Sunday, April 22, 2012

புனே வாரியர்ஸ் அபார வெற்றி : சொந்தமண்ணில் டில்லி சோகம்

IPL 2011புதுடில்லி:
டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், புனே வாரியர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய கங்குலி "ஆல் ரவுண்டராக' ஜொலித்தார்.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் நேற்று நடந்த 27வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
கங்குலி ஆறுதல்:
புனே அணிக்கு ரைடர், உத்தப்பா இணைந்து துவக்கம் தந்தனர். இர்பான் பதான் ஓவரில் இரு பவுண்டரி அடித்த உத்தப்பா (10), இம்முறையும் நீடிக்கவில்லை. ரைடருடன் கேப்டன் கங்குலி சேர்ந்தார்.மார்கல் ஓவரில் சிக்சர், பவுண்டரி விளாசிய ரைடர், உமேஷ் யாதவ் பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். கங்குலி தன் பங்கிற்கு மார்கல் பந்தில் பவுண்டரி அடித்தார். தொடர்ந்து விளாசிய இவர், பீட்டர்சன் பந்தில் சிக்சர் அடித்தார். நதீமின் சுழலை அழகாக சமாளித்த கங்குலி, இரு பவுண்டரிகள் அடிக்க, ஸ்கோர் 12 ஓவரில் 100ஐ கடந்தது.
ரைடர் அசத்தல்:
கங்குலி, 35 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த ரைடர், அரைசதம் எட்டினார். இவருடன் சேர்ந்த ஸ்மித், நதீமின் நான்காவது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து மிரட்டினார். ரைடர், 58 பந்தில் 86 ரன்கள் எடுத்து அவுட்டானார். புனே வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. மாத்யூஸ் (6), ஸ்மித் (34) அவுட்டாகாமல் இருந்தனர்.
சேவக் அரைசதம்:
கடின இலக்கை துரத்திய டில்லி அணிக்கு ஜெயவர்தனா 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். பின் சேவக், பீட்டர்சன் இணைந்தனர். கார்த்திக் வீசிய 5வது ஓவரில் இருந்து டில்லியின் அதிரடி துவங்கியது. இந்த ஓவரில் சேவக் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி விளாசினார். இவருக்கு நல்ல "கம்பெனி' கொடுத்த பீட்டர்சன், மாத்யூஸ் ஓவரில் 3 சிக்சர் அடித்து அசத்தினார். ரைடரின் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் என, சேவக் வாண வேடிக்கை காட்டினார். தொடர்ந்து அசத்திய இவர், ராகுல் சர்மாவின் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். 
கங்குலி எழுச்சி:
இந்நிலையில், இத்தொடரில் முதன் முதலாக பவுலிங் செய்த கங்குலி, முதல் பந்தில் அபாயகரமான பீட்டர்சனை (32), போல்டாக்கினார். தனது ஓவரில் சிக்சர் அடித்த இர்பான் பதானையும் (15), அதே ஓவரில் திருப்பி அனுப்பினார் கங்குலி. 27 வது பந்தில் அரைசதம் அடித்த சேவக் (57), கார்த்திக் சுழலில் அவரிடமே சிக்கினார். நேகி (8) ரன் அவுட்டானார். அணியை மீட்பார் என நம்பப்பட்ட ராஸ் டெய்லர் (12) நிலைக்கவில்லை. யோகேஷ் நகாரின் (24) கடைசி நேர போராட்டம் வீணானது. டில்லி டேர்டேவில்ஸ் அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நமன் ஓஜா (11), மார்கல் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More