கடந்த 7ம் தேதி காலை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே குண்டுவெடித்தது. இதில் 14 பேர் பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை பெரிய அளவில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் தந்தால் ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந் நிலையில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு போலீசாருக்கு வந்த இமெயிலை அனுப்பியதாக காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரைச் சேர்ந்த அபித், ஷரிக் ஆகிய இருவரை நேற்று தேசிய புலனாய்வுப் பிரிவினர் (national invetigating agency) கைது செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே. சிங், வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் குறித்த தகவல்களை வெளியிட விரும்பவில்லை. விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்பதை தெரிவிக்க விரும்பவில்லை. விரைவில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.
இந் நிலையில் ஹூஜி இயக்கத்தைச் சேர்ந்த ஹிலால் அமின் என்பவரை இன்று மத்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
இவரும் காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஹூஜி (ஹர்கத்துல் ஜிகாதி அல் இஸ்லாமி) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று ஹூஜி அமைப்பு சார்பில் அனுப்பப்பட்ட மெயில், இவர் சொல்லித்தான் அனுப்பப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.





0 comments:
Post a Comment