Tuesday, September 13, 2011

தம்பி திருமணத்திற்கு நேரில் அழைக்காத வேதனையில் அண்ணன் தூக்குப் போட்டுத் தற்கொலை

சென்னை: திருமணத்திற்கு தம்பி நேரில் வந்து அழைக்காத மனவேதனையில், அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, வண்ணாரப்பேட்டை நல்லப்பவாத்தியார் தெருவை சேர்ந்த அசோகன் என்பவரது மகன்கள் ரூபன் மற்றும் ராஜா. குடும்ப சண்டை காரணமாக, ரூபன் தனது குடும்பத்துடன் தனிக்குடித்தனம் சென்றார்.

இந்நிலையில், ரூபன் தம்பியான ராஜாவிற்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்கான திருமண அழைப்பிதழ் பத்தோடு பதினொன்று போல ரூபனுக்கும் போஸ்ட் செய்து விட்டனர். நேரில் போய் யாரும் அழைக்கவிலல்லை.

இந்த நிலையில், ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. இதற்காக, உறவினர்கள் அனைவரும் கூடியிருந்தனர். ஆனால் தம்பி கல்யாணத்திற்கு தன்னை நேரில் அழைக்காததால் மனமுடைந்து காணப்பட்ட ரூபன், தனது மனைவியையும், மகனையும் திருமண வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தனியாக இருந்தார்.

நேற்று இரவு மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில், கலந்து கொள்ள ரூபனை பலரும் அழைத்தும் வர மறுத்துவிட்டார். ரூபன் இல்லாத நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது மனைவியும் மகனும் இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டை திறந்து பார்த்த போது, துக்கம் தாங்க முடியாமல், ரூபன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோரும் மற்றும் உறவினர்களும் மனவேதனை அடைந்தனர். தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தம்பியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் கல்யாணத்தை நிறுத்தாமல், இன்று காலை திட்டமிட்டபடி ராஜாவின் திருமணம் நடந்தது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More