Sunday, September 11, 2011

60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 1000 மாத பென்ஷன் வழங்க தமிழக அரசு முடிவு

சென்னை: விவசாயிகள் மற்றும் விவசாய குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று சட்டசபையில் அறிவித்தார். "60 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள், தொழிலாளர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியம், விவசாயிகளின் பிள்ளைகள் கல்லூரிப் படிப்பு முதல் உயர்கல்வி வரை படிக்க ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை' என்பது உட்பட, பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.

சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில், புதிய விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம், "முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்' என்று அழைக்கப்படும். திட்டத்தின் கீழ், 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் ஆகியவற்றை உடைமையாகக் கொண்டு, அந்த நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட குறு, சிறு விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பயனடைவர்.

புதிய திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடும் கணவன், மனைவி இருவருக்கும் சிவப்பு வண்ணத்திலும், அவர்களைச் சார்ந்து வாழும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இந்த அடையாள அட்டைகளைப் பெறுபவர்கள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் தகுதிகளைப் பெறுகின்றனர். விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்கள் கல்லூரிக் கல்வி மற்றும் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், ஐ.டி.ஐ.,- பாலிடெக்னிக் மற்றும் இதர பட்டயப் படிப்புகளுக்கு, ஆண்டிற்கு 1,250 ரூபாய் முதல் 1,950 ரூபாய் வரை வழங்கப்படும். இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு, 1,750 முதல் 2,500 ரூபாய் வரை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கு 2,250 ரூபாய் முதல் 3,750 ரூபாய் வரை வழங்கப்படும். சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கு இளங்கலையில் 2,250 ரூபாய் முதல் 4,750 ரூபாய் வரையிலும், முதுகலையில் 4,250 ரூபாய் முதல் 6,750 ரூபாய் வரையிலும் கல்வி உதவித்தெகை வழங்கப்படும்.
சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறாதவர்கள், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். ஆணுக்கு 8,000 ரூபாயும், பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். அறுபது வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.


முந்தைய அரசு கொண்டு வந்த சட்டத்தின்படி, இயற்கை மரணம் மற்றும் விபத்து போன்ற நிகழ்வுகளில்விவசாய குடும்பத் தலைவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. அது தற்போது மாற்றப்பட்டு, ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இவர்கள் இருவருக்குமே தனித்தனியாக அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால், இருவரில் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் நிவாரணம் வழங்கப்படும். திட்டத்தின் உறுப்பினரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ இறந்தால், அந்த குடும்பத்திற்கு, நேரடியாக ஈமச் சடங்கிற்கான உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக, இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது. மேலும், குடும்பத் தலைவர் இறந்தால் மட்டுமே ஈமச்சடங்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற நிபந்தனையும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

உயர்நிலைக் குழு: "முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்' மாவட்ட அளவில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலமாக செயல்படுத்தப்படும். திட்ட செயல்பாடுகளை மேற்பார்வை செய்ய, உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும்.

புதிய நடவடிக்கை: முந்தைய தி.மு.க., அரசு கொண்டு வந்த சட்டத்தில், மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களின் கீழ் ஏதேனும் கல்வி உதவித்தொகையை ஒரு முறை பெற்றுவிட்டால், இத்திட்டத்தின் (விவசாய குடும்ப உறுப்பினர்கள்) கீழ் கல்வி உதவித்தொகை பெற முடியாத நிலை இருந்தது. இது மாற்றப்பட்டு, வேறு எந்த திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றாலும், தற்போது அறிவிக்கப்படும் புதிய திட்டத்தின் கீழும் கல்வி உதவித்தொகை பெற முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More