கடமை தவறும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட எஸ்.எஸ்.பி எச்சரிக்கை
காரைக்கால், ஏப்.23 காரைக்கால் மாவட்டத்தில் கடமை தவறும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களோடு மக்களாக கலந்து அதிரடி ஆய்வு நடத்திவரும், மாவட்ட எஸ்.எஸ்.பி ஆன்டோஅல்போன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட எஸ்.எஸ்.பி-யாக கடந்த மாதம் பொறுப்பேற்ற ஆன்டோஅல்போன்ஸ், சாலை ஆக்கிரமிப்பு அகற்றம், வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு, இரவு நேர ரோந்து, போலிஸருக்கு யோகா, தியானம் என பல்வேறு நடவடிக்கைகளில் அதிரடியாக ஈடுபட்டு பொதுமக்கள் பாராட்டை பெற்றார்.
இந்நிலையில், கடந்த இரு வாரமாக எஸ்.எஸ்.பி ஆன்டோஅல்போன்ஸ் போலிஸ் உடையில் இல்லாமல் சாதாரண உடையில், மக்களோடு மக்களாக கலந்து, போலிஸாரின் கடமைகளை ஆய்வு செய்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று இருசக்கர வாகனம் ஒன்றில் ஹெல்மெட் அணிந்து மாவட்டம் முழுவதும் சுற்றிவந்துள்ளார். அப்போது, வாஞ்சூர் எல்லைக்கு சென்ற போது, அங்கு பணியில் இருந்த போலிஸார் எஸ்.எஸ்.பி-ன் வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டதுடன், கடமை தவறும் வகையில் செயல்பட்டதை கண்டு ஹெல்மெட்டை கழட்டி அப்போலிஸ்காரருக்கு அதிர்ச்சி கொடுத்ததுடன், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, சிக்னல் பகுதியில் வெகு நேரமாக நின்று அங்கு பணியாற்றும் போலிஸாரின் செயல்பாட்டை கண்காணித்து, பணி நேரத்தில் செல்போன் பேசக்கூடாது. பணி நேரம் முழுவதும் சாலையில் கண்டிப்பாக இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று, திரு-பட்டினம் வாஞ்சூர் பகுதியில் இருதரப்பினருக்கிடையை சண்டை ஏற்பட்டு, ஒரு தரப்பினர் தொலைபேசி மூலம் திரு-பட்டினம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தபோது, பணியில் இருந்த போலிஸார் புகார் தாரரை மதிக்காமல் நேரில் வந்து புகார் தரும்படி அலட்சியாமாக பேசியதாக தெரிகிறது. தொடர்ந்து அந்த நபர் மாவட்ட எஸ்.எஸ்.பி-யை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். உடனே எஸ்.எஸ்.பி ஆன்டோஅல்போன்ஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, தாமே வேறொரு போன் மூலம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாருக்கும் ஏற்ககெனவே கூறிய பதிலை போலிஸார் கூறியுள்ளார். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரிடம் எழுத்துப்பூர்வாக புகாரை பெற்று காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அந்த புகார் மனுவை சம்பந்தப்பட்ட போலிஸாரிடம் வழங்கி தொலைபேசியில் அவசர புகார் கொடுத்தாலும், போலிஸார் கடமை தவறக்கூடாது என எச்சரித்துள்ளார்.
மேலும், இரவு நேரத்தில் காரைக்காலில் உள்ள ஏதேனும் ஒரு காவல்நிலையம் அல்லது காவலர்களின் இரவு ரோந்தை திடீர் திடீரென ஆய்வு செய்வது. போலிஸார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து, எஸ்.எஸ்.பி ஆன்டோஅல்போன்ஸ் நேற்று மாலை கூறியதாவது: காவலர்களின் பணிகள் குறித்து சில வழிக்காட்டு நெறிமுறைகளை எற்கெனவே அறிவித்து அவற்றை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளேன். அதன்படி காவலர்கள் நடக்கிறார்களா? என சில மாறுப்பட்ட கோணங்களில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். கடமை தவறும் காவலர்கள் தங்களை திருத்திகொள்ளவேண்டும். இந்த ஆய்வு தொடரும், தொடர்ந்து கடமை தவறும் காவலர்கள் மீது இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





0 comments:
Post a Comment