
காரைக்கால்: ஒருதலை காதலால் ஆசிட் வீசப்பட்டதில் பலியான பெண் இன்ஜினியர் வினோதினியின் உடல் சொந்த ஊரில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது. காரைக்கால் எம்எம்ஜி நகரை சேர்ந்த ஜெயபால் மகள் வினோதினி, சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரை, திருவேட்டக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் ஒருதலையாக காதலித்து வந்தார். காதலை ஏற்க வினோதினி மறுத்ததால் அவர் மீது சுரேஷ் ஆசிட் வீசினார். இதில் பலத்த காயமடைந்து கடந்த 3 மாதங்களாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி, நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வினோதினியின் உடல் வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, இயக்குனர்கள் அமீர், கவுதமன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்றிரவு 10 மணியளவில் வினோதினியின் உடல், சொந்த ஊரான நாகை மாவட்டம் திருக்கடையூருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு எம்எல்ஏ நாஜிம், முன்னாள் எம்எல்ஏ ஓமலிங்கம் உள்பட ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 10 மணியளவில் வினோதினியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீஞ்சாங்குளக்கரையில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தந்தை ஜெயபால் தீ மூட்டினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment