"பயங்கரவாதமும், நக்சலிசமும் மிக முக்கிய சவால்களாக உள்ளன. பயங்கரவாத சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கவே கூடாது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் எதுவாக இருந்தாலும், அதை முழுமூச்சோடு எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: நாடு தற்போது பல பிரச்னைகளை எதிர் கொண்டாலும், பயங்கரவாதமும், நக்சலிசமும் மிக முக்கிய சவால்களாக உள்ளன. எந்தக் காரணத்தைக் கொண்டும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது என்பதையே, சமீபத்திய டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது. பயங்கரவாதம் எனும் கோரமான அனுபவத்திற்கு, திரும்பத் திரும்ப இந்த நாடு உட்படுவது வேதனையளிக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் எதிர்மறை கருத்துக்களை வைப்பதற்கு என, நிறைய அமைப்புகளும், வழிகளும் உள்ளன. வன்முறை இல்லாத வழிகளில், எந்த கருத்துகளையும் எடுத்து வைக்கலாம்.
சித்தாந்தத்தின் பேரில், அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பதை எந்த ஒரு நாகரிக சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாது. இங்கு மாநில முதல்வர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கூடியுள்ளனர். பயங்கரவாத சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறவிட மாட்டோம். எத்தகைய அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதை முழுமூச்சாக எதிர்கொண்டு முறியடிப்பது என, அனைவருமே சபதம் ஏற்க வேண்டும். அதையே இம்மாநாட்டு செய்தியாக அளிக்க அனைவரையும் வேண்டுகிறேன். புலனாய்வு வசதிகள், உளவு சேகரிப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையுமே மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய உளவு கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு, உளவு தகவல்கள் நிறைய சேகரிக்கப்பட்டு, அனைவருடனும் பரிமாற்றமும் செய்யப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மண்டலத்திற்கும், தேசிய பாதுகாப்பு படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத சம்பவம் எங்காவது நிகழ்ந்தால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே சம்பவ இடத்திற்கு இந்த படை சென்று விடும். கடற்கரை ஓரங்களிலும் பாதுகாப்பு வசதிகள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. கடலோர போலீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கைகள், உயர்த்தப்பட்ட வண்ணம் உள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் முக்கிய வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 29 வழக்குகள் அந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு, அதில் 20 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் மட்டுமல்லாது, மாநிலங்களுக்கு இடையேயும் தகவல் பரிமாற்றம் செய்ய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சமூகத்தில் மக்கள் மத்தியில் எழுப்பப்படும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் போது, போலீசார் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அமைதி வழியில் நடக்கும் போராட்டமா அல்லது குற்றப் பின்னணியுடன் நடக்கும் போராட்டமா என்பதை இனம் காண வேண்டும். அதன்பிறகே போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் தங்களது அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழும். பொதுமக்களை கையாளும்போது, மிகுந்த கவனமும், பொறுமையும் அவசியமாக இருந்தால் மட்டுமே, சமூக அமைதியும் மத நல்லிணக்கத்தையும் காத்திட முடியும். இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.





0 comments:
Post a Comment