தனியார் திசு வளர்ப்பு மையம் ஒன்றில், 1,150 மாத சம்பளத்தில், சாதாரண பணியாளராக வேலை பார்த்த கோயம்புத்தூர் பூங்கொடியின் இன்றைய வருமானம், எட்டு லட்சம்! 'இது என்ன மேஜிக்..?’என்று மூக்கின் மீது விரல் வைக்க வேண்டாம். ஆர்வம், உழைப்பு, தன்னம்பிக்கை சேர்ந்து செய்யும்'லாஜிக்கலான’ நிஜம்தான் இது.
''நினைச்சா தொழிலாளியும் முதலாளி ஆகலாம்ங்கறதுக்கு நான் ஒரு நல்ல உதாரணம்தானே..?'' என்று பெருமையுடன் பேச்சை ஆரம்பிக்கும் பூங்கொடி, தனியார் திசு வளர்ப்பு மையத்தில் எட்டு ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவத்தை முதலீடாக வைத்து, சிறிய அளவில் தாவர திசு வளர்ப்பு மையம் ஒன்றை இரண்டு வேலையாட்களுடன் எட்டு வருடங்களுக்கு முன் தொடங்கி, திசு வளர்ப்பு முறையில் வாழை நாற்றுகள் உற்பத்தி செய்து விற்க தொடங்கினார். இன்று இவரிடம் வேலை பார்ப்பவர்கள் 40 பேர். ஆண்டுக்கு ஒரு லட்சம் வாழை நாற்றுகளில் உற்பத்தியை தொடங்கியவர் இப்போது விற்பனை செய்வது 30 லட்சம் நாற்றுகள்!
''என்னோட பூர்விகம் கோயம்புத்தூர்தான். இளங்கலை விலங்கியல் படிச்சு முடிச்சதும் வீட்ல திருமணத்தை முடிச்சுட்டாங்க. கணவர், உள்ளூர்லயே இரும்பு சம்பந்தமான தொழில் செய்தார். என் குழந்தைக்கு ரெண்டு வயசானப்போ, 'நாமளும் ஏதாச்சும் வேலைக்குப் போனா வரவு, செலவு சிரமமில்லாம இருக்குமே’னு வேலை தேட ஆரம்பிச்ச நான், தனியார் திசு வளர்ப்பு மையத்துக்கு ஆள் தேவைங்கற விளம்பரம் பார்த்து, அதுல சேர்ந்தேன்.
அது, நகர எல்லையைத் தாண்டி 15 கிலோ மீட்டர் தொலைவுல, குக்கிராமத்துல இருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கி மூணு கிலோ மீட்டர் காட்டு வழியில நடக்கணும். ஆரம்பத்துல இது அலுப்பைத் தந்தாலும், வாழைக்கன்றுகள் உற்பத்தி செஞ்சு விவசாயிகளுக்கு கொடுக்கறது, வயலுக்கே போய் பராமரிப்பு ஆலோசனைகள் சொல்றது, மகசூல் எடுத்த விவசாயிகள் 'மெகா சைஸ்’ வாழைத்தாரோட எங்க மையத்துக்கு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துறதுனு... இந்த ஜீவனுள்ள தொழில் எனக்கு ரொம்பப் பிடிச்சுது'' என்பவரை அவர் வாங்கிய குறைவான சம்பளம்தான், மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது.
''போய், வர்ற பஸ் செலவுக்கே பாதி சம்பளம் கரைஞ்சுடுச்சு. 'இந்தக் காசுக்கு எதுக்கு காடு மேடு தாண்டிப் போற..? நகைக்கடை, ஜவுளிக்கடைனு சிட்டியிலயே ஒரு வேலையைப் பாரு’னு வீட்டுல எல்லாரும் சொல்ல, நான் நேசிச்சுப் பார்த்துக்கிட்டிருந்த அந்த வேலையை விட மனசில்ல. 'பார்க்கறது சாதாரண வேலை. கட்டுக் கட்டா வருமானம் பார்க்கற மொதலாளி மாதிரி வேலையை விடமுடியாதுனு பேசறியே?' அப்படினு சிலர் கிண்டலடிக்க, 'அதானே..? நாமளே முதலாளி ஆன என்ன?’னு சீரியஸா யோசிக்க ஆரம்பிச்சேன். எட்டு வருஷம் அந்தத் தொழிலை முழுசா தெரிஞ்சுக்கிட்ட அனுபவம் தெம்பு கொடுக்க, பார்த்துட்டு இருந்த வேலையை தைரியமா விட்டேன்''எனும் பூங்கொடி, நிதானமாக அடுத்தடுத்த ஆயத்தங்களில் இறங்கியிருக்கிறார்.
''திசு வளர்க்க தேவையான உபகரணங்கள் வாங்கணும். அதுக்கு பல ஆயிரங்கள் வேணும். அங்க,இங்க கடன் கேட்டுப் பார்த்தேன். ஆண்கள் கடன் கேட்டாலே ஆயிரத்து எட்டு 'நுனை’பேசுறவங்ககிட்ட, ஒரு பெண்ணா நான் பட்ட ஏளனத்துக்கும் பரிகாசத்துக்கும் பஞ்சமே இல்ல. என் தாலிக் கொடியில இருந்து எல்லா நகைகளையும் அடகு வெச்சு, ரெண்டு பணியாட்களோட சின்ன அளவுல தொழிலைத் தொடங்கினேன். ஆனா, திருப்தியான வகையில திசு வாழைக்கன்றுகளை உற்பத்தி செஞ்சு கொடுக்க முடியல. பெருவாரியான கன்றுகள் தரமில்லாம இருந்துச்சு. அதையெல்லாம் விவசாயிகள் தலையில கட்ட மனசில்ல. எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் சரி... தரம் இழக்கக்கூடாதுங்கறதுல உறுதியா நின்னேன்.
என் பட்டதாரி சான்றிதழைக் கொடுத்து, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மூலமா எட்டு லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். ஒரு கட்டத்துல தரமான கன்றுகளை நான் உருவாக்க..., விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைச்சு, மத்தவங் களுக்கும் அவங்களே பரிந்துரைச்சாங்க. விளைவு... நிறைய ஆர்டர்களும் வரத் தொடங்குச்சு. வேளாண் தோட்டக்கலைத் துறை, வாழைக் கன்றுகளுக்காக நடத்தின டெண்டர்லயும் கலந் துட்டு கணிசமா ஆர்டரை எடுத்தேன்'' என்று வெற்றி ஏணியில் ஏறிய கதை சொன்னவர்,
''வாழைக்கன்றுகள் மட்டுமே திசு வளர்ப்பில் செஞ்சு வந்த நான், அது தந்த வெற்றியில கரும்பு,மூங்கில், மலைவேம்பு மற்றும் அலங்காரச்செடிகள் உற்பத்தியையும் கையில எடுத்தேன். மாவட்டம்,மாநிலம்னு கொஞ்சம் கொஞ்சமா விரிஞ்சு வேரூன்றி ஒரு கட்டத்துல இந்தியா முழுக்க திசுக்கன்றுகள் விநியோகம் செஞ்சு வந்த என் நிறுவனம்... இப்போ ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா,இலங்கை போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யுது'' நிறைவான புன்னகை பூங்கொடி முகத்தில். (நன்றி - விகடன்)





0 comments:
Post a Comment