Wednesday, November 9, 2011

அடுத்த முறை பெட்ரோல் விலை உயர்த்தினால்...: மம்தா திடீர் பல்டி

புதுடில்லி : பெட்ரோல் விலை உயர்வுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள், பிரதமரை நேற்று சந்தித்துப் பேசிய பின், திடீர் பல்டி அடித்துள்ளார். " மீண்டும் ஒருமுறை பெட்ரோல் விலையை உயர்த்தினால், ஐ.மு., கூட்டணியில் தொடர்வதை, மறு பரிசீலனை செய்வோம்' என, அடக்கி வாசித்துள்ளார்.

கடந்த வாரம், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து வரும், பிரதான கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால், மத்திய அரசில் இருந்து வெளியேறுவோம்' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, எச்சரிக்கை விடுத்தார். இதனால், மத்திய அரசு கவிழ்ந்து விடுமோ என்ற பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை, நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் நடந்தது. அப்போது, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, பிரதமரிடம் அவர்கள் அளித்தனர்.

சந்திப்புக்குப் பின், திரிணமுல் காங்., எம்.பி., சுதீப் பந்தோபத்யாயா கூறியதாவது: பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான எங்களின் கருத்தை, பிரதமரிடம் விளக்கினோம். மீண்டும் ஒருமுறை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டால், திரிணமுல் காங்கிரஸ், அதை பொறுத்துக் கொள்ளாது என்பதையும் பிரதமரிடம் கூறினோம்.டீசல், சமையல் "காஸ்' ஆகியவற்றின் விலையை உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து, பிரதமரிடம் கேட்டபோது, அதுபற்றி எந்த தகவலும் தனக்கு தெரியாது என்றார். மத்திய அரசில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் பற்றிய விவரங்களை, எங்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு இடையே, நல்ல ஒருங்கிணைப்பு அவசியம் என்பதையும், பிரதமரிடம் எடுத்துக் கூறினோம்.இவ்வாறு, சுதீப் பந்தோபத்யாயா கூறினார்.

மம்தா பல்டி:இதற்கிடையே, நேற்று கோல்கட்டா வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த, மேற்கு வங்கத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்படி, பிரணாபிடம், மம்தா கேட்டுக் கொண்டார். பெட்ரோல் விலை உயர்வு குறித்து, பிரணாபிடம் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து, மம்தா பானர்ஜி கூறுகையில், "பெட்ரோல் விலை உயர்வு குறித்து, எங்கள் எம்.பி.,க்கள் டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவுள்ளனர். பிரதமருடன் என்ன பேசப்பட்டது என்பது பற்றிய விவரங்களை, கோல்கட்டா திரும்பியதும், எம்.பி.,,க்கள் என்னிடம் கூறுவர். ஆனாலும், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து, மறு பரிசீலனை செய்வோம்' என்றார்.

இதுகுறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையில், ஆரம்பத்தில், மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த மம்தா, அதன் பின் அடக்கி வாசித்து விட்டார்.பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறும்படி வலியுறுத்துவதை விட, மத்திய அரசின் முக்கிய முடிவுகள் குறித்து, தங்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கே, பிரதமருடனான சந்திப்பை, திரிணமுல் காங்., எம்.பி.,க்கள் பயன்படுத்திக் கொண்டனர். மம்தாவும், பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையை , மேற்கு வங்க மாநிலத்துக்கு அதிக நிதி பெறுவதற்காகவே பயன்படுத்தியுள்ளார்.இவ்வாறு, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரணாப் முகர்ஜி மத்திய நிதி அமைச்சர்:""பெட்ரோல் விலை உயர்வு, வாபஸ் பெறப்படுமா என்பது பற்றி, எந்த கருத்தையும் நான் தெரிவிக்க முடியாது. இது குறித்து, திரிணமுல் காங்., எம்.பி.,க்களுடன், பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார். இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தான், இறுதி முடிவு எடுப்பார். அவர் எடுக்கும் முடிவு அமல்படுத்தப்படும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More