Wednesday, January 8, 2014

தேர்தல் வியூகம்: பிரியங்காவை முன்நிறுத்தும் காங்கிரஸ்



'இனி பிரதமராகும் எண்ணம் இல்லை, பிரதமராகும் அனைத்து தகுதியும் ராகுல் காந்திக்கு உள்ளது' என்று கூறி ராகுலுக்கு வழி விட்டு மன்மோகன் சிங் ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில், இப்போது பிரியங்காவும் அரசியல் களத்தில் தீவிரமாக தலை காட்டத் தொடங்கியுள்ளார்.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் திடீரென பிரியங்கா வதேரா பங்கேற்றது, இதற்கான முதல் அடி என்று கூறப்படுகிறது.
பிரியங்காவின் இந்த பிரவேசம், வரும் மக்களவைத் தேர்தலையொட்டி அவர் தீவிர அரசியலில் ஈடுபடக்கூடும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
வழக்கமாக, தனது தாயார் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் மட்டுமே பிரியங்கா வதேரா இதுவரை பிரசாரம் செய்து வந்துள்ளார். ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் ரேபரேலியில் தவறாது ஆஜராகிவிடும் அவர் தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயாருக்காக வாக்கு சேகரிப்பார்.
ஆனால், உ.பி.யில் காங்கிரஸ் கட்சி பலம் இழந்துவிட்டதாக விமர்சனத்துக்குள்ளாகி வருவது, 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு என பல்வேறு சூழலை கருத்தில் கொண்டு பிரியங்கா காந்தி தீவிர அரசியல் களத்தில் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் நலத் திட்டங்களை மக்களுக்குச் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் பிரச்சாரத்தை தீவிரப் படுத்த இருக்கும் காங்கிரஸ், இதற்காக மத்திய அமைச்சர்கள் சிலரையும் கட்சிப் பணியில் சேர்க்க இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
ஏற்கெனவே மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கட்சிப் பணிகளுக்காக அமைச்சர் பதவியைத் துறந்தார். அப்போதே இன்னும் இந்த பட்டியல் நீளும் என கூறப்பட்டது.
அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அவர் கூட்டத்தில் பங்கேற்றதில் வியப்பேதும் இல்லை என்று ஜனார்தன் துவிவேதி கூறியிருந்தாலும், பிரியங்கா கலந்து கொண்ட காலச் சூழல் அவர் தீவிர அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் வியூகம்:
வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், பிரியங்கா காந்திக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர, தேர்தலில் போட்டியிட ஏதுவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும். ஒரு சில பொதுச் செயலாளர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக அந்த இடத்தில் ராஜ்யசபா எம்.பி.க்கள் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாநில வாரியாக கட்சியை பலப்படுத்தும் பொருட்டு, சில மாநில காங்கிரஸ் தலைமைகளிலும் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு வியூகங்களை வகுத்து காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More