
நேற்று நள்ளிரவையொட்டி டெல்லியின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 ஆக பதிவாகியது. டெல்லி மட்டுமல்லாமல் அதன் துணை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளுக்கும், தெருக்களுக்கும் வந்து நின்றனர்.
ஹரியானா மாநிலம் சோனீபட்டில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. டெல்லி தவிர காஜியாபாத், நோய்டா, கர்கான் ஆகிய நகரங்களிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இரவு சரியாக 11.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பத்து விநாடிகளுக்கு இது நீடித்தது.
இதுகுறித்து மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் சைலேஷ் நாயக் கூறுகையில், நிலநடுக்கத்தின் அளவு 4.2 ரிக்டராக இருந்தது. சோனீபட்டை மையமாக கொண்டிருந்தது என்றார்.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பொருட்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்துத் தகவல் இல்லை. சண்டிகர், சோனீபட் பகுதியிலும் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். மிகக் குறைந்த அளவில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சோனீபட் மக்கள் கூறினர்.
அமிதாப்பச்சன் டிவிட்டர்
டெல்லி நிலநடுக்கம் குறித்து அமிதாப் பச்சன் தனது டி்விட்டரில் தெரிவித்திருந்தார். அதில், காலையில் டெல்லியில் குண்டுவெடிப்பு. இப்போது 6.6 ரிக்டர் நிலநடுக்கம். இப்போதுதான் எனது மகளுடன் பேசினேன். அனைவரும் பயந்து போயுள்ளனர். ஆனால் பாதுகாப்பாக உள்ளனர்.
குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன் என்று அமிதாப் கூறியிருந்தார்.
0 comments:
Post a Comment