Sunday, September 11, 2011

முதல் வெற்றி கிடைக்குமா? * நம்பிக்கை உள்ளது என்கிறார் தோனி *இன்று இங்கிலாந்துடன் நான்காவது மோதல்

லார்ட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று லார்ட்சில் நடக்கிறது. ஏற்கனவே இரு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை இழக்காமல் இருக்க, கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. இதில் எப்படியும் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் கேப்டன் தோனி.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது போட்டி, நேற்று முன்தினம் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் விளையாடிய இந்திய அணிக்கு ஜடேஜா (78), தோனி (69) ஆறுதல் தர, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டது. பின் 43 ஓவரில் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என, இலக்கு மாற்றப்பட்டது.
கீஸ்வெட்டர் (51), போபரா (40) கைகொடுக்க, இங்கிலாந்து அணி 41.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:
ஒருநாள் போட்டியில் முதல் 10 ஓவர்கள் எப்போதும் முக்கியமானவை. மூன்றாவது போட்டியில் இந்த ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தோம். இதுபோன்று அடுத்தடுத்து நடப்பதால் தான் தோல்வி கிடைக்கிறது. ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலை இருந்திருந்தால் இங்கிலாந்து வீரர்களுக்கு கடினமாக இருந்திருக்கும்.
நன்மையும், தீமையும்:
மழை காரணமாக இலக்கு மாற்றப்பட்டதில் நன்மையும், தீமையும் இருந்தது. "சேசிங்' இலக்கில் 17 ரன்கள் மட்டும் குறைத்தது நன்மை தான். அதேநேரம், பந்து ஈரப்பதமாக இருந்தது தீமையானது. இதனால், சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இதைவிட பெரும் சிரமமாக இருந்தது. இதனால், இங்கிலாந்து வீரர்கள் எளிதாக பேட்டிங் செய்தனர்.
ஜடேஜா நம்பிக்கை:
முதலில் பேட்டிங் செய்தபோது முக்கிய விக்கெட்டுகளை விரைவாக இழந்ததும் ஒரு காரணம். பின்வரிசை வீரர்கள் தான் ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதேபோல, அஷ்வினும் சரியான இடத்தில் பவுலிங் செய்தார்.
நெருக்கடியாகி விடும்:
பேட்டிங்கில் நான் முன்னதாக களமிறங்கிவிட்டால், பின் வரும் இளம் வீரர்களுக்கு நெருக்கடியாகி விடும். ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் வரும் போது, பின் வரிசை வீரர்களை வைத்து சமாளித்துவிடலாம்.
நம்பிக்கை உள்ளது:
மொத்தத்தில் வீரர்கள் 100 சதவீதம் திறமை வெளிப்படுத்த தயாராக உள்ளனர். தொடரை இன்னும் இழக்கவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் வீரர்கள் உள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு தோனி கூறினார்.
---
கட்டாய வெற்றி தேவையா
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் (0-4), "டுவென்டி-20' தொடர்களை ஏற்கனவே இழந்து விட்ட இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரை கைப்பற்றும் வாய்ப்பும் பறிபோனது. இங்கிலாந்து 2-0 என முன்னிலையில் உள்ளதால், அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, தொடரை சமன் செய்யலாம். இதனால், இந்திய அணி இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
---
மழை வரும்
ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் மழை இடையூறு செய்தது. இந்நிலையில் இன்று போட்டி நடக்கும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலும், மழை வர 20 சதவீத வாய்ப்பு உள்ளது. குறைந்த, அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியசாக இருக்கும்.
---
ராசியான லார்ட்ஸ்
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4ல் வென்றுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளில் 3ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More