கோழி மேய்ந்த விவகாரத்துக் கூட கொலையா? மனித மனங்கள் மரத்து விட்டதா?
ஒரு காலத்தில் அரிதாக இருந்த கொலைகள் இன்று அற்பமானதாக மாறிவிட்டது. எதற்கு கொலை செய்கிறோம் என்று கூட யோசிக்கும் அளவிலோ, மனிதனின் உயிரின் மதிப்பையோ கொலையாளிகள் எண்ணிப்பார்க்கக் கூட துணிவதில்லை. கோடிக்கணக்கில் பணம் சம்மந்தப்பட்ட விசயத்தில் நடைபெற்று வந்த கொலைகள், இன்று ஒரு பீடிக்கு கூட நடக்கும் அவலம். அதிலும் குறிப்பாக கோழி மேய்ந்த தகராறில் ஒரு பச்சிளம் பாலகனை கொன்ற பாதகியும் இந்த பாரதநாட்டில் வாழ்வது பெண்ணினத்திற்கு இழுக்காகும்.
கோழி மேய்ந்த முன்விரோதத்தில் 1 1/2 மாத கைக்குழந்தையை எதிர்வீட்டு பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் என்று இன்று ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் சாலாமேடு விநாயகா நகரில் வசித்து வரும் உஸ்மான் அலியின், ஒன்றரை வயது ஆன் குழந்தையை, உஸ்மான் அலியின் எதிர்வீட்டை சேர்ந்த ஆதிலட்சுமி என்ற பெண்மணி கடத்திச் சென்று, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டு பின்புறமுள்ள முள்காட்டில் வீசியிருக்கிறாள். எதிரி வீட்டு குழந்தையாயினும் எடுத்துக் கொஞ்சும் இரக்கம் கொள்ளவேண்டிய இந்த பெண்ணின் உள்ளத்தில் ஏற்பட்ட இந்த இரத்தவெறிக்கு என்ன காரணம் என்று பார்த்தால், அற்பமான கோழி மேய்ந்த கதையாம்.
உஸ்மான்அலியின் வீட்டில் வளர்த்து வரும் கோழிகள் ஆதிலட்சுமியின் கூரைவீட்டில் மேய்ந்து கூரையை பிய்த்து அட்டகாசம் செய்து வந்ததாகவும் இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது தான் இந்த கொலைக்குக் காரணமாம். பகுத்தறிவில்லா கோழிக்கு தன் வீட்டில் வந்து இரவில் அடையத் தெரியுமே தவிர, அடுத்த வீட்டில் போய் மேயக்கூடாது என்று தெரியுமா? இந்த அற்பமான விசயத்திற்கு ஆண்டாண்டு காலம் வாழவேண்டிய ஒரு அரும்பை, கரும்பை முறித்தது போன்று கழுத்தை முறித்து கொல்வதா? மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப மனிதர்களின் கருணையும் மாறுமோ? இந்தக் கொலையில் சம்மந்தப்பட்டதாக கூறப்படும் ஆதிலட்சுமிக்கு வழங்கப்படும் தண்டனை, இதயமற்ற அரக்கர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்.





0 comments:
Post a Comment