Saturday, November 12, 2011

குவைத்தில் நடைபெற்ற தியாகத் திருநாள் / ஈதுல் அழ்ஹா சிறப்புத் தொழுகை & குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி


குவைத்தில் நடைபெற்ற தியாகத் திருநாள் / ஈதுல் அழ்ஹா சிறப்புத் தொழுகை & குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்பாடு செய்த தியாகத் திருநாள் / ஈதுல் அழ்ஹா சிறப்புத் தொழுகை மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் கடந்த 06.11.2011 ஞாயிற்றுக்கிழமை (ஹிஜ்ரீ 1432 துல்ஹஜ் பிறை 10) காலை 6:30 மணிக்கு குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பாபள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்....

விட்டு விட்டு மழைச் சாரல் அடித்துக் கொண்டிருந்த போதிலும் அதிகாலை 6:00 மணிக்கே மக்கள் சாரிசாரியாக வரத் தொடங்கினர். வருகை தந்த பெருமக்களை நறுமணம் பூசி சங்கத்தின் நிர்வாகிகள் வரவேற்றனர். ஆலிம் பெருமக்கள் தக்பீர் சொல்ல, தொழுகைக்கு வந்தவர்களும் தொடர்ந்து தக்பீர் முழக்கம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அப்பகுதியே தமிழ் இஸ்லாமிய மக்களின் வருகையால் விழாக்கோலம் பூண்டிருந்தது. 

சரியாக காலை 6:55 மணிக்கு சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் பெருநாள் தொழுகை, குர்பானி / உழ்ஹிய்யா மற்றும் வாழ்த்துக்கள் கூறும் முறை போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்து, பெருநாள் தொழுகையை நடத்தி வைதது, நிகழ்ச்சியின் இறுதியில் துஆவையும் ஓதினார். 

தொழுகையைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., பெருநாள் குத்பா பேருரையை நிகழ்த்தினார். தன்னுடைய உரையில், இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) மற்றும் அன்னை ஹாஜிரா ஆகியோரின் தியாக வரலாறு, முன்மாதிரி முஸ்லிம் குடும்பமாக வாழ்ந்து காட்டிய இவர்களின் இறையச்சம், அர்ப்பணிப்பு வாழ்க்கை போன்வற்றையும், கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான அனைத்து வழிகாட்டல்களும் இவர்களின் வரலாற்றில் இருப்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, புனித ஹஜ் மாதத்தில் நடத்தப்பட்ட புனித ஹஜ் / அரஃபா தின நிகழ்ச்சிகளில் நடைபெற்ற வினாடி வினா  போட்டியிலும், குவைத் தேசிய அளவில் நடத்தப்பட்ட வாரந்தோறும் வசந்தம் போட்டி மற்றும் திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியிலும் கலந்து  கொண்டு வெற்றிப் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கத்தின் உலமா / அறிஞர் பெருமக்கள் பரிசுகளை வழங்கினார்கள். 

துஆ ஓதப்பட்டவுடன் வந்திருந்த பெருமக்கள் ஒருவருக்கொருவர் தங்களின் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், இஸ்லாமிய சகோதரர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். K-Tic சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சிறப்பு தொழுகை குறித்தும் மக்கள் மன நிறைவுடன் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர்.

பெண்களுக்கு தனியிட வசதியுடன் தொழுகைக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தினருந்தனர் சங்க நிர்வாகிகள். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் அனைவருக்கும் இலங்கை சகோதரர்கள் சார்பாக சிற்றுண்டியும், சங்கத்தின் சார்பில் தேநீரும் வழங்கப்பட்டன.

குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதுபோன்ற செய்திகளை எத்தி வைக்குமாறும், சங்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.

மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்:  www.k-tic.com

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More