சென்னை: திமுக ஆட்சியிலும் சென்னை துணை நகரம் குறித்து அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால் இன்று அதிமுக ஆட்சியில் துணை நகரம் குறித்து அறிவிக்கும்போது அதை அனைவருமே வரவேற்கிறார்கள் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை அருகே திருமழிசையில் 311 ஏக்கரில் துணை நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிக்கையைப் படித்திருக்கிறார். அவர் படித்து முடித்ததும், வழக்கம்போல அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் பாராட்டுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
திருமழிசையில் துணை நகரம் வரப்போவதில் மகிழ்ச்சிதான். ஏனென்றால் துணை நகரம் அமைக்கவுள்ள இடம் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட இடம். பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வீட்டு வசதி வாரியக் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றிருந்த அறிவிப்பையே முதல்வர் ஜெயலலிதா வாசித்துள்ளார்.
சென்னையை ஒட்டி துணை நகரம் அமைக்கும் இந்த யோசனை தி.மு.க. ஆட்சியிலும் வந்தது. வண்டலூர்-கேளம்பாக்கம் சாலைக்கு தென் பகுதியில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் தேர்வு செய்யப்பட்டது.
அந்த துணை நகர அறிவிப்பை ஜெயலலிதா அப்போது கடுமையாக எதிர்த்தார். ஜெயலலிதாவின் எதிர்ப்புக்கு முன்னதாகவே பா.ம.க. நிறுவனர் ராமதாஸூம் இந்தத் திட்டத்தை எதிர்த்தார். அதைத் தொடர்ந்து இந்தத் திட்டமும் கைவிடப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் திருமழிசையில் துணை நகரம் அமைப்பதற்காக 1,695 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு, 467 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்தப் பகுதி மக்களும், விவசாயிகளும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நன்செய், புன்செய் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என்று அரசு அறிவித்தது.
தி.மு.க. அரசு சார்பில் துணை நகரம் திட்டத்தை அறிவித்தபோது ஜெயலலிதா எதிர்க்காமல் இருந்திருந்தால் இந்நேரம் துணை நகரமும் வந்திருக்கும்; சென்னையின் இடநெரிசலும் குறைந்திருக்கும்.
ஆனால், அன்றைக்கு தி.மு.க. அரசு துணை நகரத் திட்டத்தை அறிவித்தபோது எதிர்ப்பு கூறப்பட்டாலும், இப்போது முதல்வர் ஜெயலலிதா துணை நகரத் திட்டத்தை பேரவையில் அறிவித்தவுடன் மார்க்சிஸ்ட், பா.ம.க. உள்பட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வரவேற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.





0 comments:
Post a Comment