Saturday, May 28, 2011

இந்தி திரைப்படம் தயாரிக்க விரும்பினேன்: ஹெட்லி தகவல்

சிகாகோ: பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டை கதாநாயகனாக வைத்து, ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டதாகவும், ஆனால், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மும்பைத் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி டேவிட் கோல்மென் ஹெட்லி கூறியுள்ளார்.

மும்பைத் தாக்குதல் பற்றிய வழக்கு, தற்போது சிகாகோவில் நடந்து வருகிறது. நான்காவது நாளான நேற்று முன்தினம் அவர், கோர்ட்டில் கூறியதாவது: பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்பினேன். இதற்காக அவரை தொடர்பு கொண்டேன். நான் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். நான், அவரது படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பதாகவும் தெரிவித்தேன். அதன்பின், பாகிஸ்தானில் பழங்குடியினங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து பார்க்கும்படியும், அவை சினிமாவுக்கு ஏற்ற இடங்களாக இருக்கும் என்றும் நான் அவரிடம் கூறினேன். எனினும், எனது இத்திட்டத்தை லஷ்கர்-இ-தொய்பா ஏற்றுக் கொள்ள மறுத்து, எதிர்த்தது. அதனால், ராணாவும் எனது திட்டத்துடன் இணைந்து செயல்பட முடியவில்லை. லஷ்கரில் நான் பெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் பார்த்தால், என் இந்த திட்டம் அதன் கொள்கைகளுக்கு எதிரான ஒன்று தான். இவ்வாறு ஹெட்லி தெரிவித்தார். ராகுல் பட்டை பாகிஸ்தானுக்கு ஹெட்லி அழைத்தது, அவரை கடத்த அல்லது கொல்லத் தான் என்று, அரசுத் தரப்பு வக்கீல் வாதிட்டார். அதை ஹெட்லி மறுத்து, "நான் அவரை விருந்தினராகத்தான் அழைத்தேன். அவரை கடத்துவதற்காக அழைக்கவில்லை' என்றார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More