா அல்லது யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படலாம். தவிர, இங்கிலாந்து தொடரிலும் காம்பிர் இடம் பெறுவது சந்தேகம் தான்.
ஏற்கனவே சீனியர் வீரர்கள் சச்சின், தோனி, ஜாகிர்கானுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சேவக்கும் பங்கேற்கவில்லை. தற்போது காம்பிரும் இல்லாமல் இருப்பது, இந்திய அணியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.
புதிய கேப்டன் 
காம்பிர் சிக்கல் குறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறுகையில்,"" காம்பிர் காயம் குறித்து லெய்பஸ் அறிக்கை எங்களுக்கு வந்தது. இதை ஆராய்ந்து வருகிறோம். ஒருவேளை அவர் உடல் தகுதி பெறவில்லை எனில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நீக்கப்படுவார். இவருக்கு பதில் புதிய வீரர் தேர்வு செய்யப்படுவார்,'' என்றார்.
தேசத்தைவிட பணம் முக்கியம்
உலக கோப்பை தொடரின் போதே காயம் அடைந்த காம்பிர், தேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஐ.பி.எல்., தொடரை புறக்கணித்து இருக்க வேண்டும். போதிய ஓய்வு எடுத்திருந்தால் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், காயத்தை மறைத்து பணத்துக்காக ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றார். இதனால், தேசத்துக்காக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊக்கமருந்து சர்ச்சை
தோள்பட்டை வலிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக, வலி நிவாரணிகளை காம்பிர் எடுத்துக் கொண்டுள்ளார். இதற்காக "கோர்டிகாஸ்டெராய்டு' என்ற ஊக்க மருந்தை உபயோகித்துள்ளார். இதை பயன்படுத்துவதற்கு வீரர்கள், தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்திடம் (என்.ஏ.டி.ஏ.,) அனுமதி வாங்க வேண்டும். ஏனெனில் இந்த மருந்து, உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் போர்டு, ஊக்கமருந்து தடுப்பு மையத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாததால், எவ்வித சிக்கலும் வராது என்றே தெரிகிறது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More