Thursday, June 28, 2012

அரசின் அலட்சியம்; பலியான அப்பாவி மாணவி!

அரசின் அலட்சியம்; பலியான அப்பாவி மாணவி!


வருமுன் காப்போம் என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் நம்மை ஆளும் அதிகார வர்க்கத்திற்கோ நாம் சில இழப்புகளை சந்தித்தபின்தான் அவர்களுக்கு சட்டம் போடவேண்டும் என்ற என்னமோ அல்லது இருக்கும் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற என்னமோ, அல்லது பாதுக்கப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற என்னமோ ஏற்படுவதை நாம் காண்கிறோம். ஒரு கல்விக்கூடத்தை நடத்த வேண்டுமெனில், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் படிதான் கல்வி நிலையங்கள் இயங்குகின்றதா என்பதை கடுமையாக கண்காணித்து இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை தீயின் கோரத்திற்கு பலிகொடுத்திருக்கமாட்டோம். அதே போல, அரசு கல்வி நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அரசு காட்டும் அலட்சியம் அப்பாவிகளின் உயிருக்கு கேடாய் முடிகிறது. அரசு பள்ளிகளின் கட்டங்களின் இஸ்திரத்தன்மை பல இடங்களில் பயமுறுத்தும் வகையில் உள்ளன. பல கல்வியங்களின் அடிப்படை பாதுகாப்பு மற்றும் சுகாதார விஷயங்கள் பொதுப்பணித் துறையின் மெத்தனப் போக்குகளால் மாணவ- மாணவியரின் உயிருக்கு உலைவைக்கும் சம்பவங்களுக்கு காரணியாக அமைந்து விடுகிறது. அந்தவகையில், பத்திரிக்கையில் வந்த செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் நிரவி, கீழராஜவீதியை சேர்ந்த நைனா மரைக்காயர் மகள் மெகபூப்நிசா(வயது 18) என்ற மாணவி கல்லூரிக்கு வந்தார். காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும் என்பதால் அவர் சக மாணவிகளுடன் கல்லூரியின் 2வது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்கு அருகில் உள்ள வராண்டாவில் நின்று பேசிக் கொண்டிருந்தார். 
அப்போது முதல்நாள் நடைபெற்ற விருந்தின் போது மாணவிகள் சாப்பிட்டு விட்டு கீழே போட்டிருந்த உணவுப்பொருட்களை சாப்பிட குரங்குகள் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்தன. மாணவிகளை கண்ட குரங்குகள் திடீரென அவர்களை விரட்ட தொடங்கின.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கட்டைச்சுவர் அருகே நின்று கொண்டிருந்த மாணவி மெகபூப்நிசா நிலை தடுமாறி 2வது மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். மாணவி விழுந்த போது முதல் மாடியில் உள்ள வகுப்பறை ஜன்னல் சன்சேடு அவரது நெற்றியில் குத்திக் கிழித்தது. அவர் தரையில் வந்து விழுந்தபோது இடது கால் முறிந்தது. தோள்பட்டையிலும் படுகாயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்ததில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. 
இது குறித்து தகவல் அறிந்த மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி மாணவி மெகபூப்நிஷா பரிதாபமாக இறந்தார்.

அப்போது பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள காரைக்காலுக்கு வந்திருந்த அமைச்சர் ராஜவேலு மருத்துவமனைக்கு சென்று மாணவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கல்லூரிக்கு சென்ற அமைச்சர் ராஜவேலு, மாணவி நின்று பேசிக் கொண்டிருந்த இடம், தவறி விழ காரணமாக இருந்த கட்டைச் சுவர், கீழே விழுந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். 
தொடர்ந்து கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்ற அமைச்சர் கல்லூரி முதல்வரிடம் சுவற்றின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னலை வைக்க வேண்டியதுதானே? என்று கேட்டார். அதற்கு கல்லூரி முதல்வர் இது குறித்து பொதுப்பணித்துறைக்கு பல முறை கடிதம் எழுதி விட்டோம். எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அமைச்சர் அங்கிருந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம், உடனடியாக கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டைச்சுவர்களின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னல்களை பொருத்த உத்தரவிட்டார்'' என்கிறது அந்த செய்தி.

இந்த சம்பவத்தில், சுவற்றின் உயரத்தை உயர்த்திடக் கோரி கல்லூரி நிர்வாகம் பலமுறை பொதுப்பணித் துறைக்கு வேண்டுகோள் விடுத்தபோதும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். அதன் காரணமாகவே ஒரு அப்பாவி மாணவியின் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் அந்த சுவற்றை உயர்த்த அதிரடியாக உத்தரவிட்ட அமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது எனபதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவ்வளவு நாளாக இந்த் விஷயத்தை கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் உள்ளிட்ட அடுக்கடுக்ககன சலுகைகள் பெறும் அரசு அதிகாரிகள் அவர் தம் கடமையை செய்யத்தவறினால் அவர்களை கடுமையாக தண்டிக்க அரசு முன்வரவேண்டும். அப்போதுதான் தவறு செய்யும் அதிகார வர்க்கம் திருந்தும். அரசு நடவடிக்கை எடுக்குமா?

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More