காப்பி/ பேஸ்ட் பதிவர்களுக்கு சில யோசனைகள்.....
இது யாரையும் தாக்குவதற்காக எழுதப்படவில்லை. இப்போதெல்லாம் வெட்டி ஒட்டுதல் எனப்படும் காப்பி/ பேஸ்ட் சர்வசாதாரனமாக நடக்கிறது. சமீபத்தில் கூட ஒரு இணையத்தளம் என் பதிவுகளை காப்பி செய்து அவர்கள் தளத்தில் போட்டிருந்தார்கள். அதைப்பற்றி ஏற்கனவே ஒரு எச்சரிக்கை பதிவு போட்டிருந்தேன். ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் யாரும் கேட்பதாக இல்லை. மீண்டும் என் பதிவு திருடப்பட்டிருக்கிறது. அதை அடையாளம் காட்டி ஒரு பத்து பேர்மட்டும் போகும் அந்த தளத்தை பிரபலமாக்கவிரும்பவில்லை. சரி....இவர்கள் திருந்தப்போவதில்லை என்று முடிவு செய்து அவர்களுக்கு சில யோசனைகளை முன்வைக்கிறேன்.
1) ஒரு பதிவை படிக்கும்போது, அட...இது நல்லா இருக்கே....இதை பகிர்ந்து கொண்டால் தேவலையே என்ற எண்ணத்தில், அந்தப்பதிவை எடுத்து உங்கள் தளத்தில் போடுவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட பதிவரிடம் மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ முறைப்படி அனுமதி வாங்கிய பின்னே அதை செய்யுங்கள். அப்படி அவர்களை தொடர்புகொள்ள முடியாவிட்டால் அந்த பதிவின் கீழ் நன்றி என்று அந்த பதிவரின் பெயரை போட்டு, அந்த பதிவின் ஒரிஜினல் லிங்கையும் இணைத்து விடுங்கள்.
2) நாளிதழ்களிலோ, வாரஇதழ்களிலோ, இணைய இதழ்களிலோ இருக்கும் ஒரு பதிவை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக அடிக்காதீர்கள். அந்த செய்தியை மட்டும் மூலக்கருவாக வைத்துக்கொண்டு, முடிந்தவரை அதை உங்கள் பாணியில் அலசுங்கள்.
3) அப்படியே அந்த பத்திரிகை செய்தியை பகிர்வதாக இருந்தால், எந்தப்பத்திரிகைகளில் அந்த செய்தி இடம் பெற்றதோ அந்த பத்திரிகையின் பெயரை அந்தப்பதிவின் கீழ் குறிப்பிட்டுவிடுங்கள்.
4) சொந்தமாக யோசித்து எழுதுவதற்காக ஒரு தளமும், செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு தளமும் வைத்துக்கொள்ளுங்கள். அது, இன்னும் நலம்.
5) குறிப்பாக ஹிட்ஸ் கிடைக்கவேண்டும் என்பதற்காக கண்டதையும் காப்பி/ பேஸ்ட் செய்யாதீர்கள். அப்படி செய்வதால் உங்கள் பெயர்தான் கெடும்.
பின் குறிப்பு: இந்தப்பதிவை(மட்டும்) காப்பி செய்வதாக இருந்தால் என்னிடம் அனுமதியெல்லாம் வாங்கத்தேவையில்லை. என் பெயரை போட்டாலே போதும்.
1likes






0 comments:
Post a Comment