Sunday, November 13, 2011

ஹசாரே அணியில் மோதல்: கெஜ்ரிவாலின் பேச்சுக்கு கிரண் பேடி பதிலடி

புதுடில்லி : அன்னா ஹசாரே அணியின் முக்கிய உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கிரண் பேடிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. "விமானக் கட்டணச் சலுகையை, கிரண் பேடி தவறாக பயன்படுத்தியிருக்கக் கூடாது' என்ற கெஜ்ரிவாலின் புகாருக்கு, "உண்மையில் என்ன நடந்தது என்று புரியாமல் பேசக்கூடாது' என, கிரண் பேடி பதிலடி கொடுத்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே குழுவில் உறுப்பினர்களாக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் குறித்து, சமீபத்தில் பல சர்ச்சைகள் எழுந்தன. மத்திய அரசின் வீர தீரச் செயலுக்கான விருது பெற்றுள்ள கிரண் பேடி, தனக்கு அளிக்கப்பட்ட விமானக் கட்டணச் சலுகையை, தவறாக பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதை முதலில் மறுத்த கிரண் பேடி, பின்னர், விமானக் கட்டணச் சலுகையால் கிடைத்த பணத்தை, சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி அளித்து விடுவதாக தெரிவித்திருந்தார். இந்த பிரச்னை, கடந்த சில வாரங்களுக்கு முன், பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அளித்த பேட்டியில், "தனக்கு கிடைத்த விமானக் கட்டணச் சலுகையை, கிரண் பேடி தவறாக பயன்படுத்தி விட்டார். அவர் அப்படி செய்திருக்க கூடாது. ஆனாலும், இது போன்ற தவறுகள், எதிர்காலத்தில் நடக்காது என, அவர் கூறியுள்ளார். கிரண் பேடி செய்தது போன்ற தவறை, நான் செய்திருக்க மாட்டேன்' என்றார். கெஜ்ரிவாலின் இந்த பேச்சு, கிரண் பேடிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கிரண் பேடி கூறுகையில், ""விமானக் கட்டணப் பிரச்னையில், உண்மையில் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளாமல், கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு முன், அதுகுறித்து பலமுறை நன்றாக யோசிக்க வேண்டும். அதற்கு பின்னரே, பேச வேண்டும்,'' என்றார்.

இதைத் தொடர்ந்து, இந்த பிரச்னையை சமாளிக்கும் வகையில், கெஜ்ரிவால் மீண்டும் கூறுகையில், "அன்னா ஹசாரே குழுவில் உள்ளவர்களுக்கு இடையே, எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஜன் லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும் என்பது தான், எங்களின் நோக்கம். தனிப்பட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டோம். எங்களை பிரிப்பதற்கு பல்வேறு பிரச்னைகளை சிலர் ஏற்படுத்துகின்றனர். ஆனாலும், நாங்கள் மலை போல் உறுதியாக இருக்கிறோம்' என்றார்.

ஹசாரே குழுவுக்குள் ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More