skip to main | skip to sidebar
உண்மையான உலகம்
  • முகப்பு
  • இஸ்லாம்
    • ஹதீஸ்
    • திருக்குர் ஆன்
    • தமிழ் திருமறை
  • செய்திகள்
    • தினசரி செய்திகள்
    • உலகசெய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • இஸ்லாமிய செய்திகள்
  • இஸ்லாமிய அறிவுரைகள்
  • அறிவு
    • பொது அறிவு
    • இஸ்லாமிய பொதுஅறிவு
    • உயிர் காக்க உதவுங்கள்
  • தொலைக்காட்சி
    • இஸ்லாமிய நிகழ்படம்
    • நகைச்சுவை நிகழ்படம்
    • சினிமா நிகழ்படம்
  • அரசியல்
  • வினோதங்கள்
  • ஆரோக்கியம்
  • வேலைவாய்ப்பு
  • சினிமா
  • சமையல்குறிப்பு
  • வர்த்தகம்
  • நகைச்சுவை

Thursday, January 9, 2014

'ஜில்லா'வுக்கு தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸாகுமா?

9:58 AM  Unknown  No comments

சென்னை: ஜில்லா படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

'ஜில்லா'வுக்கு தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸாகுமா?

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

 தெலுங்கில் வெளியான பகீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட தயாரித்துள்ளேன். ஜில்லா என்ற பெயரை 2008ல் முறைப்படி பதிவு செய்துள்ளேன். படத்தை வெளியிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்கும் ஜில்லா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

 

Read More

Wednesday, January 8, 2014

தேர்தல் வியூகம்: பிரியங்காவை முன்நிறுத்தும் காங்கிரஸ்

11:07 AM  Unknown  No comments



'இனி பிரதமராகும் எண்ணம் இல்லை, பிரதமராகும் அனைத்து தகுதியும் ராகுல் காந்திக்கு உள்ளது' என்று கூறி ராகுலுக்கு வழி விட்டு மன்மோகன் சிங் ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில், இப்போது பிரியங்காவும் அரசியல் களத்தில் தீவிரமாக தலை காட்டத் தொடங்கியுள்ளார்.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் திடீரென பிரியங்கா வதேரா பங்கேற்றது, இதற்கான முதல் அடி என்று கூறப்படுகிறது.
பிரியங்காவின் இந்த பிரவேசம், வரும் மக்களவைத் தேர்தலையொட்டி அவர் தீவிர அரசியலில் ஈடுபடக்கூடும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
வழக்கமாக, தனது தாயார் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் மட்டுமே பிரியங்கா வதேரா இதுவரை பிரசாரம் செய்து வந்துள்ளார். ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் ரேபரேலியில் தவறாது ஆஜராகிவிடும் அவர் தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயாருக்காக வாக்கு சேகரிப்பார்.
ஆனால், உ.பி.யில் காங்கிரஸ் கட்சி பலம் இழந்துவிட்டதாக விமர்சனத்துக்குள்ளாகி வருவது, 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு என பல்வேறு சூழலை கருத்தில் கொண்டு பிரியங்கா காந்தி தீவிர அரசியல் களத்தில் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் நலத் திட்டங்களை மக்களுக்குச் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் பிரச்சாரத்தை தீவிரப் படுத்த இருக்கும் காங்கிரஸ், இதற்காக மத்திய அமைச்சர்கள் சிலரையும் கட்சிப் பணியில் சேர்க்க இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
ஏற்கெனவே மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கட்சிப் பணிகளுக்காக அமைச்சர் பதவியைத் துறந்தார். அப்போதே இன்னும் இந்த பட்டியல் நீளும் என கூறப்பட்டது.
அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அவர் கூட்டத்தில் பங்கேற்றதில் வியப்பேதும் இல்லை என்று ஜனார்தன் துவிவேதி கூறியிருந்தாலும், பிரியங்கா கலந்து கொண்ட காலச் சூழல் அவர் தீவிர அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் வியூகம்:
வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், பிரியங்கா காந்திக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர, தேர்தலில் போட்டியிட ஏதுவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும். ஒரு சில பொதுச் செயலாளர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக அந்த இடத்தில் ராஜ்யசபா எம்.பி.க்கள் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாநில வாரியாக கட்சியை பலப்படுத்தும் பொருட்டு, சில மாநில காங்கிரஸ் தலைமைகளிலும் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு வியூகங்களை வகுத்து காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

Read More

திருப்பூர்: ஒரு குடம் நீர் ரூ.5 - தாகத்தில் நாவிதன்புதூர்!

11:06 AM  Unknown  No comments

தண்ணீரின்றி தவிக்கிறது திருப்பூர் மாவட்டத்தின் ஒரு கிராமம். குடம் தண்ணீரை 5 ரூபாய்க்கு வாங்கி வாழ்நாளை கழித்து வருகின்றனர். இந்த நிலை, இன்று நேற்றல்ல. பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது என்கின்றனர் இக்கிராம மக்கள். தண்ணீரின்றி தாகம் தணிக்க முடியாமல் மிகவும் நொந்துபோயுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நந்தவனம்பாளையம் ஊராட்சியில் உள்ளது நாவிதன்புதூர். இங்கு 160 குடும்பங்கள் கடந்த 35 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. இப்பகுதி மக்கள், கடந்த பல ஆண்டுகளாக தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அதுவும், கடந்த சில மாதங்களாக மழை இல்லாதாததால், ஆழ்குழாய் நீரும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வறண்டுவிட்டது. எனவே, வேலைக்கு கூட செல்லமுடியாமல், தினமும் தண்ணீர் பிடிக்கவே 4 முதல் 5 கி.மீ., பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அன்றாடமும் அவதி
‘டிராக்டரில் கொண்டுவந்து விற்கப்படும் தண்ணீரை, குடம் ரூ.5க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். கடந்த பல மாதங்களாக டிராக்டர் தண்ணீரும் வரவில்லையென்றால், கால்நடைகளைப் போல் மடிந்திருப்போம். இதுவரை மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுகொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. குழந்தைகள், பெண்கள் என ஒட்டுமொத்த கிராமமும் அன்றாடம் தண்ணீரின்றி மிகுந்த அவதிப்படுவதாக’ அப்பகுதி மக்கள்.
நாவிதன்புதூர் பிரிவு வரை வரும் கொடுமுடி கூட்டு குடிநீர்த்திட்டம் ஒன்றரை கி.மீ.தூரத்திலுள்ள நாவிதன்புதூருக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். நாவிதன்புதூர் பிரிவிற்கு கொடுமுடி குடிநீர்த்திட்டம் வந்தபோது, நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். எங்களுக்கும் எப்படியும் தண்ணீர் கிடைக்கும் என கனவு கண்டோம். கடைசியில் அது கானல்நீரானது. குடிநீருக்காக பல ஆண்டுகளாக போராடிக் கொண்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இக்கிராம மக்கள் காலிக் குடங்களுடன், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாகக் கொடுத்தனர். மக்களின் நெடுநாள் தாகத்தை மாவட்டநிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தீர்க்குமா? அல்லது தாகத்துடனேயே வாழ வைக்குமா?

Read More

வரலாறு எப்படிக் கருணை காட்டும் சிங் அவர்களே?

11:05 AM  Unknown  No comments



பிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்று செய்த முழக்கம், வரலாற்றில் அழியா இடம்பெற்றுவிட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக அன்றைய பாட்டிஸ்டா சர்வாதிகார அரசு தன்னைத் தண்டித்தாலும் அதற்கெதிரான தனது போராட்டத்தை எதிர்காலத் தலைமுறையினர் புரிந்துகொள்கிறபோது, தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தான் விடுவிக்கப்படுவேன் என்ற காஸ்ட்ரோ வின் நம்பிக்கையை வெளிப்படுத்திய வாசகம் அது.
வரலாற்றைக் கட்டுப்படுத்துபவர்கள்
வரலாற்றில் இன்று போற்றப் படுகிறவர்களில் பலர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளப்பட்டதேயில்லை; தாங்கள் வாழ்ந்த காலத்தில் போற்றப்பட்டவர்களில் பலர் வரலாற்றில் அடிக்குறிப்பாகக்கூட இடம்பெற்றதில்லை. வரலாற்றில் போற்றப்படுகிறவர்களே போற்றுதலுக்குரியவர்கள் என்பதல்ல இதன் அர்த்தம். ஏனெனில், ஜார்ஜ் ஆர்வெல் கூறியதைப் போல, “நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்துகிறவர்களே கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்.” அதாவது, அந்தந்தக் காலகட்டத்தின் போது மேலாண்மை செலுத்தும் அறிவுஜீவி வர்க்கத்தினரால் வரலாறு கட்டமைக்கப்படுகிறது. ஆனால், வரலாறும் நிரந்தரமானது அல்ல; மாறாக, அது புதிய தரவுகளின் அடிப்படையில் காலந்தோறும் தொடர்ச்சியாக மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒரு மனிதன் அல்லது நிகழ்வுபற்றிய சமகால மதிப்பீட்டுக்கும் வரலாற்றின் மதிப் பீட்டுக்கும் பல சமயங்களில் பெரும் வேறுபாடு காணப்படுவதற்கு இதுவே காரணம். ஆகவே, தங்கள் சமகாலத்தவரால் தூற்றப்படுகிற அல்லது புறக்கணிக்கப்படுகிற பலரும் வரலாற்றைத் துணைக்கு அழைப்பதில் ஆச்சர்யமில்லை.
வரலாற்றின் முதல் வரைவு
சமகாலத்திய ஊடகங்களுடன் ஒப்பிடுகிறபோது வரலாறு தன்னிடம் கருணையுடன் நடந்துகொள்ளும் என்று சமீபத்தில் ஊடகவியலாளர்களுடனான தனது சந்திப்பின்போது பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். நேர்மைத் திருவுரு என்று ஊடகங்களால் தொடக்க காலத்தில் வர்ணிக்கப் பட்ட மன்மோகன் சிங், இன்று ஊழலுக்குத் துணைபோனவர் என்று வர்ணிக்கப்படுகிறார். மிகச் சிறந்த பொருளாதாரப் பேராசிரியராக, சிறந்த நிர்வாகியாக அறியப்பட்ட அவர், இந்தியாவின் ஆக மோசமான பிரதமர் என்று வர்ணிக்கப்படுகிற நிலைக்கு இன்று தாழ்ந்திருக்கிறார். பத்திரிகைச் செய்திகள் வரலாற்றின் கரடுமுரடான முதல் வரைவு என்று சொல்லப்படுகிறது. முதல் வரைவில் செய்யப்பட்ட மதிப்பீடானது, மேலும் மேலும் ஆய்வுகளால் பட்டைதீட்டப்பட்ட இறுதி வரைவில் முற்றிலுமாக மாறுதலுக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது என்றாலும், இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சி யுகத்தில் அது மிகவும் குறைவு. மன்மோகன் சிங் குறித்த இன்று செய்யப்படும் ஒரு முழுமையான, நேர்மையான மதிப்பீடே வரலாற்றின் மதிப்பீடாகவும் இருக்கும்.
சிங் ஆட்சி: ஒரு மதிப்பீடு
சிங்கின் ஆட்சியை இரண்டு தளங்களில் ஒருவர் மதிப்பீடு செய்யலாம்: ஒன்று, அவர் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகள். இரண்டு, அவரது ஆட்சி நிர்வாகம். இன்று ஊடகங்களால் அவர் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்கள் அனைத்தும் அவரது நிர்வாகத்தின் நேர்மையின்மைகுறித்ததே தவிர, அவரது பொருளாதாரக் கொள்கைகள் குறித்ததல்ல. தனியார்மயமாக்கல் மற்றும் தாரளமயமாக்கல் ஆகிய அவரது பொருளாதாரக் கொள்கைகளுக்கும் ஊழலுக்கும் இருக்கும் நேரடி உறவைப் பற்றி ஊடகங்கள் ஒருபோதும் விவாதித்ததேயில்லை.
சிங்-மோடி: என்ன வேறுபாடு?
அலைக்கற்றை ஊழலாக இருந்தாலும் சரி, நிலக்கரிச் சுரங்க ஊழலாக இருந்தாலும் சரி, ஊடகங்களின் கவனம் குவிக்கப்பட்டது அவற்றில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது மட்டுமே. அவற்றினால் பெரும் லாபம் ஈட்டிய முதலாளிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் ஊடகங்களினால் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. ஊடகங்களுக்கும் சரி; எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்கும் சரி... சிங்கின் பொருளாதாரக் கொள்கைகளுடன் எந்த முரண்பாடும் இல்லை. ஆட்சியைப் பயன்படுத்தித் தானோ தனது உடனடிக் குடும்பத்தினரோ சொத்து ஏதும் சேர்க்கவில்லை என்ற நேர்மைக்கான ஆகக் குறுகிய வரையறையில் மட்டுமே சிங்கும் நரேந்திர மோடியும் நேர்மையானவர்கள்.
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது, சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளுக்கே எதிரான குறுங்குழுவாத முதலாளித்துவத்தை (குரோனி கேப்பிடலிஸம்) வளர்ப்பது, சாதாரண மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்து விட்டு, பெருநிறுவனங்களின் நலன் களுக்காகத் திட்டங்கள் தீட்டுவது ஆகியவை நேர்மையின்மையாகப் பார்க்கப்படுவதேயில்லை.
நேர்மையான ஆட்சிக்கான இலக்கணங்களில் முதன்மையானவை எவையோ அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை என்பதுதான் சோகம். இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் சிங் மட்டுமல்ல, மோடியும் நேர்மையின்மைக்கான உதாரண புருஷர்கள் என்பது புரியும். கிருஷ்ணா கோதாவரி படுகையில் எரிவாயு எடுக்கும் விஷயத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சிங் அரசாங்கம் அளித்த, நாட்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய அளவற்ற சலுகைகளை மோடியோ அல்லது ஊடகங்களோ ஒருபோதும் கேள்விக்குட்படுத்தியதில்லை.
முகவர், பிறகு பிரதமர்
நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சரானபோது, உலக வங்கி மற்றும் பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கொள்கைகளையும் ஆலோசனைகளையும் செயல்படுத்தும் ‘முகவர்’ஆக சிங் இருந்தார். பின்னர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பிரதமரானபோதும் அதே கொள்கைகளைப் பின்தொடர்ந்தார். தனியார்மயமாக்கலின் பெயராலும் தாரளமயமாக்கலின் பெயராலும் குறுங்குழுவாத முதலாளித்துவம் ஊக்குவிக்கப்படுகிறபோது, ஊழல் பெருக்கெடுப்பது தவிர்க்க முடியாதது. அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்த ஊழல்களால் பலன்பெறுவது பெருமளவு தடுக்கப்பட்டு, எல்லா லாபங்களும் பெருநிறுவனங்களுக்கே சென்றிருக்கும் பட்சத்தில் சிங் நேர்மையின் திருவுருவ மாக ஊடகங்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டிருப்பார்.
இரண்டு நல்ல விஷயங்கள்
சிங்கின் ஆட்சியில் நடந்த இரண்டு நல்ல விஷயங்கள் என்றால், அவை மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமும் தகவலறியும் உரிமைச் சட்டமும்தான். இவை இரண்டையுமே சிங் மனமுவந்து நடைமுறைப்படுத்தவில்லை என்பதே உண்மை. முதலாவது, இடதுசாரிக் கட்சிகளும் சிந்தனையாளர்களும் தந்த அழுத்தத்தால் உருவானது. பின்னது, அருணா ராய், நிகில் டே, கேஜ்ரிவால் போன்றவர்கள் தந்த அழுத்தத்தால் உருவானது. இவை இரண்டையும் சோனியா காந்தி வலுவாக ஆதரித்ததால் அவற்றை சிங் அரசு அமல்படுத்தியது.
எந்த அடிப்படையில் கருணை?
ஆக, எந்த அடிப்படையில் வரலாறு தன்னிடம் கருணையாக நடந்துகொள்ளும் என்று சிங் எதிர்பார்க்கிறார்? 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்துவரும் வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவின் இன்றைய அபார வளர்ச்சிக்கு (எதிர்காலத்தில் அப்படி நடக்கும்பட்சத்தில்) அடித்தளமாக அமைந்தது 1990-களில் சிங் நடைமுறைப்படுத்திய தனியார்மயமாக்கல் கொள்கைகளும் தாரளமயமாக்கல் கொள்கைகளுமே என்று கூறுவார்கள் என்ற நம்பிக்கையிலா அல்லது இந்தியாவின் மின்சாரத் தட்டுப்பாடு ஒழிந்து, உபரி மின்சார உற்பத்தி சாத்தியமானதற்குக் காரணம், சிங் அமல்படுத்திய இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தமே என்று கூறுவார்கள் என்ற நம்பிக்கையிலா? இவை இரண்டும் இல்லை.
நீங்கள் செயலாற்றத் தவறிவிட்டீர்கள் என்ற நிலையில், நீங்கள் விட்டுச்செல்லும் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது, ‘‘சமகாலத்திய ஊடகங்களுடன் அல்லது எதிர்க்கட்சிகளுடன் ஒப்பிடுகிறபோது, வரலாறு என்னிடம் கருணையுடன் நடந்துகொள்ளும் என்று உண்மையாகவே நம்புகிறேன். கேபினெட் அமைப்பிலான அரசாங்கத்தில் நடைபெறும் விஷயங்கள் அனைத்தையும் நான் வெளியே சொல்ல முடியாது. சூழ்நிலைகளையும் கூட்டணி ஆட்சியின் நிர்ப்பந்தங்களையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, நான் என்னால் முடிந்த அளவு சிறப்பாகவே செயல்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
செஞ்சோற்றுக் கடனா, பதவியா?
எதிர்காலத்தில் சிங்கின் பத்தாண்டு கால ஆட்சியைப் பற்றி மேலும் பல உண்மைகள் வெளிவருகிறபோது, பின்வரும் இரண்டு விதங்களில் அவர் மதிப்பிடப்படலாம்: மக்கள் செல்வாக்கு இல்லாத தன்னைப் பிரதமராக்கிய சோனியா காந்தியிடம் பட்ட செஞ்சோற்றுக் கடன் தீர்க்க எல்லா ஊழல்களையும் மூடி மறைக்கும் செயலுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டார் அல்லது ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் பதவியைத் துறந்துவிட்டுச் செல்லும் வாய்ப்பிருந்தும் பதவி ஆசையின் காரணமாக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்.
முதலாவது மகாபாரதத்தில் துரியோதனனுக்காக கர்ணன் செய்த தியாகத்தை நினைவுபடுத்துகிறது என்றால், இரண்டாவது, மகன் மீதான (இங்கு பதவி மீதான) பாசத்தின் காரணமாக துரியோதனனின் எல்லாச் செயல்களையும் பொறுத்துக்கொண்ட திருதராஷ்டிரன் நிலையை நினைவு படுத்துகிறது. முதலாவது வகையில், சிங் மதிப்பிடப்பட்டால் அதுவே வரலாறு அவரிடம் காட்டும் கருணையாக இருக்கும்.

Read More

காவல் நிலையத்தில் சிறுவனின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது: நீலாங்கரையில் பரபரப்பு சம்பவம்

11:04 AM  Unknown  No comments

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமீம் அன்சாரி.


துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமீம் அன்சாரி.
நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவனின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. சிறுவனை பயமுறுத்துவதற்காக கழுத்தில் துப்பாக்கியை வைத்து காவல் ஆய்வாளர் மிரட்டியபோது துப்பாக்கி வெடித்ததாக கூறப்படுகிறது.
சென்னை நீலாங்கரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் சபீனாபேகம். இவரது மகன் தமீம்அன்சாரி (16). 6-ம் வகுப்புடன் படிப்பை முடித்த அன்சாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்துவந்தாராம். நீலாங்கரை காவல் துறையினர் பலமுறை அவரைப் பிடித்து எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டருகே இருந்த ஒரு கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த சிறுவன் தமீம்அன்சாரியை நீலாங்கரை போலீஸார் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அங்கு சிறுவனிடம் பல காவலர்கள் விசாரணை நடத்தினர். ஆனால் தமீம்அன்சாரி, 'நான் திருடவில்லை' என்று திரும்பத் திரும்ப கூறினாராம். இதனால் நொந்துபோன போலீஸார் முடிவில் நீலாங்கரை குற்றவியல் ஆய்வாளர் புஷ்பராஜிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.
ஆய்வாளர் புஷ்பராஜிடமும், 'நான் திருடவில்லை' என்ற பதிலையே மீண்டும் மீண்டும் கூறினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அன்சாரியின் கழுத்தில் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென துப்பாக்கி வெடித்து அன்சாரியின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. கழுத்தில் காயம்பட்ட சிறுவன் ரத்தம் வழிந்த நிலையில் காவல் நிலையத்துக்குள்ளேயே மயங்கி விழுந்தார். விபரீதத்தை உணர்ந்த போலீஸார் அன்சாரியை உடனே ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கழுத்தில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அன்சாரி நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார்.
இந்த சம்பவத்தை காரணம் காட்டி சில அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதனால் நீலாங்கரை காவல் நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் புஷ்பராஜிடம் அடையாறு துணை ஆணையர் சேவியர் தன்ராஜ், உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Read More

பொங்கல் பண்டிகைக்கு 13,028 சிறப்பு பேருந்துகள்: முதல்வர்

11:02 AM  Unknown  No comments


பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் 13,028 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், அவர்கள் எவ்வித சிரமமும் இன்றிசௌகரியமாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 10.1.2014 அன்று 600 சிறப்புப் பேருந்துகளும், 11.1.2014 அன்று 1325 சிறப்புப் பேருந்துகளும், 12.1.2014 அன்று 1175 சிறப்புப் பேருந்துகளும், 13.1.2014 அன்று 339 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.
14.1.2014 அன்று பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இதே போன்று சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து, 10.1.2014 அன்று 345 சிறப்புப் பேருந்துகளும், 11.1.2014 அன்று 750 சிறப்புப் பேருந்துகளும், 12.1.2014 அன்று 760 சிறப்புப் பேருந்துகளும், 13.1.2014 அன்று 1220 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.
மொத்தத்தில் 10.1.2014 முதல் 13.1.2014 வரை 6,514 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.மேலும், நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையினை உறவினர்கள்,நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிட வசதியாக, இதே அளவிலான சிறப்புப் பேருந்துகளை 16.1.2014 முதல் 19.1.2014 வரை இயக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி 300 கி.மீ. தூரத்திற்கு மேல் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கு, இணையதள பயணச் சீட்டு முன்பதிவு முறையில், www.tnstc.in என்ற இணையதளம் மூலம், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும் ஏற்பாடுகள் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஜனவரி14 முதல் 16 வரை சென்னை மற்றும் புறநகர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு, கோவளம், எம்.ஜி.எம்., மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண்: 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பண்ணைப் பள்ளிகளும் கள்ள மௌனமும்

11:01 AM  Unknown  No comments

கோப்புப் படம்
பெரும்பாலும் மௌனத்தை அடைகாப்பதும், அடைகாத்த அத்தனை மௌனங்களுக்கும் சேர்ந்தார்ப்போல் எப்போதாவது முழங்கிவிட்டு ஓய்வதுமாக இந்த சமூகம் மாறிவிட்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா சீரழிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த இந்தியாவும் பதறியது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அரசும் தன் பங்கிற்கு நிர்பயாவை சிங்கப்பூருக்கு சிகிச்சையளிக்க அழைத்துச் சென்றது. குற்றவாளிகளில் ஒருவன் இறந்துபோகவும் சிறைச்சாலை எளிதில் வாய்ப்பளித்தது. வழக்கின் தீர்ப்பு கூட விரைந்து வெளியானது.
அதே வாரத்தில் தூத்துக்குடியில் வண்புணர்வு செய்யப்பட்டு கொலையான ஓர் ஏழைப் பள்ளி மாணவி குறித்து பெரிய அதிர்வலை ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும். டெல்லி சீரழிவுக்கு தமிழக வீதிகளில் கருப்பு உடையணிந்து தட்டிகளைப் பிடித்து நடந்த மகளிர் அமைப்புகள்கூட பெரிதாகக் குரல் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். இதோ இப்போது, காரைக்காலில் ஒரு பெண் குழுவாக வண்புணர்வு செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டதில்கூட, அங்கிருந்த காவல்துறை பெண் உயரதிகாரி நேரடியாக தலையிட்டு எடுத்த கைது நடவடிக்கைகளால் ஓரளவு கவனம் பெற்று 'உச்' கொட்ட வைத்திருக்கிறது.
சென்னையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், வகுப்பறையில் ஆசிரியை ஒருவரை குத்திக் கொலை செய்தபோது ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுகளால், வெகுண்டு பதற்றப்பட்டது, பயம் கொண்டது. சில மாதங்கள் கழித்து தூத்துக்குடியில் கல்லூரி முதல்வரை மூன்று மாணவர்கள் வெட்டிக் கொலை செய்தபோது அய்யய்யோவென பதற்றப்பட்டது, ஆனாலும் அந்தப் பதற்றம் வகுப்பறை ஆசிரியை கொலை அளவுக்கு பதற்றமில்லை. ஏனெனில் ஒன்பதாம் வகுப்பு மாணவனே கொலை செய்யும்போது, கல்லூரி மாணவன் செய்வது சாதாரணம் எனும் மனப்போக்கு வந்திருக்கலாம்.
வன்புணர்வு மற்றும் வகுப்பறை வளாகக் கொலைகளுக்கு நிகராக, தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பவை மாணவர்களின் தற்கொலைகள். அதிலும் அவ்வளாக வெளியில் தெரிந்தும் தெரியாமலும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பவை தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே நிகழும் தற்கொலைகள். இந்த மாதிரி படிப்புச் சுமையும் வெகு அரிதாக வயிற்றுவலி அல்லது குடும்பச் சிக்கல்கள் மட்டும்தான் தற்கொலைக்குக் காரணமா?
ஒப்புக்கொண்டாலும் சரி... ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, இன்றைய தமிழகத்தில் நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் தான் 11, 12-ம் வகுப்பு கல்விக்கான சிறப்பிடமாக, புகலிடமாகத் திகழ்கின்றன. 10 வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் நாளுக்கு முந்தைய இரவு பெற்றோர்களால் பள்ளி வளாகம் நிரம்பி வழியும். அவர்களுக்காக ஸ்பெஷல் கடைகள் தோன்றுவதாகக் கூட கேள்விப்படுவதுண்டு. அதே நாமக்கல்தான் கோழிப்பண்ணைகளுக்கும், முட்டைகளுக்கும் புகழ் வாய்ந்தது என்பது ஆச்சரியமான ஒற்றுமை.
ஆண்டுதோறும் மாநில அளவிலான இடங்களை இந்தப் பகுதி பள்ளிகள் எப்படியோ பிடித்துவிடுகின்றன. பத்தாம் வகுப்பில் 470-490 க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை சலுகைகள் கொடுத்தும், கட்டணம் இன்றியும், ஊக்கத் தொகை கொடுத்தும் தங்கள் பள்ளிக்கு பிடித்துவரும் நிர்வாகத்தின் நோக்கம் 12-ம் வகுப்பில் மாநில அளவிலான தரவரிசையில் ஓரிரு இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்பதுதான். அப்படி ஒருமுறை பிடித்துவிட்டால் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு சேர்க்கை நிரம்பி வழியும், கட்டணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்.
பெற்றோர்களுக்கும் மகனாக, மகளாக இருந்த பிள்ளைகள் 8-ம் வகுப்பு தாண்டியவுடன் மாணவனாக, மாணவியாக மாறிவிடுகின்றனர். பிள்ளைகளின் விருப்பம் என்னவாக இருக்கிறது என்பது பெரும்பாலும் நீர்த்துப்போய், என்ன செய்தாவது 10-ம் வகுப்பில் 470, 480 மதிப்பெண்கள் எடுத்து, 12-ம் வகுப்பில் பொறியியல், மருத்துவத்திற்கு தேர்வு பெறும் மதிப்பெண்ணை எடுக்கவைக்கும் - தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும் - ஒரு 'பண்ணைப் பள்ளி'யில் சேர்த்துவிட வேண்டும். 'பண்ணைப் பள்ளி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் இந்த இடத்தில் எனக்கு தயக்கமும், தடுமாற்றமும் ஏதுமில்லை.
கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கெடுத்த, குறிப்பாக நாமக்கல் மாவட்டப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் கூறியதைக் கேட்டபோது இரத்தம் உறைந்துபோனது. ஒரு மதிப்பெண் வினாவிற்கு ஏ,பி,சி,டி என நாலில் ஒரு பதிலைத் தேர்ந்தெடுக்கையில் கேள்வியைப் பார்ப்பதற்கு முன் கீழிருக்கும் நான்கு பதில்களைப் பார்த்து அதில் ஒன்றை டிக் செய்துவிட்டுத்தான் கேள்விகளையே பார்ப்போம் என்ற அளவுக்கு மனப்பாடம் செய்யவைக்கப்படுகின்றனர் என ஒரு மாணவர் சொல்கிறார். சாப்பிடும் அறை உட்பட விடுதிகளின் எல்லாத் தூண்களிலும் பதில்கள் ஒட்டப்பட்டிருக்கும் என்பதும், விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒரு மாணவன் விடைகளைக் கண்டே தீரவேண்டும் என்ற நிலையில் உட்படுத்தப்படுகின்றனர்.
12-ம் வகுப்பில் 1050 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த ஒரு பெண் விஷுவல் கம்யூனிக்கேசன் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார். முதல்நாள் வகுப்பறையில், "விஷுவல் கம்யூனிகேசன் படிப்பைத் தேர்தெடுத்தற்கான காரணம் என்ன!?" என்ற கேள்விக்கு பதில் எழுதத் தெரியாமல் முக்கால் மணி நேரம் முழித்திருக்கிறார். காரணம் "இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டால் அது குறித்து யோசிக்கும் தன்மைகூட அற்றுப் போயிருந்தேன்" என்கிறார்.
படிப்பு என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திக்கும் சூழல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முடக்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் சமயத்தில் உட்சபட்ச அழுத்தங்களுக்கும் ஆட்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு வெளியேறும் மாணவர்களின் நிலையை, நாமக்கல் மாவட்டத்தின் புகழ் பெற்ற கோழிப் பண்ணைகளோடு ஒப்பிடத்தான் தோன்றுகிறது. குஞ்சு பொறித்து குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட எடையை கறிக்கோழி எட்டிவிட வேண்டும் என்பது மட்டுமே பண்ணையாளர்களின் நோக்கம். அப்படி எடை கொண்டுவர என்ன மாதிரியான உணவு, மருந்துகள் அளிக்கப்படுகின்றன என்பது குறித்து பண்ணையாளர்களுக்கும், அந்தக் கறியை வாங்கி ருசிப்பவர்களுக்கும் கவலையிருப்பதில்லை. அப்படிப்பட்ட இறைச்சியை உண்பவர்கள் புதிது புதிதான நோய்களுக்கும் வாதைகளுக்கும் உள்ளாகும் சூழல் பெருகி வருவதையும் மறுப்பதற்கில்லை.
இந்தப் பண்ணைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எப்படியாவது நல்ல மதிப்பெண் வாங்கி சிறந்த கல்லூரிகளில் கட்டணமின்றி இடம் பிடிக்க வேண்டும் என பெற்றோரும், எப்படியாவது மாநில அளவிலான தரவரிசையில் இடம் பிடிக்க வேண்டும் என நிர்வாகமும் இணைந்து தரும் நெருக்கடிகளில், சிதறும் மாணவர்களின் கொடியதொரு முடிவாக சில நேரங்களில் தற்கொலை அமைகிறது.
பொதுவாக சட்டம் தற்கொலையை தற்கொலையென்று மட்டுமே எடுத்துக் கொண்டாலும், தார்மீகமாக அவற்றை கொலைகள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். பதின்வயதில் ஒருவர் தன்னை சுயமாய் மாய்த்துக் 'கொல்ல' சிலபல கொலைகளைச் செய்வதைவிட கூடுதல் வலிமை வேண்டும்.
இதுபோன்ற தற்கொலைகளை அரசல்புரலாக தேர்வு நெருங்கும் சமயங்களில் சற்றே அதிகமாகக் கேள்விப்படுவதுண்டு. எனினும்கூட சின்ன சலனங்களோடு, சகமாணவர்களின் பெற்றோர்களும் இம்மரணங்களைக் கடந்து போய்விடுவது வழக்கம். அதற்கு மிக முக்கியக் காரணம் தன் மகன் / மகள் எப்படியாவது அந்த வருடம் படிப்பை நல்லபடியாக முடித்துவிட்டு வந்துவிட வேண்டும் என்பது மட்டுமே.
கடந்த வாரத்தில் நாமக்கல் பள்ளி ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடலை வாங்க மறுத்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் வரை சென்றுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் அந்த செய்தி அமுங்கிவிட்டது.
தற்கொலை குறித்து நிர்வாகமும் பெற்றோரும் சொல்லும் காரணங்கள் 'விருமாண்டி' சினிமாவை நினைவூட்டுகின்றன.
பள்ளி சார்பில் சொல்லப்பட்டு செய்தித்தாள் வழியே அறிவது, அம்மாணவன் ஏற்கனவே ஒரு மாணவனோடு சண்டையிட்டு எச்சரிக்கப்பட்டதாகவும், வேறொரு ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கி எச்சரிக்கப்பட்டதாகவும், இம்முறை குறிப்பிட்ட ஓர் ஆசிரியைக்கு கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதனால் ஒழுங்கு நடவடிக்கையாக விடுதியைவிட்டு வெளியேறுமாறு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
பெற்றோர் சார்பில் தெரிவிக்கப்பட்டதில் அந்த மாணவன் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என உடனடியாக மாணவனின் தந்தை முதல் நாள் இரவு அழைக்கப்பட்டதாகவும், அடுத்தநாள் பள்ளி நிர்வாகம் மாணவனின் உடல் நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்தாகவும், பின்னர் மாணவன் இறந்துபோய் விட்டதாக தகவல் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
மாணவனின் ஒழுங்கீனமான சில செயல்கள் என பள்ளி சொல்பவை, சக பெற்றோர்களாலும், பெரும்பான்மை சமூகத்தாலும் குற்றமாகவே பார்க்கப்படும் அவலத்துக்குரியவை. காரணம் அப்படிப்பட்ட செயல்கள் தம் பிள்ளையை பாதித்துவிடக்கூடாது என்பது. அதென்ன படிக்கும் வயதில் இப்படிப்பட்ட செயல்கள், அதுவும் இப்படிப்பட்ட சில்லறைத்தனமான செயல்கள் என்று கூட விமர்சிக்கப்படும். மற்ற மாணவர்களின் நிலை கருதி, இது மாதிரியான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நாங்கள் கடுமையாக தண்டிக்கத்தான் வேண்டிவரும் என பள்ளி நிர்வாகம் சொல்லும் சாத்தியமுண்டு.
அதுவரை மகனை மாணவனாகப் பார்த்த பெற்றோர், அவன் உடலை வைத்துக்கொண்டு அதை தம் பிள்ளையாகப் பார்த்து கதறும் சாத்தியமுண்டு. தம் பிள்ளையின் தற்கொலை, நிர்வாகத்தின் கெடுபிடியால், அச்சுறுத்தலால் திணிக்கப்பட்ட கொலையாகவே கருதும் சாத்தியமுண்டு.
இன்றைய கல்வி வியாபாரம் என்பது, மெக்காலே கொடுத்ததை சீர்தூக்கிப் பார்க்காத கையாலாகாத்தனமும், பேராசையை நியாயப்படுத்தும் பெற்றோரும், வியாபாரமாகக் கருதும் பள்ளி நிர்வாகமும், கல்விக் கடிவாளத்தை தன் கையைவிட்டு விடுவித்துக்கொண்டு கண்டும் காணாமல் இருக்கும் அரசாங்கமும் இணைந்து நடக்கும் கோழைத்தனமான போர். இதில் இலக்காகச் சிக்கி அடிபட்டு, வதைபட்டு, தனித்திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு, அளப்பரிய திறன் கொண்ட மூளையை வெறும் நூறு ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு மெமெரி கார்டுக்கு நிகரான ஒரு சேமிப்புக் கருவியாக மாற்றப்பட்டு, சுதந்திரம் மறுக்கப்பட்டு, உணர்வுகள் துண்டிக்கப்பட்டு வீழ்ந்துபோவது, அரிதாக மடிந்துபோவது பதின் பருவப் பிள்ளைகளே.
ஓடும் பேருந்தில் நிகழ்ந்த பாலியல் வன்புணர்வைவிட வித்தியாசமானதொரு வன்புணர்வு நிகழும் வரை, கொடூரமானதொரு வகுப்பறைக் கொலை அரங்கேறும் வரை, இன்னொரு மாணவனின் தற்கொலை கோரமாக நிகழும்வரை சமூகத்தின் பொத்தாம் பொதுவான கள்ள மௌனம் கால்மேல் கால் போட்டவாறு அவரவர் வீட்டுத் திண்ணையில் சொகுசாய் அமர்ந்திருப்பது தொடர்ந்தே தீரும்!

Read More

அழகிரி கருத்துக்கு கருணாநிதி கடும் கண்டனம்: கட்டுப்பாட்டைக் குலைத்தால் ஒழுங்கு நடவடிக்கை

11:00 AM  Unknown  No comments



திமுக - தேமுதிக உறவு குறித்த மு.க.அழகிரியின் கருத்துக்கு, திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்று, கருத்து மாறுபாடுகளை வெளியிடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு, தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர், மு.க.அழகிரி கடந்த 5ஆம் தேதியன்று அளித்த பேட்டி பற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில் வருமாறு:
திமுகவும், தேமுதிகவும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி சேரும் வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.
திமுகவோடு, தேமுதிக கூட்டணிக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான் என்று நான் சொன்னதையே பொறுத்துக் கொள்ள முடியாமல், எங்கே அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், தவறான விமர்சனக் கணைகளைத் சிலர் தொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அந்தப் பத்திரிகையாளர்கள் தேமுதிகவோடு தேர்தல் உறவு வேண்டாம் என்று மு.க.அழகிரி கூறியதாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளனர். அந்தச் செய்திக்கும் அல்லது அழகிரி அப்படி கூறியிருந்தால் அந்தக் கருத்துக்கும், திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனெனில், எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி சேருவது என்று தீர்மானிக்கும் உரிமை, திமுக செயற்குழு, பொதுக்குழு அல்லது அந்தக் குழுக்களால் அதிகாரம் தரப்பட்ட கழகத்தின் தலைமைக்கு மட்டுமே உள்ளது.
அந்த வகையில், தேமுதிகவுக்கும், திமுகவுக்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான் என்று, திமுக தலைவர் என்ற முறையில், நான் சொன்ன கருத்துக்கு மாறாக மு.க.அழகிரியின் பேட்டி அமைந்திருப்பது வருந்தத்தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும்.
இது போன்ற தேவையில்லாத கருத்து மாறுபாடுகளை வெளியிட்டு, கழகத்தின் கட்டுப்பாட்டைக் குலைக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு,
கழகத்தின் உறுப்பினர் பொறுப்பிலி ருந்தே ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பதை, மிகவும் கண்டிப்பாக தெரிவித்துக் கொள்வதோடு, இந்த முடிவு, நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் திமுகவினர் அனைவருக்கும் பொருந்தக் கூடியதாகும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Read More

Wednesday, September 18, 2013

பெட்ரோல் குண்டு வீசியதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது

11:12 AM  Unknown  1 comment


கோவையில் விநாயகர் சிலை வைத்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சிவசேனா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

(காவல்துறைக்கு நன்றி அதிவிரைவில் குற்றவாளிகளை கைது செய்ததற்கு. 
கைது செய்யவில்லை என்றால் இதுவும் முஸ்லிம்கள் செய்தது என்று கூறி பந்த் நடத்தி கலவரத்தை உருவாக்கி மாமான் மச்சான் மாதிரி முஸ்லிம்களும், இந்துக்களும் வாழும் அமைதியான தமிழகத்தில் குஜராத், உத்திரபிரதேசம் நடத்திய வன்முறை நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்திருப்பார்கள்.)

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சிவசேனா நிர்வாகி

கோவை பாப்பநாயக்கன்பாளையம் சிறுகாளி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). இவர் சிவசேனா கட்சியின் கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவருடைய சகோதரர் வினோத்குமார் (32), சிவசேனாவில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவில் முத்துக்குமார் தனது மனைவி தீபா, மகள் தனுஷ்மா, தாயார் வேலுமணி ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். வினோத்குமார் வெளியில் சென்றிருந்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்த நிலையில், நள்ளிரவு 2½ மணிக்கு ஒரு கும்பல் முத்துக்குமார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியது. வீட்டின் மேல்பகுதியில் உள்ள சிமிண்ட் ஷீட் மீது விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. இதனால் வீட்டின் வெளியே காயப் போட்டு இருந்த துணிகளில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

சத்தம் கேட்டு முத்துக்குமார் வெளியே ஓடி வந்தார். அங்கு துணிகள் எரிந்து கொண்டு இருப்பதை பார்த்துதிடுக்கிட்டார். அதை தண்ணீர் ஊற்றி அணைத்தார். அவரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டு இருந்த கும்பல் தப்பி ஓடியது.

போலீஸ் விசாரணை

இது குறித்து முத்துக்குமார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை கமிஷனர் பிரவேஷ்குமார், உதவி கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை சோதனை செய்து, அங்கு சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை சேகரித்தனர். பின்பு அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதில், விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் முத்துக்குமார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது.

8 பேர் கைது

இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், சந்திரமோகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் குப்புராஜ், சாமிநாதன், ஆனந்தஜோதி, மலர்விழி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் விசுவ இந்து பரிஷத் மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுபாஷ் (38) மற்றும் நிர்வாகிகள் குண்டு மணி என்கிற மணிகண்டன் (26), ராமகிருஷ்ணன் (22), அனிஷ்குமார் (29), முருகேசன் (32), சுரேஷ் கிருஷ்ணன் (22), கார்த்திக் (25), ராஜ்குமார் (26) மற்றும் விக்னேஷ் (29) ஆகிய 9 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

அதன்பேரில் அவர்கள் மீது கூட்டுசதி, வெடிபொருட்களை பயன்படுத்துதல் உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதில், முருகேசனை தவிர 8 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மாஜிஸ்திரேட்டு 3–வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகேசனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

விநாயகர் சிலை

கோவை மாநகர பகுதியில் வினாயகர் சதுர்த்தியையொட்டி புதிதாக விநாயகர் சிலை வைக்க இந்து அமைப்புகள் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டில் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் வைத்திருந்த விநாயகர் சிலையை இந்த ஆண்டில் பாப்பநாயக்கன்பாளையத்தில் மாற்றி வைக்க சிவசேனா சார்பில் அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

மேலும் சிவசேனா நிர்வாகியான முத்துக்குமார், கட்சியில் சேர்ந்து சிறிது நாட்களுக்குள் அந்த பகுதியில் விநாயகர் சிலையை வைத்துவிட்டதால் அவர் மீது விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு கோபம் ஏற்பட்டு உள்ளது. அத்துடன் முத்துக்குமாரின் தம்பி வினோத்குமார் நேற்று முன்தினம் மற்ற அமைப்பு நிர்வாகிகளை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆட்டோ பறிமுதல்

இதனால் ஆத்திரமடைந்த விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் சுபாஷ் தலைமையில் ஒன்று சேர்ந்து, நள்ளிரவில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் முத்துக்குமார் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். அவர்கள் சென்ற ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

காவல்துறைக்கு நன்றி அதிவிரைவில் குற்றவாளிகளை கைது செய்ததற்கு.
கைது செய்யவில்லை என்றால் இதுவும் முஸ்லிம்கள் செய்தது என்று கூறி பந்த் நடத்தி கலவரத்தை உருவாக்கி மாமான் மச்சான் மாதிரி முஸ்லிம்களும், இந்துக்களும் வாழும் அமைதியான தமிழகத்தில் குஜராத், உத்திரபிரதேசம் நடத்திய வன்முறை நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்திருப்பார்கள்.

Read More

பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர் பிரச்சனை தீரும் : ஹெச். ராஜா சொல்கிறார்

11:01 AM  Unknown  No comments

 ஈரோடு : பாஜக ஆட்சிக்கு வந்தால், இலங்கை தமிழர் பிரச்சனை தீரும் என  பாஜகவின் மாநில துணைத் தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
 மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஈரோடு வந்த பாஜகவின் மாநில துணைத் தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது, '' இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கவும், அவர்கள் அந்தஸ்தோடு வாழவும், 13வது சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் முயற்சிகளை மேற்கொள்ளும். இலங்கை தமிழர்களும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறார்கள்''  என்று தெரிவித்தார்.
மேலும் பேசும் போது, காங்கிரஸ் ஆட்சியில், அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறியதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஹெச். ராஜா கூறினார்.

Read More
Older Posts
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More
RSS FeedSubscribe to our RSS Feed
Follow Us on Twitter!Follow Us on Twitter
Be Our Fan!Be Our Fan on Facebook
  • Popular
  • Tags
  • Blog Archives



Adverstisement

Chat Box

தரம் எண்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

பிற வலைத்தளங்கள்

  • சாதிக்குல் அமீன்
  • வவ்வை போஸ்ட்
  • KARAIKAL YOUTH EMPOWERMENT SOCIETY - UAE

தற்போதைய செய்திகள்....

LATEST:

Grab the widget  IWeb Gator

நேரம்

ரசிகர்கள்...

பலநாட்டு பார்வையாளர்கள்...


widgeo.net

பார்வையிட்ட பக்கங்கள்

free hit counter
hit counter

தற்போதைய பார்வையாளர்


Large Visitor Globe

ரசிகர்களின் வாழுமிடம்

எவனோ ஒருவன்....

Unknown
View my complete profile

Top Menu

Páginas

Powered by Blogger.

Pesquisar

More than a Blog Aggregator

free website counter

 
Copyright © 2011 உண்மையான உலகம் | Powered by Blogger
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Powerade Coupons