Sunday, November 13, 2011

எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதே அரசின் லட்சியம் - கலெக்டர் மாநாட்டில் முதல்வர் ஜெ., பேச்சு

சென்னை; தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க செய்வதே அரசின் லட்சியம் என்றும், அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஊறு ஏற்படாதவாறு அதிகாரிகள் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்றும் இன்று காலை துவங்கிய கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெ., பேசினார்.

மேலும் அவர் பேசுகையில்; மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதில் அரசு முழு அக்கறையுடன் செயல்படுகிறது. வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் நமது அரசில் இருக்கும். விவசாய முன்னேற்றதிற்கு கலெக்டர்கள் நல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திடமான நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கு நல்ல நிலைக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் நம்பிøக்கையை பெற்றுள்ளோம். புதிய சுகாதார ஆயுள் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. மதம், ஜாதி மோதல்கள் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின், முதல் முறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு, கோட்டையில் இன்று துவங்கியது. நில மோசடி வழக்குகள் மீதான நிலவரம், மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண, கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த வாய்ப்புகள் உள்ளன.

ஆட்சி மாற்றத்திற்குப் பின், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். தனது எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படும் அதிகாரிகளை, முக்கியப் பதவிகளில் முதல்வர் அமர வைத்தார். இவர்களை எல்லாம், ஒருங்கிணைத்து இதுவரை கூட்டம் நடத்தவில்லை.இதற்கிடையே, தேர்தலின்போது, ஜெயலலிதா அறிவித்த பல்வேறு நலத்திட்டங்கள், கடந்த ஆறு மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இலவச மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு, மின்விசிறி, இலவச அரிசி, விலையில்லா மடிக்கணினி, மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க ஊக்கத்தொகை திட்டம் என, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அரசின் நலத்திட்டங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருவதை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அமைந்தன. 10 மாநகராட்சிகளிலும், மேயர் பதவியை அள்ளியதோடு, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என, பல்வேறு அமைப்புகளிலும் அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.எனினும், பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்தால் எழுந்துள்ள பிரச்னை, கோட்டூர்புரம் அண்ணா நூலகம் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னை ஆகியவற்றை மையமாக வைத்து, மக்கள் மத்தியில் ஆளுங்கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில், எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவது, தமிழக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் ஏராளமான நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான வழக்குகள், தி.மு.க., பிரமுகர்கள் சம்பந்தபட்டவை. இந்த வழக்குகள் எல்லாம் பொய்யான, ஜோடிக்கப்பட்ட வழக்குகள் என, கருணாநிதி கூறி வருகிறார். எனவே, இந்த வழக்குகளில், உண்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு எழுந்துள்ளது.அதனால், இந்த வழக்குகளின் நிலவரங்களை அறியவும், அரசின் பல்வேறு நிர்வாகப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன், முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். அரசுக்கு, நிர்வாக நெருக்கடி பெரிய பிரச்னையாக உள்ளது. இலவச கிரைண்டர், மிக்சி, ஆடு, மாடு, லேப்-டாப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி உதவியை கேட்டும், இதுவரை கிடைக்கவில்லை. புதிய திட்டங்கள், நிர்வாக சீரமைப்புக்கு அதிக நிதி தேவைப்படும். அதற்கான நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில், மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடர்ச்சியாக கொட்டித் தீர்த்ததில், 50 பேர் உயிரிழப்பு மற்றும் பெரும் அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதும் அரசின் பார்வையில் உள்ள முக்கிய விஷயம்.இன்றைய கூட்டத்தில், கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் என இரு தரப்பினரும் பங்கேற்கும் கூட்டுக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தை முதல்வர் துவக்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா உரை நிகழ்த்துகிறார். இதில் சட்டம் - ஒழுங்கு உட்பட பல விஷயங்கள் குறித்த அரசின் அணுகுமுறை தெளிவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.நாளைய கூட்டத்தில், கலெக்டர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர். இதில், அரசின் நலத்திட்டங்கள், இதற்கு தேவையான நிதி அளவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, முதல்வர் ஆய்வு செய்கிறார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More