Tuesday, June 26, 2012

முர்ஸியின் வெற்றி:முபாரக் குடும்பத்திற்கு அதிர்ச்சி, இஸ்ரேலுக்கு கறுப்பு தினம்!


முர்ஸியின் வெற்றி:முபாரக் குடும்பத்திற்கு அதிர்ச்சி, இஸ்ரேலுக்கு கறுப்பு தினம்!

 
கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தின் முதல் அதிபராக இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி வெற்றிப்பெற்ற செய்தி எகிப்தின் முன்னாள் ஆட்சியாளர் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும், இஸ்ரேலுக்கு கடுமையான கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முபாரக்கிற்கு, முர்ஸி வெற்றிப்பெற்ற செய்தி கேட்டவுடன் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக அல் அஹ்ராம் பத்திரிகை கூறுகிறது.

ஜூன் முதல் வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுதே முபாரக் உடல்நிலைக் குறித்து சந்தேகம் எழுந்தது. கடந்த வாரம் அவர் மரணித்துவிட்டதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை மறுத்த ராணுவ அரசு முபாரக்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தது. முன்னர் நினைவிழந்திருந்த முபாரக், நினைவு திரும்பி கண்ணைத் திறந்துள்ளார் என்று ராணுவ அரசு அறிவித்தது. ஆனால், முர்ஸியின் வெற்றிச் செய்தியை கேட்டவுடன் அவரது இரத்த அழுத்தம் அதிகரித்து, இதயத்துடிப்பு தாறுமாறாக அதிகரித்துள்ளது என்று சிறை மருத்துவர்களை மேற்கோள்காட்டி அல் அஹ்ராம் கூறுகிறது.

இஃவானுல் முஸ்லிமீனின் வேட்பாளர் முர்ஸியின் வெற்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முபாரக்கின் பிள்ளைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு தோரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முபாரக்கின் பிள்ளைகளான ஜமால் முபாரக், அலா முபாரக் ஆகியோர் முர்ஸி வெற்றிப்பெற்ற செய்தியை கேட்டவுடன் அழுததாக தேசிய செய்தி ஏஜன்சி கூறுகிறது.

எகிப்தின் தேர்தல் முடிவை மதிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ள போதிலும் அங்கு கடுமையான பீதி நிலவுவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஃவானுல் முஸ்லிமீனின் வெற்றி இஸ்ரேலுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலில் பிரபல பத்திரிகையான Yediot Aharonot உள்ளிட்ட பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Yediot Aharonot பத்திரிகை திங்கள் கிழமை “Darkness in Egypt”(எகிப்தின் கறுப்பு தினம்) என்ற தலைப்புடன் வெளியானது. ஏறக்குறைய இதே கருத்துடனேயே இஸ்ரேலின் பெரும்பாலான பத்திரிகைகள் எகிப்து தேர்தலில் முர்ஸியின் வெற்றிக்குறித்த செய்திகளை வெளியிட்டன.

பிரபல பத்திரிகை ஒன்றில் அனலிஸ்டான Alex Fishman என்பவர் ‘நடைபெறப்போகும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இஸ்ரேல் தயாராக வேண்டும்’ என்று எழுதியுள்ளார்.

மாரிவ் டைலி என்ற இஸ்ரேலி பத்திரிகை, ’புதிய மத்திய கிழக்கு உலகம் அஞ்சுவது நிதர்சனமாகியுள்ளது. இஃவானுல் முஸ்லிமீன் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது’ என்று கதறி அழும் நோக்கில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் ஹாரட்ஸ் உள்ளிட்ட ஒரு சில பத்திரிகைகள், எகிப்து தேர்தல் முடிவை மதிப்பதாக கூறும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More