Sunday, September 4, 2011

நலமெலாம் தரும் சத்தியம்

**********************************************
இஸ்லாம் தான்உயர் தத்துவம்-இதை
ஏற்பது தான்முதல் உத்தமம்!
நம்பிச் செயல்படல் பத்தியம்-இது
நலமெலாம் தருதல் சத்தியம்!
 
பொறுமையில் நன்கு கலந்து-வாழ்வு
பூராவும் இதனை அருந்து!
வெறுமை யில்கூட இருந்து-பல
வெற்றிகள் தரும்இம் மருந்து!      (இஸ்லாம்...)
 
பாவம் அனைத்தையும் நீக்கும்-நேர்ப்
பாதையில் கொண்டுனைச் சேர்க்கும்!
மேவும் புகழினைக் காக்கும்-இந்த
மேதினி வியந்து பார்க்கும்!
 
இஸ்லாம் நிரந்தர அதிசயம்-இதில்
எத்தனை மெய்ஞான ரகசியம்!
அறிந்தவர் வெல்வது நிச்சயம்-எனும்
அனுபவம் சரித்திரப் பரிச்சயம்!   (இஸ்லாம்...)
 
நடுநிலை யானதிம் மார்க்கம்-இது
நல்கிடும் உரிமைகள் யார்க்கும்!
கெடுதல் அனைத்தையும் தீர்க்கும்-நல்ல
கெதியினில் மக்களைச் சேர்க்கும்!
 
ஒருவன் இறைவனென் றுரைக்கும்-நபி
உரைப்பவை மனங்களைக் கரைக்கும்!
இருலோக வாழ்வைக் காட்டும்-அந்த
இரண்டிலும் ஒளியைக் கூட்டும்!  (இஸ்லாம்...) 
 
               ---ஏம்பல் தஜம்முல் முகம்மது                                        

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More