Sunday, June 26, 2011

39. அப்பன்டிசைடிஸ் (Appendicitis)- கல் அடைப்பது அல்ல

அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.
வயிற்றின் வலதுபுற கீழ்ப்பகுதியில்
அப்பன்டிக்ஸ் என்பது எமது உணவுக் கால்வாயின் பெருங்குடலில் விரல் போல நீளவடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு ஆகும். இது எமது வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலது பக்கமாக அமைந்துள்ளது.
உண்மையில் இந்த உறுப்பின் பயன் என்ன என்பது எவருக்கும் தெரியாது. மனிதனின் கூர்ப்பின்போது தேவையற்றுப்போன ஒரு பகுதி எனக் கருதுவாரும் உளர். இதில் சளி போன்ற ஒரு திரவம் சுரப்பதுண்டு. அது வழிந்து பெருங்குடலில் சேர்ந்துவிடும்.
எவ்வாறு ஏற்படுகிறது?
அப்பென்டிக்ஸ் குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் இது ஏற்படுகிறது. ஆனால் கல்லினால் அல்ல. மலத்துகள்கள், குடற் புழுக்கள், அல்லது கட்டிகள் பொதுவாகத் தடையை ஏற்படுத்தும்.
இதனால் அதில் சுரக்கும் திரவம் வெளியேற முடியாது தடைப்பட்டு வீங்கும். அத்துடன் அதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அழற்சியடையும்.
வீங்கிச் சிவந்த அப்பென்டிக்ஸ்
உடனடியாகச் சத்திரசிகிச்சை செய்து அதனை  அகற்ற வேண்டும்.
இல்லையேல் வயிற்றறையில் அது வெடித்துவிடும். வெடித்தால் கிருமிகள் வயிற்றறை முழவதும் பரவி ஆபத்தாக மாறிவிடும்.
வயிற்றறையில் அவ்வாறு கிருமி பரவுவதை பெரிடனைடிஸ் (Peritanaitis)என்பார்கள்.
எந்த வயதிலும் இந்நோய் ஏற்படலாம் என்ற போதும் 10 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அறிகுறிகள்
நிறபதும் நடப்பதுவும் வேறெதுவும் வலியைத் தணிக்காது.
இதன் முக்கிய அறிகுறி வயிற்றில் ஏற்படும் வலிதான். இதன் வலியை எவ்வாறு ஏனைய வயிற்று வலிகளிலிருந்து வேறுபடுத்தி அறிவது?
திடீரென ஏற்படும் வலியாகும். தூக்கதிலிருந்தால் திடீரென விழத்தெழச் செய்யும்
ஆரம்பத்தில் முழு வயிறும் வலிப்பது போலிருக்கும். ஆனால் படிப்படியாக அவ்வலி வலது பக்க அடிவயிற்றில் நிலைகொள்ளும்.
முன்னெப்பொழுதும் அனுபவித்து இருக்காததாகத் தோன்றும் இவ்வலி சிலமணி நேரத்தில் மோசமாகும்.
படுத்தல், தலையணையை அணைத்தல், கால்களை மடக்கிப் படுத்தல் போன்ற எந்த நிலையிலும் குறையாது. ஆனால் எழுந்து நடக்கும் போதும், இருமும் போதும், தும்மும் போதும், ஆழ்ந்த மூச்செடுக்கும்போதும் தாங்க முடியாதளவு கடுமையாக இருக்கும்.
வலியைத் தொடர்ந்து வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம்
பசியின்மை
வாந்தி அல்லது வயிற்றுப் புரட்டு
மலங் கழித்தால் வலி குறையும் என்பது போன்ற உணர்வு. ஆனால் மலம் கழித்தாலும் வலி தணியாது.
கடுமையாக ஏறிக் காயாத குறைந்தளவு காய்ச்சல்
வயிற்றுப் பொருமல், வாய்வு வெளியேறுவதில் சிரமம்.
ஒரு சிலரில் மலச்சிக்கல் அல்லது மலம் இளக்கமாகக் கழிதல்
பொதுவாக எக்ஸ்ரே ஸ்கான் போன்ற எந்தப் ஆய்வு கூடப் பரிசோதனைகளும் இன்றி நோயாளியை சோதித்துப் பாரப்பதன் மூலம் மருத்தவரால் நோயை நிச்சயிக்க முடியும்.
சிகிச்சை
அப்பென்டிசைடிஸ் என மருத்துவர் தீர்மானித்தால் சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்கள். இப்பொழுது பாரிய வெட்டுக் காயம் இன்றி சிறுதுளைகள் வழியான லப்ரஸ்கோபி சத்திரசிகிச்சையே பெரும்பாலும் செய்யப்படகிறது. உடனடியாகச் செய்வதன் மூலம் உன்ளே வெடிக்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம்.
சிறுதுளைகள் மூலம் சத்திரசிகிச்சை
சில தருணங்களில் அதைச் சுற்றிச் சீழ்க்கட்டி (Appendiciel Abscess) தோன்றலாம். நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) கொடுத்து அதைக் கட்டுப்படுத்துவதுடன் வயிற்றறையில் குழாய் விட்டு சீழை அகற்றவும் செய்வர். 6 முதல் 8 வாரங்களுக்குப் பின் சத்திர சிகிச்சை மூலம் அப்பென்டிக்சை அகற்றுவார்கள்.
சத்திரசிகிச்சை வசதி கிட்டாதபோது அல்லது நோயாளி சத்திரசிகிச்சைக்கு உட்படக் கூடியளவிற்கு ஆரோக்கியமாக இல்லையெனில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் மூலமும், நார்ப்பொருள் குறைந்த இலகுவாக சமிபாடடையும் ஆகாரங்களுடனும் சிகிச்சை அளிப்பதுண்டு.
சில ஆய்வுகள் சத்திரசிகிச்சை செய்யாமலே அப்பென்டிசைடிஸ் குணமாகும் என்று கூறுகின்றன. ஆயினும் சத்திரசிகிச்சைக்கான வசதிகள் இருக்கும்போது அவ்வாறு ரிஸ்க் எடுப்பது புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியாது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More