காரைக்கால், : காரைக்காலில் தனியார் விமான தளம் அமைவதை தடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற இலவச சட்ட உதவி மையத் தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் வட்டச் செயலர் அ. வின்சென்ட் சனிக்கிழமை அனுப்பிய மனு விவரம்:
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் சுமார் 10 கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியில் தனியார் விமான தளம் அமைய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. நன்றாக விளையக்கூடிய நிலப் பரப்பில் விமான தளம் அமைவதை தொடக்கத்திலிருந்தே அந்தப் பகுதி மக்களும், விவசாயிகளும் எதிர்த்து வருகின்றனர்.
விமான தளம் அமைந்தால் விளை நிலம் அழிந்து, அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்குமென சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். வளர்ச்சித் திட்டம் என்ற பெயரால் விளை நிலத்தை அழிப்பது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
விமான தளம் அமைவதால் ஏழை மக்கள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பயன் பெறப்போவதில்லை. இவர்களுக்கு எந்த விதத்திலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. மாறாக காரைக்காலில் உணவுப் பஞ்சம் ஏற்படவே இது வழிவகுக்கும்.
விளை நிலம் இல்லாத பகுதியில் விமான தளம் அமைவதே சிறந்தது என கட்சியும், பொதுமக்களும் கூறி வருகிறது.
எனவே, காரைக்கால் பகுதி விளை நில சுற்றுவட்டாரத்தில் விமான தளம் அமைவதை சிறப்பு கவனம் செலுத்தி, உயர் நீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டுமென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





0 comments:
Post a Comment