Sunday, September 11, 2011

முதலில் நோட்டு; அப்புறம் சீட்டு; கடைசியில்தான் வேணும் ஓட்டு!

தேச நலனைப் பற்றி சிந்தித்த கல்வியாளர்களும், சமூகத்துக்காக உழைத்த தன்னலமற்ற தலைவர்களும், அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளும் அலங்கரித்த உள்ளாட்சி மன்றங்கள், இன்று, ஊழல் அரசியலுக்குப் பாடம் கற்றுத்தரும் உள்ளூர் துவக்கப்பள்ளிகளாக மாறி விட்டன. கட்சி உறுப்பினர் என்ற ஒரு தகுதி இருந்தால், "யாரும்' கவுன்சிலராகி விடலாம் என்பதே இன்றைய சூழல்.

"தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி' என்பதற்கேற்ப, அரசியல்கட்சிகளை வழி நடத்தும் தலைவர்களும், தங்களுடைய, "அரசியல் சேவை'யின் வழித்தோன்றல்களாகத்தான் கவுன்சிலர்களை உருவாக்குகின்றனர். "ஊருக்கு என்ன செய்வீங்க?' என்று கேட்பதை விட, "கட்சிக்கு என்ன செஞ்சீங்க?' என்றுதான் கட்சித்தலைமைகளும் கேட்கின்றன. அதனால்தான், ஊழலின் பிறப்பிடங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மாறிக்கொண்டிருக்கின்றன. இதோ... அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓடுகளம் தயாராகிக்கொண்டிருக்கிறது. கல்வித்தகுதி, தேசப்பற்று, சமூகப் பார்வை என, எந்தத் தகுதியும் இல்லாத அரசியல்வாதிகள் பலரும்,மேயர், கவுன்சிலர் என, வண்ணக்கனவுகளில் மிதக்கத் துவங்கி விட்டனர். பல லட்சம் பேர் காணும் ஒரே கனவான இந்த, கவுன்சிலர் கனவு, எத்தனை பேருக்கு நனவாகும் என்பது தெரியவில்லை. ஆனால், இந்தக் கனவையே மூலதனமாக்கி, விருப்ப மனு என்ற பெயரில் அரசியல் கட்சிகள் வசூலை வாரிச் சுருட்ட ஆரம்பித்துள்ளன. இந்த கட்சிகளின் விருப்ப மனுவில் கேட்கப்பட்டுள்ள விவரங்களே, கட்சித்தலைமையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றன.

அ.தி.மு.க., - அ.தி.மு.க.,வினருக்கு தரப்பட்டுள்ள விருப்ப மனுவில், பெயர், தாய், தந்தை, கணவர் பெயர், கல்வித்தகுதி, முகவரி போன்ற விவரங்களைத் தவிர்த்து, 18 விதமான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. ஜாதி, உட்பிரிவு இருந்தால் அதன் விவரம், கட்சியில் தற்போது வகிக்கும் பதவி, போட்டியிட விரும்பும் வார்டு ஆகிய தகவல்கள் கோரப்பட்டுள்ளன. அங்கு போட்டியிட விரும்புவதற்கான முக்கிய காரணம், போட்டியிடும் பகுதியில் சொந்த ஊர் உள்ளதா, தேர்தல் செலவு எவ்வளவு ஆகும், எவ்வளவு செலவு செய்ய முடியும், மீதித் தொகையை எப்படி சரி செய்வீர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. வெற்றி வாய்ப்பு குறித்தும் சுருக்கமாக விவரம் தருமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கட்சியில் எந்த ஆண்டிலிருந்து உறுப்பினராக இருக்கிறீர்கள், கட்சி வளர்ச்சிக்குச்செய்த பணிகள், கட்சிப் போராட்டங்களில் சிறை சென்ற விவரம், வழக்கு உள்ளதா, தண்டனை பெற்றவரா போன்ற விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன. கட்சியிலிருந்து எப்போதாவது நீக்கப்பட்டிருக்கிறீர்களா, மீண்டும் எப்போது சேர்க்கப்பட்டீர்கள், என்ற முக்கியமான கேள்வியும் இடம்பெற்றுள்ளது. ஏதாவது சாதி அமைப்புகளில் தொடர்பு இருக்கிறதா என்பது உட்பட மொத்தம், 22 விவரங்களுடன் அந்த விருப்ப மனு தயாரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, "தற்போது நான் செலுத்தியுள்ள வேட்புமனு விண்ணப்பக் கட்டணத்தொகையை நான் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் திரும்பக் கோர மாட்டேன்' என்ற உத்தரவாதமும் பெறப்பட்டுள்ளது.

பத்து ரூபாய் படிவம்: ஆளும்கட்சியைப் போல, நான்கு பக்கப் படிவத்தை, 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் நிலையில், தி.மு.க., இப்போது இல்லை. ஒரே பக்கம்தான் படிவம்; விலையும் 10 ரூபாய்தான். அதையும் சில மாவட்டங்களில் இலவசமாகத் தருகிறார்கள்; படிவத்தில் கேள்விகளும் அதிகமில்லை; கேட்டதிலும் கஷ்டமான கேள்விகளில்லை. முக்கியமாக, கல்வித்தகுதியே கேட்கப்படவில்லை. பெயர், முகவரி உள்ளிட்ட பல விவரங்களுடன், கட்சியில் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி அமைப்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்கனவே வகித்துள்ள பொறுப்பு, 2006 உள்ளாட்சித் தேர்தலில் அந்த வார்டு, எந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது ஆகிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து, வெற்றி வாய்ப்புக்கான காரணங்களை கூற, சிறிது இடம் தரப்பட்டுள்ளது. படிவத்தை நிரப்பி கொடுக்கும் போது கட்சி நிர்ணயித்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இது புது மாதிரி: அ.தி.மு.க., வுக்கு அடுத்ததாக, தி.மு.க.,வினரை விட, தே.மு.தி.க.,வினரிடம் தான் விருப்ப மனு தருவதில் அதிக உற்சாகம் காணப்படுகிறது. அதிகளவிலான இளைஞர்களும், பெண்களும் விருப்ப மனு தருவதைப் பார்க்க முடிகிறது. மற்ற விவரங்களை விட, கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கு விருப்ப மனுவில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அ.தி.மு.க., பாணியிலேயே, விருப்ப மனு விண்ணப்பக் கட்டணத்தொகையைச் செலுத்திய பின்பே, படிவம் வழங்கப்படுகிறது. அதேபோலவே, "வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படா விட்டாலும், திரும்பக் கேட்க மாட்டேன்' என்ற உத்தரவாதமும் வாங்கப்படுகிறது. ஆனால், பல விஷயங்களில் புதிய அணுகுமுறை கடை பிடிக்கப்பட்டுள்ளது. சுய விவரங்களைத் தவிர்த்து, கட்சியில் வகிக்கும் பதவி, கல்வித்தகுதி, தொழில், மாத வருமானம், தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் ஆகிய விவரங்கள் மட்டுமே விருப்ப மனுவில் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விருப்ப மனுவிலும், உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்களின் கருத்துகளை எழுத பெரும்பகுதி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலர், பகுதிக் கழக செயலர் மற்றும் பொறுப்பாளர்கள் இருவர் கையெழுத்துப் போட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேயருக்கு, 15 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி கவுன்சிலருக்கு 5,000 ரூபாய் செலுத்தினால்தான் படிவம் தரப்படுகிறது; அந்த பணம் திரும்பக்கிடைக்காது என்று தெரிந்தும் ஏராளமானவர்கள் மனுச் செய்வது, ஆச்சரியமான காட்சி.

தமிழகத்திலுள்ள முக்கியமான இந்த மூன்று கட்சிகளைத் தவிர, தேசியக் கட்சியான பா.ஜ., கடந்த தேர்தலைப் புறக்கணித்த, ம.தி.மு.க., ஆகிய கட்சிகளின் சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. கம்யூ., கட்சிகள் எப்போதுமே விருப்ப மனுக்கள் வாங்குவதில்லை; விருப்பம் இருந்தாலும் மனுவை யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் விழிப்பது காங்கிரசார் மட்டும்தான்.

தாமரைக்கும் தாகம்: பா.ஜ.,விருப்ப மனுவில், சுய விவரங்களைத்தவிர்த்து, கட்சியில் எத்தனை ஆண்டுகளாக உறுப்பினர், தீவிர உறுப்பினரா என்ற கேள்வியும் இடம் பெற்றுள்ளது. தற்போது உள்ளாட்சி பிரதிநிதியா, ஏற்கனவே போட்டியிட்ட விவரம் ஆகிய தகவல்களையும் தருமாறு, பா.ஜ., மாநில தலைமை கோரியுள்ளது. அத்துடன், "இந்த தேர்தலில் எவ்வளவு செலவழிக்க இயலும்?' என்று கேட்டு விட்டு, அதற்குக் கீழே, சொந்த பணம்----, தங்களது சொந்த முயற்சியில் வசூல்----' என்று விவரம் கேட்டுள்ளது. நாட்டை ஆண்ட கட்சி, ஆளும்கட்சி எல்லாவற்றுக்கும், "நோட்டை' பற்றியே கவலை அதிகம் தெரிகிறது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More