Wednesday, September 18, 2013

வெற்றி தேடித் தந்தார் தவான்

dhawan cricket

 
மொகாலி:  தவான் அதிரடி அரைசதம் கைகொடுக்க, ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கண்டுரட்டா மரூன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.
ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் 21ல் துவங்குகிறது. இதற்கு முன் மொகாலியில் நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் ஐதராபாத் (இந்தியா), கண்டுரட்டா மரூன்ஸ் (இலங்கை) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் தவான், "பீல்டிங்' தேர்வு செய்தார். 
கண்டுரட்டா மரூன்ஸ் அணியின் தரங்கா (19) நிலைக்கவில்லை. பின் சங்ககரா, கேப்டன் திரிமான்னே ஜோடி பொறுப்பாக ஆடியது. அரைசதம் கடந்த திரிமான்னே(54), இஷாந்த் சர்மா "வேகத்தில்' வீழ்ந்தார். கண்டுரட்டா மரூன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. சங்ககரா (61), தில்கரா (21) அவுட்டாகாமல் இருந்தனர். 
சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு தவான், பார்த்திவ் படேல் அசத்தல் துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில், பார்த்திவ்(52) வெளியேறினார். மெண்டிஸ் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த தவான், 71 ரன்களுக்கு(53 பந்து, 11 பவுண்டரி) அவுட்டானார். அடுத்து வந்த திசாரா பெரேரா, குலசேகரா ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து வெற்றி தேடித் தந்தார். ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெரேரா(32) அவுட்டாகாமல் இருந்தார்.
ஆட்டநாயகன் விருதை தவான் வென்றார்.
மெக்கலம் அதிரடி: முன்னதாக நடந்த  பைசலாபாத் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் தகுதிச்சுற்றில் ஒடாகோ வோல்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
"டாஸ்' வென்ற பைசலாபாத் அணிக்கு கேப்டன் மிஸ்பா, "பேட்டிங்' தேர்வு செய்தார். 
பைசலாபாத் அணிக்கு ஆமர் முகமது (5), அலி வகாஸ் (4), ஆசிப் அலி (14) ஏமாற்றினர்.ஷெகாதத் 27 ரன்களில் அவுட்டானார். மிஸ்பா 46 ரன்களில் வெளியேறி, அரைசத வாய்ப்பை இழந்தார். முடிவில், பைசலாபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. 
சுலப இலக்கை விரட்டிய ஒடாகோ வோல்ட்ஸ் அணிக்கு நெய்ல் புரோம் "டக்-அவுட்டாகி' அதிர்ச்சி அளித்தார். பின் கேப்டன் பிரண்டன் மெக்கலம் அசத்தலாக விளையாடினார். ரூதர்போர்டு 25 ரன்களில் வெளியேறினார்.
தனது அதிரடியை காட்டிய மெக்கலம், இம்ரான் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து அரைசதம் எட்டினார். பின் ஆசாத் அலி பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார். முடிவில், ஒடாகோ வோல்ட்ஸ் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. மெக்கலம் (83), பார்டர் (30) அவுட்டாகாமல் இருந்தனர். 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More