Thursday, September 15, 2011

மார்க்சிஸ்ட்டுகளும் நில ஆக்கிரமிப்பு 'உத்தமர்களும்'... கருணாநிதி

சென்னை: வரலாறு படைத்த தி.மு.க. அரசின் விவரங்கள் எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி படிக்க வேண்டிய பால பாடமாகி விட்டதே என்பதுதான் நமது கவலை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்,

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனியாக மானிய கோரிக்கை விவாதத்தை நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலபாரதி பேரவையில் நன்றி தெரிவித்துப்பேசியதாக செய்தி வந்துள்ளதே?.

பதில்: 1969ல் நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன்தான் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலனுக்கு "தனி இயக்குநர் அலுவலகம்'' அமைக்கப்பட்டது. பின் ஆதிதிராவிடர் நலனிலும், பழங்குடியினர் நலனினும் தனித்தனியே சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்பதற்காக 2000 ஆண்டில், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல இயக்ககத்தை "ஆதிதிராவிடர் நல இயக்ககம்'', "பழங்குடியினர் நல இயக்ககம்'' என இரண்டு தனித்தனி இயக்குநர்களின் கீழ் செயல்பட வழிவகுக்கப்பட்டதும் என்னுடைய ஆட்சிக்காலத்திலே தான்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிபற்றியெல்லாம் அவையிலே அந்தத் துறையின் அமைச்சர் சில புள்ளி விவரங்களைத் தந்துள்ளார். 1991-1996 ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலனுக்காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 696 கோடியே 16 லட்சம் ரூபாய் மட்டுமே!.

ஆனால், 1996-2001 ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு 2 ஆயிரத்து 170 கோடி ரூபாய்; 2001-2006 ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் முந்தைய தி.மு.க. அரசைவிட வெறும் 49 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கீடு செய்து; ஐந்து ஆண்டுகளிலும் மொத்தம் அனுமதிக்கப்பட்ட தொகை ரூபாய் 2 ஆயிரத்து 219 கோடி ரூபாய் மட்டுமே!.

ஆனால், 2006-2011 ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலனுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய்; இது, முந்தைய அ.தி.மு.க. அரசு ஐந்து ஆண்டுகளில் அனுமதித்த தொகையைவிட 8 ஆயிரத்து 847 கோடி ரூபாய் அதிகமாகும்.

அதிலும், தமிழகத்தில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர் மலைவாழ் இன மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப 2010-2011 வரவு செலவுத் திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 19.7 சதவீதம் தொகையை ஆதிதிராவிடர், மலைவாழ் இன மக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்து வரலாறு படைத்துள்ளதும் தி.மு.க. அரசே!. இந்த விவரங்கள் எல்லாம் பாலபாரதி படிக்க வேண்டிய பால பாடமாகி விட்டதே என்பதுதான் நமது கவலை!.

கேள்வி: முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் சவுந்தரராசன் பேரவையில் கேட்டிருக்கிறாரே?.

பதில்: நான் முதலமைச்சராக இருந்த போதும் இப்படித்தான் அந்த கட்சியின் தலைவர்கள் எல்லாம் நேரில் என்னை சந்தித்து சிறுதாவூரில் ஜெயலலிதாவும், அவருக்கு வேண்டியவர்களும் தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட இடங்களையெல்லாம் ஆக்கிரமித்துள்ளார்கள், அதுபற்றி விசாரணை கமிஷனை உடனடியாக அமைக்க வேண்டுமென்று கேட்டார்கள்.

நானும் உடனடியாக விசாரணை கமிஷனை அறிவித்தேன். அந்த விசாரணை கமிஷனும் விசாரணை நடத்தி, தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டது உண்மை தான் என்று அறிக்கை கொடுத்தது.

ஆனால் மார்க்சிஸ்ட்கள் யார் மீது குற்றஞ் சாட்டினார்களோ, அவர்களையே உத்தமர்கள் என்று கூறி அவர்களோடு தோழமை கொள்ளச் சென்றதோடு, இப்போது எங்கள் மீது விசாரணை கமிஷன் எப்போது என்கிறார்கள்! இது காலத்தின் கோலமா? கம்யூனிஸ்டுகள்தான் கூற வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்கள் பரமக்குடி பயணம்:

இந் நிலையில் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பரமக்குடி செல்கின்றனர்.

இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவும் திமுக சார்பில் சட்டமன்ற குழு உறுப்பினர்களின் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் 15ம் தேதி வியாழக்கிழமை (இன்று) பரமக்குடிக்கு செல்கிறார்கள்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More