Thursday, June 23, 2011

தொழுகையை விட்டவன் ...


In the name of Allah the Most Gracious the Most Merciful .

தொழுகையை விட்ட என் சகோதரனே...! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே..! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்..???

உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் இறைவனை வணங்கும் அவசியம் கூட இல்லாதளவுக்கு.... அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு... நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ...????

உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ.....????

அல்லது

உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ....????

நீ பெற்ற பதவியும், சொத்து, செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ....???

அல்லது

உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ...????

உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ....??

நன்றாகத் தெரிந்து கொள் சகோதரனே.....!

நீ இவ்வுலகில் எவ்வளவு தான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும்,,, எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும்,,, என்றோ ஒரு நாள், நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா...?! அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா...??? நீ பிறக்கும் போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல் தானே பிறந்தாய்...! நீ போகும் போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா...???? முடியவே முடியாது...!!! அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும், எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்த வாழ முடிகின்றது....????

இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ, நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப்படுவாயே....! அவ்வேளை எந்த முகத்தோடு அவனைச் சந்திப்பாய்...????, உன்னைப் படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா....? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்....????.

நீ என்னைப் படைக்க வில்லையென்று சொல்வாயா...?, நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா...??, நீ என்னைக் காக்கவில்லையென்று சொல்வாயா...???.

நீ அவனைச் சந்திக்கும் நாள்-- அதுதான் நீ மரணிக்கும் நாள் எப்போதென்று நீ அறிவாயா..??? இல்லையே..! அது நாளையாகவும் இருக்கலாம்,, ஏன்..??? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்து விட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா???. இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா.??? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்த, வாழ்ந்த இந்த உலகை விட்டுச் செல்லும் போது உனக்கு வழித்துணையாக வருவது எது...??? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது எது???? உனது பணமா..? பட்டமா..?? பதவியா...??? சொத்து செல்வங்களா..????

எதுவுமேயில்லை. ஓரேயொன்றைத் தவிர அதுதான் நீ செய்த நல்ல அமல்கள். நீ புரிந்த தொழுகை, நோன்பு இன்ன பிற வணக்கங்கள்... அதைத் தான் நீ உலகத்தில் சேமிக்க வில்லையே..! நீ உண்டாய், உழைத்தாய், உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னைப் படைத்தவனை நினைக்க வில்லையே...! அவனுக்காக உன்சிரம் பணிய வில்லையே...!!! அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்ல வில்லையே...!!!!

அவனைப் பயந்து உன் விழிகள் அழ வில்லையே...! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்ய வில்லையே...! நீ உனக்காகவே உலகில் அழாத போது உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா..????. உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்காகப் பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா...??? அது ஒரு போதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...

போதும் நண்பனே.. போதும்... விட்டுவிடு உன் பாவங்களை.... இன்பம் துன்பத்தில் முடிகின்றது. அன்பு பிரிவில் முடிகின்றது. வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன...??? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.

தொழுகையை மறந்த என் தோழனே..!!! தொழுகை தான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்கு அடையாளம்..

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More