Saturday, September 10, 2011

கைது நடவடிக்கைகள்: திமுக வழக்கறிஞர்களுடன் கருணாநிதி ஆலோசனை- அழகிரி புறக்கணிப்பு

Karunanidhiசென்னை: திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதை சட்டரீதியில் எதிர்கொள்வது தொடர்பாக திமுகவின் வழக்கறிஞர் பிரிவினருடன் அக் கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இதற்காக மாநிலம் முழுவதும் இருந்தும் திமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

கைது நடவடிக்கைகளை சட்டரீதியில் சந்திப்பது, கைது செய்யப்பட்ட திமுகவினர் விடுதலையாக உதவுவது ஆகியவை குறித்தும், இந்தக் கைது நடவடிக்கைகளூக்கு பதில் நடவடிக்கை எடுப்பது குறித்தும் திமுக வழக்கறிஞர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி ஆலோசனை நடத்துகிறார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதால் அவர் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அழகிரி, தென் மாவட்ட நிர்வாகிகள் புறக்கணிப்பு:

மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரி இதில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று காலை டெல்லியில் இருந்து அழகிரி நேராக மதுரை சென்றுவிட்டார். சென்னை வழக்கறிஞர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. அழகிரியைத் தொடர்ந்து மதுரை உட்பட தென்மாவட்ட செயலாளர்களும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

முன்னதாக தென் மாவட்ட வழக்கறிஞர்களுடன், மாவட்டச் செயலாளர்களும் சென்னை வருவதற்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டச் செயலாளர்கள் வராததால், திமுக வழக்கறிஞர்கள் மட்டும் தனி பேருந்தில் சென்னை சென்றுள்ளனர்.

வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனு தள்ளுபடி:

இந் நிலையில் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது 4 நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சேலம் அங்கம்மாள் காலனி மற்றும் பிரிமியர் மில் நில அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார்.

சேலம் நகைக்கடை உரிமையாளர் பிரேம்நாத்தின் குடும்பத்துக்கு சொந்தமான 12 ஆயிரத்து 676 சதுர அடி நிலத்தை வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவருடைய தரப்பினர் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம், அவரது தம்பி மகன் சுரேஷ்குமார், வக்கீல் தெய்வலிங்கம் ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

ஆனால், மாவட்ட முதன்மை நீதிபதி பாஸ்கரன் இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More