Wednesday, January 8, 2014

திருப்பூர்: ஒரு குடம் நீர் ரூ.5 - தாகத்தில் நாவிதன்புதூர்!

தண்ணீரின்றி தவிக்கிறது திருப்பூர் மாவட்டத்தின் ஒரு கிராமம். குடம் தண்ணீரை 5 ரூபாய்க்கு வாங்கி வாழ்நாளை கழித்து வருகின்றனர். இந்த நிலை, இன்று நேற்றல்ல. பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது என்கின்றனர் இக்கிராம மக்கள். தண்ணீரின்றி தாகம் தணிக்க முடியாமல் மிகவும் நொந்துபோயுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நந்தவனம்பாளையம் ஊராட்சியில் உள்ளது நாவிதன்புதூர். இங்கு 160 குடும்பங்கள் கடந்த 35 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. இப்பகுதி மக்கள், கடந்த பல ஆண்டுகளாக தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அதுவும், கடந்த சில மாதங்களாக மழை இல்லாதாததால், ஆழ்குழாய் நீரும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வறண்டுவிட்டது. எனவே, வேலைக்கு கூட செல்லமுடியாமல், தினமும் தண்ணீர் பிடிக்கவே 4 முதல் 5 கி.மீ., பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அன்றாடமும் அவதி
‘டிராக்டரில் கொண்டுவந்து விற்கப்படும் தண்ணீரை, குடம் ரூ.5க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். கடந்த பல மாதங்களாக டிராக்டர் தண்ணீரும் வரவில்லையென்றால், கால்நடைகளைப் போல் மடிந்திருப்போம். இதுவரை மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுகொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. குழந்தைகள், பெண்கள் என ஒட்டுமொத்த கிராமமும் அன்றாடம் தண்ணீரின்றி மிகுந்த அவதிப்படுவதாக’ அப்பகுதி மக்கள்.
நாவிதன்புதூர் பிரிவு வரை வரும் கொடுமுடி கூட்டு குடிநீர்த்திட்டம் ஒன்றரை கி.மீ.தூரத்திலுள்ள நாவிதன்புதூருக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். நாவிதன்புதூர் பிரிவிற்கு கொடுமுடி குடிநீர்த்திட்டம் வந்தபோது, நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். எங்களுக்கும் எப்படியும் தண்ணீர் கிடைக்கும் என கனவு கண்டோம். கடைசியில் அது கானல்நீரானது. குடிநீருக்காக பல ஆண்டுகளாக போராடிக் கொண்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இக்கிராம மக்கள் காலிக் குடங்களுடன், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாகக் கொடுத்தனர். மக்களின் நெடுநாள் தாகத்தை மாவட்டநிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தீர்க்குமா? அல்லது தாகத்துடனேயே வாழ வைக்குமா?

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More