Saturday, September 10, 2011

17 ஆண்டுகளுக்கு பின்னர் தடா இறுதி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு


 மதுரை வடக்கு ஆவணி மூலவீதியை சேர்ந்தவர் ராஜகோபாலன்(46). இந்து முன்னணி மாநில தலைவராக இருந்த இவரை 1994ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி வீட்டில் வைத்து ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. 

இது குறித்து மதுரை திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மறு நாளே இவ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து தடா வழக்காக  சென்னை சிட்டி சிவில் கோர்ட் தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

2 ஆண்டுகள் கழித்து இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த சாகுல்ஹமீது, முகமது சுபைர், ஜாகீர் உசேன், மதுரை சீனி நயினா முகமது, அப்துல் அஜீஸ், ராஜா உசேன் உட்பட 6 பேரை  தடா சட்டத்தின் கீழ் சிபிஐயினர் கைது செய்தனர். 

இவ்வழக்கு விசாரணை நெல்லை (முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்) தடா நீதிமன்றத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இவ்வழக்கில் 32 அரசு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 74 சான்று ஆவணங்களும், 13 சான்று பொருட்களும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. 

17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை சம்பவத்திற்கான விசாரணை முழுவதும் முடிவடைந்த நிலையில், நெல்லை தடா கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்ததால் வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரும் இன்று கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டனர்.  
 
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு,தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட தடா வழக்குகளில் இந்த ஒரு வழக்கு மட்டுமே தீர்ப்புக்காக காத்திருந்தது குறிப்பிட த்தக்கது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சாகுல்ஹமீது, முகமது சுபைர், ஜாகீர் உசேன், அப்துல் அஜீஸ் ஆகியோர் கோவை குண்டுவெடிப்பு வழக்கு, திண்டுக்கல் இரட்டை கொலை வழக்கு, கோவை இந்து முன்னணி பிரமுகர் வீரகணேசன் கொலை வழக்கு ஆகியவற்றில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராகவன் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.17 ஆண்டுகளுக்கு பின்னர் நெல்லை தடா நீதிமன்றம் இத்தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More