புகழ் அனைத்தும் இறைவனுக்கே! இறை தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் மீதும் அவர்களை பின்பற்றி வாழும் நல்லடியார்கள் மீதும் இறைவன்
புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக! ஆமீன்.
படித்தவர் முதல் பாமரர் வரை... மகளை கரையேற்ற கடனை வாங்கி தத்தளிக்கும்
பெற்றோர்கள். பட்டு சேலைக்கு மட்டும் பல இலட்சம் செலவழிக்கும்இ நடுத்தர
மற்றும் பணக்கார வர்க்கத்தினர் வரை... அனைவருக்கும் பரிட்சயமான
விஷயம்தான் வரதட்சணை.
ஒரு ஆணுக்கு திருமணம் பேச்சு துவங்கி விடுமானால், நல்ல பெண் கிடைத்தால்
சொல்லுங்களேன் என்ற ரீதியில் தொடங்குகிறது இந்த பெண் பார்க்கும் படலம்.
நல்ல பெண் என்ற வார்த்தைக்கு ஒவ்வொரு தனிமனித அகராதியிலும் வேறுபட்ட பல
அர்த்தங்கள்;. நல்ல பெண் என்பவள் தீன்வழி நடக்கும் குணமான பெண்ணா?...
என்றால் நிச்சயமாக இல்லை.
இவர்களுக்கு ஒரே மகள் தான், தகப்பனாரும் வெளிநாட்டில் வேலை செய்கின்றார்,
எனவே கரக்கும் வரை கரக்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டுதான் களத்தில்
இறங்குகின்றனர். தகுதி ஏற்றாப்போல விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதிக
இலாபம் ஈட்டித்தர வீடு, நிலம் விற்க தரகர்கள் இருப்பது போல் மாப்பிள்ளை
விற்கவும் தரகர்கள் இல்லாமலில்லை.
மாப்பிள்ளை வீட்டார் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அராஜகச் செயல்கள்
சொல்லி மாளாது. சாம்பார் கொண்டு வந்தால்தான் பிரியாணியில் கை வைப்பேன்
என்று மாப்பிள்ளையின் உணர்ச்சி வசப்பேச்சு ஆகியவற்றிற்கு பெண்ணைப் பெற்ற
காரணத்தால் பொறுமையுடன் கேட்டதை கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.
மொத்தத்தில் இஸ்லாம் கூறும் வாழ்க்கை ஒப்பந்தம் இங்கு கேலிக்
கூத்தாகவும், சந்தைப் பொருளாகவும் மாறிவிட்டது.
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை (ஒப்பந்தம்) செய்துள்ளனர்
(அல்குர்ஆன் 4:21)
அல்லாஹ் தனது திருமறையில் திருமணம் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே என்பதாக
குறிப்பிடுகிறான்.
வரதட்சணை என்ற பெயரில் இவர்கள் பணம் சம்பாதிக்க பிரயோகிக்கும் விய+கம்
அலாதியானது. பணம் வேண்டாம் நகை மட்டும் போதும் உங்கள் பெண்ணுக்கு தானே
போடுகிறீர்கள் என்ற ரீதியில் சிலரும், வரதட்சணை வாங்காத திருமணம் என்று
விளம்பரபடுத்தி விலை உயர்ந்த சீர்வரிசைகளை மட்டும் திரைமறையில்
பெற்றுக்கொள்வது சகஜமாகிவிட்டது.
இவர்கள் மேடையில் பெறப்படும் ரொக்கப் பணம் மட்டும் தான் வரதட்சணை என்றும்
இதுவல்லாது தரப்படுகின்ற அனைத்தும் வரதட்சணையை சேராது என்றும் மேம்போக்கு
வாதம் செய்கின்றனர். தனது கனவுகளை நினைவாக்கவும் தமது சொத்துக்களை
விரிவடையச் செய்யவும் இவர்கள் பிரயோகிக்கும் ஆயுதம் தான் வரதட்சணை
என்பது. மேடையில் வாங்கப்படும் ரொக்கப்பணம் மட்டும்தான் வரதட்சணை
என்றால்?
o கை நீட்டி வாங்கும் கைக்கடிகாரமும், மாப்பிள்ளைக்கு என பெறப்படும்
கழுத்துச் செயினும், மோதிரமும், வீடும், நிலமும் வரதட்சணை இல்லையா?
o நிச்சயதார்த்தம் என்ற பெயரில் பெரும்படை திரட்டி, உண்டு கூத்தாடி,
பணச்சசுமயை பெண் வீட்டார் மீது சுமத்துவது வரதட்சணை இல்லையா?
o புகுந்த வீட்டிற்கு பெண்ணை அழைத்து வரும் போது கேட்கும், பஞ்சு
மெத்தையும், பட்டுத் தலையணையும், ஓலை விசிரியிலிருந்து, பண்டு
பாத்திரங்கள், அரிசி, பருப்பு, மசாலா சாமான்கள் வரை சுருட்டிக் கொண்டு
வருவதற்கு பெயர் வரதட்சணை இல்லையா?
o பண்டிகை நாளுக்காக காத்திருந்து பாத்திரங்கள் நிரப்பி பண்டங்கள்
கேட்பதற்கு பெயர் வரதட்சணை இல்லையா?
o தலைப் பெருநாள் சாக்கில் புத்தாடை கேட்பதும், சமயம் கிடைக்கும்
போதெல்லாம் மனைவியை தூண்டி மடியை நிரப்பிக்கொள்தற்க்கும் பெயர் வரதட்சணை
இல்லையா?
o கர்பிணி மனைவியின் கவலை மணம் பார்க்காமல் பிரசவச் செலவு முதல்
குழந்தைக்கு பவுடர் சோப்பு வரை மாமனாரை தரச் சொல்லி நிற்பதற்கு பெயர்
வரதட்சணை இல்லையா?
o பிரசவம் முடிந்து திரும்பி வரும் போது குழந்தைக்கு வெள்ளி அரைஞான்
கயிறும், வெள்ளிக் கொலுசும்இ தங்க நகைகளும் கேட்பதற்கு என்ன பெயர்?
o மனிதர்களே, நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்! மேற்கண்டது மட்டும் வரதட்சணை
சார்ந்தது அல்ல! இதுவல்லாது நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பணமாகவோ,
பொருளாகவோ, நிலமாகவோ, சொத்தாகவோ, வாங்கப்படும் அனைத்தும் வரதட்சணையே!
o பெண்ணை பெற்ற ஓரே பாவத்திற்காக ஊர் வழக்கம் என்ற பெயரில் இவ்வளவு
சுமையை பெண் வீட்டார்; மீது சுமத்துவது எவ்வளவு பெரிய கொடுமை. கருணை என்ற
வார்த்தையே உங்கள் அகராதியில் இல்லையா?
o பணம் படைத்த பல மாடிக் கட்டிடத்திற்கு சொந்தக்காரர்களுக்கு
வேண்டுமானால் இவை சாத்தியப்படலாம். அன்றாடப் பிழைப்புக்கு சைக்கிள் கடை
நடத்தி வரும் நடுத்தர வர்கத்தினருக்கு?
o 30 வயது மூத்தமகள் வீற்றிருக்க சமீபத்தில் வயதுக்கு வந்த நான்காவது
மகளின் எதிர்காலம் குறித்து கண்ணீர் சிந்தும் ஏழை முஸ்லிமின் நிலை உங்கள்
மனக் கண்களுக்கு தெரியாதது ஏன்?!
o இவ்வாறு பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் இந்த
திருமணத்தில் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்த பின்பும் இத்தோடு
வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள் என்பதில் என்ன நிச்சயம்!
o மேலும் கொடுக்க முடியாத பட்சத்தில் தன் இரத்தத்தை ஊட்டி வளர்த்த பெண்
புகுந்த விட்டில் இந்த பணத்தாசை முதலைகளின் பிடியில் நிலைத்திருப்பாள்
என்ற எதிர்காலப் புதிருக்கு விடையில்லை?!
ஸ்டவ் வெடிப்புக்கள் பெருகி வருவது எதைக் காட்டுகிறது! கவனக் குறைவினால்
வெடித்த ஸடவ்கள் எத்தனை?! வசூலிக்க முடியாத வரதட்சணை பாக்கியால் வெடித்த
ஸ்டவ்கள் எத்தனை?! என்று வினாக்கள் எழுந்தாலும் ஒன்று மட்டும் உறுதி.
அதாவது வரதட்சணை பின்னணியிலும் ஸ்டவ்கள் வெடிக்கின்றன என்பதுதான்.
கல்நெஞ்சம் படைத்தவர்களே! பெற்ற கடனுக்காக கொடுத்து கொடுத்து
ஓட்டாண்டியாகி ஓலைக் குடிசையில் ஒடுங்கிக் கிடக்கும் பாதிக்கப்பட்ட ஏழை,
படைத்த இறைவனிடம் கையேந்தினால் உங்கள் நிலை எவ்வாறு இருக்கும்?.
சிந்திக்க மாட்டீர்களா?!
பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். அவனுக்கும்
அல்லாஹ்விற்கும் இடையே திரை இல்லை என்கிறது நபிமொழி.
வக்கிரமான வரதட்ணை இஸ்லாத்தில் எவ்வாறு நுழைந்தது?
மாமறையும், நபிமொழியும் பேணப்படாததால் தூய இஸ்லாம் மக்கள் மத்தியில்
உலாவரவில்லை விளைவு இறையச்சம் தகர்த்தெறியப்பட்டு மாற்றுமத கலாச்சாரங்களை
மக்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.
தேர் இழுத்தல் - சந்தன கூடாகவும்
பாலபிஷேகம் - சந்தனபிஷேகமாகவும்
திதி - பாத்திஹாவாகவும்
தாலிக்கயிறு - கருக மணியாகவும்
தலைத்தீபாவளி - தலைப்பெருநாளாகவும் மாறியது
இந்த வரிசையில் மாற்று மதத்திலிருந்து தாரை வார்த்த ஒன்று தான் வரதட்சணை
என்பது கணவன் தந்தாலும் பெறக்கூடாது, மணமகன் தருவதை பெற்றுக்கொள்ளும்
தந்தை முட்டாள் மாறாக மணமகள் மற்றும் உறவினர் அனைவரும் சீதனம் வழங்க
வேண்டும் என்று கூறும் மனுதர்ம கொள்கை இஸ்லாத்தில் துளிர்விட்டது!
பெண்களுக்கு சொத்துரிமையில்லாத இந்து மதத்தில் வெறுங்கையுடன் மணமகன்
வரக்கூடாது என்று ஏர்படுத்தப்பட்டதுதான் சீதனம் (வரதட்சணை) என்பது! இந்த
வரதட்சணை.
பேரம் பேசுவதில் முன்னிலை வகிப்பது பெண்கள்தான். தாயாக, மூத்த சகோதரியாக
இருந்து பேரம் பேசும் இதே பெண்கள்தான், தன்னை கரையேற்ற தம் தந்தை பட்ட
கஷ்டத்தையும் அவமானப்பட்டதையும் நேரில் கண்டு அனுபவப்பட்டவர்கள் மணமகன்
வீட்டார் மீது கோபம் கொண்டு கொந்தளித்தவர்கள்தான் தமது மகனுக்கும்,
சகோதரனுக்கும் பேரம் பேசுகிறார்கள். காரணம் பெறப்போகும் செல்வத்தின்
பேராசைதான்! தம் தந்தை கஷ்டப்பட்டு அவமானப்பட்டது இந்த வரதட்சணையால்
தானே! மணப்பெண்ணை பெற்றவருக்கும் இந்த கவலையும் அவமானமும் இருக்காதா?
என்று உணர்;வு பூர்வமாக சிந்தித்திருந்தால் இந்த வரதட்சணை வந்திருக்காது.
(மஹர்) மணக்கொடை என்ற சொல் இஸ்லாத்தில் வழக்கொழிந்துவிடுமோ என்று
அஞ்சுமளவுக்கு இந்த இந்துமத தாக்கம் முஸ்லிம்களிடையே புரையோடிவிட்டது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நபி வழித்திருமணம் நடந்து கொண்டிருந்த போதிலும்
திரைமறையில் வாங்கப்பட்டதோ என்று அஞ்சப்படுகிறது.
வரதட்சணை வாங்காமல் மஹர் கொடுத்து திருமணம் செய்தால் மணமகனுக்கு ஏதும்
உள் வியாதி உள்ளதோ?! ஆண்மை குறைவோ?! என்று சந்தேகிக்கும் வெட்கக்கேடான
நிலைக்கு இன்றைய முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏன் வரதட்சணை வாங்குகிறீர்கள் என்று பெற்றவர்களை கேட்டால் எங்கள்
பெண்பிள்ளைகளுக்கு கொடுத்தோம் அதனால் வாங்குகிறோம் என்று மழுப்பல் வாதம்
பேசுகின்றனர். அனைத்துமே பெண் பிள்ளையாய் பெற்றவர்களுக்கு இவர்கள் என்ன
பதிலை வைத்திருக்கிறார்கள்.
இறைபணியில் ஆர்வம் உள்ள சகோதரர்கள் கூட எனக்கு இதெல்லாம் விருப்பம் இல்லை
வீட்டில் கட்டாயப்படுத்துகின்றனர் என்று உதட்டளவில் சொல்லிக்கொண்டு,
வாங்கிய பணத்தையும் வங்கிக் கணக்கையும் சரிப்பார்க்கும் காட்சியை
காண்கிறோம்.
பெண் என்ற ஒருத்தி கல்யாணம் என்ற நிகழ்வுக்கு பிறகு செய்யும் தியாகங்கள்
ஏனோ இந்த வறட்டு இதயங்களுக்கு தென்படுவதில்லை.
பிறந்த வீட்டு முற்றத்தில் தோழியரோடு கூடிவிளையாடியவள்; ? அன்பின்
மிகுதியால் தாயையும் தந்தையையும் சார்ந்து வாழ்ந்தவள், பிரிவைத் தாங்காது
கதறும் தாயையும் எல்லா துக்கத்தையும் மனதில் பூட்டி சோர்ந்து கையசைக்கும்
அருமை தந்தையையும் கூடிவிளையாடிய உயிர்தோழிகளையும் பிரிந்து
அறிமுகமில்லாத அந்நிய ஊர் செல்கின்றாள். புதிய மனையையும் பார்க்காத
முகங்கள் என்று வேறுபட்ட குடும்பச்சூழலில் தன்னைப்பழக்கிக் கொள்கிறாள்.
அங்கு தன் சோர்ந்த முகம் பார்த்து ஆறுதல் கூற ஆளில்லை. தலைவலி
உடல்வலிக்கு மருந்து தடவி அன்பு செலுத்த அன்னையில்லை. ஒவ்வொரு செயலிலும்
பயந்து செய்யவேண்டிய நிர்பந்தம். மாமியார் நல்ல குணம் ஆனால் கோபம்
சட்டென்று வரும் என்றும் நார்த்தனாரிடம் ஜாக்கிரதையாக நடந்துக்கொள
என்றும் விடுத்த எச்சரிக்கை அறிவுரைகளை அங்கு ஆராயப்படுகிறது. அதற்கேப்ப
தன் செயல்பாடுகளை சீர்திருத்தி தியாகம் செய்கின்றாள்.
பிறந்த வீட்டில் நித்தம் ஒருவகை உணவு உண்டு. மீன் வாசம் மறைய வாசனை
பூசிக் கொண்டவள் புகுந்த வீட்டில் மாமனாரின் உடல்நிலை கருதி உப்பில்லா
சோற்றுக்கு தன்னை உடன்படுத்திக் கொள்கின்றாள். இந்த இளமை வயதில் நாவை
அடக்கி பெண்மையின் இலக்கணம் பேணுகிறாள். இவ்வளவு துன்பத்தில் உழன்று
இல்லறத்தில் பல தியாகம் செய்கின்றாள். கணவன் குணம் அறிந்துஇ துணி
துவைப்பது முதல் பிடித்த சட்டைக்கு இஸ்திரி இட்டு தயார் செய்து வைப்பது
வரை பணம் பெறாத வேலைகாரியாக உழைக்கின்றாள்.
நினைத்த நேரம் அவனுக்கு சுகத்தை அள்ளி வழங்கி கர்ப்பம் தரிக்கின்றாள்.
இதுதான் இவளது தியாகத்தின் உச்சக்கட்டம். மசக்கை என்ற பெயரில் மயக்கம்
ஆனாலும் வேலை செய்யத்தவறுவதில்லை. கருவை சுமக்கும் ஒரே காரணத்துக்காக
உண்ணும் உணவெல்லாம் வாந்தியாக வெளியாகிறது. நடந்தால் மூச்சிறைப்பு.
நினைத்தமாதிரி தூங்க முடியாத நிலை. இன்னும் பிரசவநாள் நெருங்கும் வரை
இவள் படும் வேதனைகள் எழுத பக்கங்கள் போதாது.
பிரசவ வலி வந்து ஒரு பெண் துடிக்கும் நிலைகண்டு கல் நெஞ்சம்
கசிந்துருகிவிடும் கோலம். பிரசவ நேரத்தில் வாழ்வா, சாவா என்ற
மரணப்போரட்டத்தின் உச்சக்கட்டத்தில் ஈன்;;றெடுக்கிறாள் குழந்தையை.
இத்தோடு இவள் தியாகம் முழுமை பெற்றுவிட்டதா? இல்லை! தான் உண்ட உணவு
தனக்கே போதாத நிலையில் தன் குழந்தைக்கும் தன் இரத்தத்தை பாலாக ஊட்டும்
தியாகத்தின் உச்சகட்டம். இவ்வாறு கட்டில் முதல் தொட்டில் வரை,
பாலூட்டுதல் முதல் குழந்தையின் மலஜலம் அகற்றுதல் வரை செய்து நான்கு
மதில்களுக்குள் ஒரு தியாகப்போராட்டமே நடத்தும் இந்த பெண் இனத்திடம்
எனக்கு எவ்வளவு தருவாய் எனக்கேட்கும் ஒருவனை எவ்வாறு மனிதனாக
கருதமுடியும்?
இந்த பெண்ணினத்தின் இதயச்சுவட்டில் படிந்த இரத்தச்சவடுகள் இந்த
கல்நெஞ்சக் கொடுங்கோலர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. இவர்கள் பணத்தாசை
மாயையில் மயங்கி சமுதாய இழிநிலையில் பாராமுகம் காட்டுகின்றனர்...
விளைவு...
o தன் வயது தோழி தாயாகி பலவருடமாக திருமண ஆசையில் ஏக்கப்
பெருமூச்சிவிடும் முதிர் கன்னிகள் உருவாகும் நிலை.
o திருமணம் என்பது நம் வாழ்வில் இல்;லாது போகுமோ! என்ற ஐயத்தில்
சிக்குண்டு தனது துணையை தானே முடிவு செய்கிறேன் என்று யாருடனாவது
ஓடிப்போகும் காட்சி.
o இந்த வெகுளி பெண்ணை சாதகமாகப் பயன்படுத்தி காமப்பசி தீர்த்து அம்போ
என்று தெருவில் விடும் கயவர்கள் ஏராளம்.
o இந்த அவமானம் தாங்காது தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் பெண்கள் பலர்.
o ஏன் இன்னும் சிலர் விபச்சார விடுதியில் தஞ்சம் புகும் நிலையும் உண்டு.
o ஐந்து பெண் குழந்தை பிறந்தால் அரசனும் ஆண்டியாவான் என்ற நிலை.
எப்பாடுபட்டாவது தான் பெற்ற பெண்ணை கரை ஏற்ற வேண்டும் என்ற மன
ஆதங்கத்தில் ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்று பிச்சை எடுக்கும் நிலையில்
பெற்றோர்.
o எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மனசாட்சியற்ற வரதட்சணை கொடுமைக்கு பயந்து
கருவிலேயே அதை சிதைத்துவிடும் தாய்மார்கள் எத்தனை.
இளைஞர்களின் கடமை
பொற்றோருக்கு கட்டுப்படுகிறோம் என்று காட்ட எனக்கு இதெல்லாம் (வாங்குவது)
உடன்பாடு இல்லைதான் ஆனால் வீட்டில் வற்புறுத்துகிறார்கள்? என்று
சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்கு நாம் கேட்பது பிற்காலத்தில் உமது பெண்ணை
மணம் முடிக்கும் மணமகன் இதே பதிலை கூறமாட்டானா? தான் வாங்கும் பிச்சையை
நியாயப்படுத்த இஸ்லாத்தை ஏன் மாசுபடுத்துகிறீர்கள்? இறைவனுக்கு
மாறுசெய்யும் விஷயத்தில் பெற்றோருக்கு கட்டுப்பட இறைவன் ஒருபோதும்
கட்டளையிடவில்லை.
இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்,
நீர் அறியாத ஒன்றை அவர்கள் (பெற்றோர்கள்) எனக்கு இணைவைக்கும்படி
கட்டளையிட்டால் அவ்விருவருக்கும் கட்டுப்படாதே. (அல்குர்ஆன் 29:8)
படைத்தவனுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் படைப்பினங்களுக்கு கட்டுப்படாதே
என்பது நபிமொழி. இளைஞர்களே! ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்
வீட்டில் வற்புறுத்துகிறார்கள் என்று கூறி வரதட்சணை வாங்கி இதனால் சமுதாய
பெண்கள் சீர்கெட்டுப் போவதற்கும், விபச்சாரிகளாக மாறுவதற்கும்,
பெண்குழந்தை கருவிலேயே அழிக்கப்படுவதற்கும் முழுப்பொறுப்புதாரிகள்
நீங்கள்தான். மறுமையில் இறைவனின் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்படும்
நாளை பயந்து கொள்ளுங்கள். அதில் ஒரு அணு அளவு தீமைக்கும் தண்டனை கிடைத்தே
தீரும். வரதட்சணைக்கு பயந்து கொல்லப்பட்ட ஒவ்வொரு சிசுவுக்கும்
பின்னனியில் உங்கள் கரங்கள் இருக்கின்றது.
உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தை) வினவப்படும் போது. (அல்குர்ஆன் 81:8,9)
எனவே அன்பு சகோதரர்களே! வரதட்சணை என்ற இந்த நச்சு வேர்களை மூட்டோடு
அறுத்து எறிய வேண்டும்! பெற்றோர் வற்புறுத்தினால் அவர்களுக்கு
கட்டுப்படாது மஹர் கொடுத்து திருமணம் செய்ய ஆர்வம் காட்ட வேண்டும்.
மேலும் தாய்மார்களாக, அக்கா, தங்கைகளாக இருக்கும் பெண்கள் தனது
திருமணத்திற்கு தன் பெற்றோர் பட்ட கஷ்டத்தை கருத்தில் கொண்டு தன்மகனுக்கு
கேட்பது நியாயமற்ற செயல் என்று கருதி தம்வீட்டு ஆண்களை தடுக்க வேண்டும்!
எல்லாவற்றிற்கும் மேலாக வரதட்சணை வாங்கப்படக்கூடிய திருமணத்தை
ஜமாத்தார்களும் பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும்! தன் விருப்பத்திற்கு
மாறாக வரதட்சணை வாங்கப்பட்டால் திருமணம் முடிந்த பின் ஊரார் முன்னனியில்
திருப்பிக் கொடுத்து புரட்சி செய்ய வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வழக்கில் இருந்த
மஹர்தொகை புத்துயிர் பெற்று 101, 1001ம் காணாமல் போக வேண்டும்.
வரதட்சணையால் குமுறும் இதயங்கள் இறைவனிடம் கையேந்தினால் ஏற்படும்
விபரீதத்தை புரிந்து நாம் வரதட்சணை என்ற இந்த மாற்றுமத கலாச்சாரத்தை
அடியுடன் ஒழித்துக்காட்ட வேண்டும். வரதட்சணை துடைத்தெரியப்பட்டு
நபிவழியில் எளிமையாக நம் திருமணம் நடைபெற்று மறுமலர்ச்சி மலர வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
0 comments:
Post a Comment