Thursday, June 28, 2012

தடைச்செய்த விளம்பரம் இந்தியாவில் நீடிப்பு!

தேர்வு பயம் போக்க ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்: பிரிட்டனில் தடைச்செய்த விளம்பரம் இந்தியாவில் நீடிப்பு!


புதுடெல்லி:தேர்வு காலம் துவங்கிய உடனே தொலைக்காட்சியிலும், இன்னும் பிற ஊடகங்களிலும் மிகச்சிறந்த புத்தி சக்தியும், ஞாபக சக்தியையும் வாக்குறுதி அளித்து பிரபல பானங்களான காம்ப்ளானும், ஹார்லிக்சும் பரப்புரைச் செய்யும் விளம்பரம் பிரிட்டனில் பல வருடங்களுக்கு முன்பே தடைச் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு காலம் துவங்கிய உடனே வழக்கமாக மாணவ, மாணவிகளுக்கு உருவாகும் கவலை, பயம், தைரியம் இழத்தல் ஆகியவற்றை மாற்றுவதற்கு இவ்விரு பானங்களையும் நிரந்தரமாக அருந்தினால் போதும் என்ற விளம்பரத்தை ஹார்லிக்சும், காம்ப்ளானும் அளித்து வருகின்றன.

நம்பமுடியாத ஆய்வுகளை முன்னிறுத்தி இத்தகைய விளம்பரங்களை மேற்கொள்வதாக கண்டுபிடித்ததை தொடர்ந்து பிரிட்டனில் அட்வர்டைசிங் ஸ்டாண்டர்ட் அதாரிட்டி 2008-ஆம் ஆண்டு ஹார்லிக்ஸ் விளம்பரத்திற்கு தடை ஏற்படுத்தியது. தினமும் 2 தடவை ஹார்லிக்ஸ் குடித்தாலே போதும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், சக்தி வாய்ந்தவர்களாகவும் மாறிவிடுவார்கள் என்பது ஹார்லிக்ஸின் கண்டுபிடிப்பாகும்.

பிரிட்டனில் சேனல்கள் வழியாக பிரச்சாரம் செய்த 'taller, sharper, stronger' என்ற விளம்பரம் தடைச் செய்யப்பட்டது. ஆனால், ஹார்லிக்ஸ் நிறுவனம் அளித்த விளக்கம் என்னவெனில், 'இது பிரிட்டனில் நுகர்வோரை நோக்கமாக கொண்டு அளிக்கப்பட்ட விளம்பரம் அல்ல என்றும், இந்திய சந்தைக்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம் தவறுதலாக பிரிட்டனில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக' கூறியது.

அதேவேளையில் இந்தியாவில் இவ்விளம்பரம் பல வருடங்களாக தொடர்கிறது. வரலாறு, புவியியல், கணக்கு ஆகிய பாடங்களை சாத்தான்களாக சித்தரித்து இந்த விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது. தேர்வுக்காக உங்கள் குழந்தைகள் படித்தது மறந்துபோனால், அதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைவாகும். இதற்கு தீர்வு காண தினமும் குறைந்தது 2 தடவை குழந்தைகளுக்கு காம்ப்ளான் கொடுக்கவேண்டும் என்பது அந்நிறுவனத்தின் விளம்பரத்தின் கருத்தாகும். இதைப்போன்றே ஹார்லிக்ஸ் விளம்பரத்திலும் பாடங்களை பூதங்களாக சித்தரித்து தேர்வு பயத்தை போக்க தினமும் 2 கப் ஹார்லிக்ஸ் குடிக்க உபதேசிக்கின்றார்கள்.

விஞ்ஞானத்திற்கு முரணான, நம்பமுடியாத போலியான ஆய்வுகளை காட்டி வளர்ச்சியடைந்த நாடுகளில் தடைச் செய்யப்பட்ட இத்தகைய விளம்பரங்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நுகர்வோரின் கவலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றை முதலீடாக கொண்டு அவர்களின் தலையில் கட்டிவைக்கும் செயலை இத்தகைய விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக ஃபுட் சேஃப்டி அதாரிட்டி ஆஃப் இந்தியாவின் முன்னாள் உறுப்பினர் பிஜோன் மிஷ்ரா கூறுகிறார். காம்ப்ளான் தயாரிப்பாளரான ஹெயின்ஸ் இந்தியா இதுக்குறித்து எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

ஆனால், விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விளம்பரம் அளிக்கப்படுவதாகவும், தயாரிப்பை சந்தைக்கு கொண்டுவருவதற்கு முன்பு பல ஆய்வுகளை நடத்தியுள்ளதாகவும் ஹார்லிக்ஸின் உரிமையாளர்களான க்ளாஸ்கோ ஸ்மித்க்ளைன் கன்ஸ்யூமர் ஹெல்த் கெயர் மார்கடிங் இயக்குநர் ஜெயந்த் சிங் கூறுகிறார்.

அதேவேளையில், இத்தகைய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க கூடாது என்றும், இவை ரகசியமாகவும், சிறிய அளவிலான பொருட்களிலும் நடத்தப்படுகின்றன என்றும், பெரிய அளவில் தயாரிக்கும் பொழுது அதன் முடிவு வித்தியாசமாக அமையும் என்றும் மிஷ்ரா கூறுகிறார்.

எவ்வளவு பெரிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அமைந்தாலும், இத்தகைய விளம்பரங்களை வளர்ச்சி அடைந்த நாடுகள் அனுமதிக்காது என்று மிஷ்ரா மேலும் தெரிவித்தார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More