Wednesday, November 9, 2011

பெங்களூரு கோர்ட்டில் 22ம் தேதி ஆஜராக ஜெயலலிதாவுக்கு உத்தரவு

பெங்களூரு : "சொத்துக் குவிப்பு வழக்கில், நவம்பர் 22ம் தேதி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும்' என, பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை எதிரிலுள்ள சிறப்பு கோர்ட்டில், அக்டோபர் 20, 21 ஆகிய இரு நாட்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜரானார். இரண்டு நாட்களிலும், 579 கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் முடிவடையாததால், நவம்பர் 8ம் தேதி, மீண்டும் ஆஜராக வேண்டும் என்று, சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் சென்ற ஜெயலலிதா, நேரில் ஆஜராகாமல் இருக்க, விலக்கு கோரினார். சுப்ரீம் கோர்ட் நிராகரித்து, தேதியை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். அதற்கு, சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை எதிரிலுள்ள சிறப்பு கோர்ட்டில், நேற்று காலை 11 மணிக்கு, நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெ., தரப்பில் வழக்கறிஞர் குமார் ஆஜராயினர்.குற்றம் சாட்டப்பட்டவர்களில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஆஜராயினர்.

ஜெ., தரப்பில் ஆஜராகாமல் இருக்க, அவரது வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்த பின், வாதிட்டபோது கூறியதாவது:தமிழகத்தில், சில நாட்களாக மழை தீவிரமாக உள்ளதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் மழைக்கு பத்துப் பேர் பலியாகியுள்ளனர். இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் தமிழக முதல்வர் என்பதால், மழை சேதப் பகுதிக்கு, நேரில் சென்று பார்வையிட்டு, நிவாரணம் வழங்கி வருகிறார். அதனால், இன்றைய (நேற்று) தினம், அவரால் கோர்ட்டுக்கு வர இயலவில்லை.சுப்ரீம் கோர்ட், அவரது வசதிக்கேற்ப ஒரு தேதியைத் தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளது. இம்மாதம் 13, 14 ம் தேதிகளில், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடக்கவுள்ளது. தொடர்ந்து அவருக்குப் பணிகள் இருப்பதால், நவம்பர் 22ம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம். அன்றைய தினம், அவர் ஆஜராவதில் பிரச்னை இருக்காது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.

நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, "17ம் தேதி ஜெயலலிதா ஆஜராக வேண்டும்' என்றார்.

இதற்கு, ஜெ., தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கை, 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து, "தேவைப்பட்டால், 23ம் தேதியும் ஆஜராக வேண்டியிருக்கும்' என்றார். நேற்றும், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More