1.ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72 என்றால் வரிகள் எவ்வளவு?
2.காசோலை, வரைவோலை 3 மாதமே செல்லும்
3. கடற்படைத் தேர்வு: இனி தமிழில் எழுதலாம்
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72 என்றால் வரிகள் எவ்வளவு?
பெட்ரோல் விலையில் 38 சதவீதம் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிக்கே செல்கிறது. பெட்ரோல் விலை ரூ. 68.64 ஆக இருந்தபோது வரியாக விதிக்கப்பட்ட தொகை ரூ. 26.22 ஆகும்.
கடந்த வாரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தியது. ஒரே ஆண்டில் ஐந்தாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் பெட்ரோல் விலை உயர்ந்தது. சர்வதேச சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலை சுத்திகரித்து வரியில்லாமல் ரூ. 41.38-க்கு விற்பனை செய்யலாம் என்று எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில்லறை விற்பனை விலை சுங்கவரி, உற்பத்தி வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி ஆகியன சேர்க்கப்படுவதால் இறுதியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 72 வரை தர வேண்டியுள்ளது.
ரூ. 41.38 விலை இருந்தால் அதற்கு சுங்க வரி 2.5 சதவீதம் ரூ. 1.04 விதிக்கப்படுகிறது. இது தவிர சென்வாட் வரியாக லிட்டருக்கு ரூ. 6.35-ஐ மத்திய அரசு விதிக்கிறது. இது தவிர, உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ. 6-ம் சிறப்பு உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ. 2-ம் விதிக்கப்படுகிறது.
கல்வி வரியாக ஒரு சதவீதம் சேர்க்கப்பட்டு லிட்டருக்கு ரூ. 14.78 வசூலிக்கப்படுகிறது. அடிப்படை விலையில் மாற்றம் இல்லையெனில் மத்திய அரசு வரி விதிப்பில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஆனால் மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி விதிப்பு மாறுதலுக்குள்பட்டது. இதனால் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. தில்லியில் மதிப்பு கூட்டு வரி 20 சதவீதம் அதாவது லிட்டருக்கு ரூ. 10.62 ஆக இருந்தது. லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப்பட்டதால் இது ரூ. 11.44 ஆக உயர்ந்தது.
டீசல் விலையைப் பொறுத்தமட்டில் விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ. 7.66 மட்டுமே. தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 41.29. இதில் சுங்கவரி ரூ. 2.06 , உற்பத்தி வரி ரூ. 4.84 ஆக உள்ளது. நெடுஞ்சாலை வரி ரூ. 2 வசூலிக்கப்படுகிறது.
மத்திய அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் டீசல், சமையல் எரிவாயு, கெரசின் ஆகியவற்றை உற்பத்தி விலையை விட குறைந்த விலைக்கு விற்பதால் தினசரி ரூ. 333 கோடி வருவாய் இழப்பை சந்திக்கின்றன.
டீசல் லிட்டருக்கு ரூ. 9.27-ம், மண்ணெண்ணெய்க்கு லிட்டருக்கு ரூ. 26.94-ம், சமையல் எரிவாயுவுக்கு சிலிண்டருக்கு ரூ. 260.50-ம் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல் மீதான கட்டுப்பாடு நீக்கப்படும் முன்பு தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் வி லை ரூ. 51.43 ஆக இருந்தது. இப்போது லிட்டர் விலை ரூ. 63.70 ஆக உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72 என்றால் வரிகள் மட்டும் 38 சதவீதமாக ரூ.27 வரை ஆகிறது.
காசோலை, வரைவோலை 3 மாதமே செல்லும்
காசோலைகள் செல்லுபடியாகும் கால அளவு 3 மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை 2012-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கிகளுக்கு கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், வங்கிக் காசோலை, வரைவோலை, பே ஆர்டர் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 3 மாதம் வரைதான் செல்லுபடியாகும் என்று அறிவுறுத்தியுள்ளது. இப்போது வழங்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதம் வரை செல்லுபடியாகும்.
காசோலைகள் முறைகேடாக பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய மாற்றம் தொடர்பான அறிவிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காசோலை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய விதிமுறையை அறிந்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஒருவரது பெயரில் வழங்கப்படும் காசோலைகள் அவரது ஒப்புதலின்பேரில் மற்றொருவரது கணக்கிற்கு மாற்ற முடியும். வங்கிகள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப கமிஷன் தொகைக்காக இதைச் செய்கின்றன. இதுபோன்ற காசோலை மாற்றம்தான் முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக ஆர்பிஐ கண்டறிந்துள்ளது. புதிய விதிமுறையின்படி, எந்த நபருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளதோ அவரது வங்கிக் கணக்கில்தான் பணம் மாற்றப்பட்டது என்பதை வங்கிகள் உறுதி செய்யவேண்டும். அவரது ஒப்புதலின்பேரில் மற்றவரது பெயருக்கு மாற்றக் கூடாது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் நிறுவனங்களைவிட தனி நபர்களை அதிகம் பாதிக்கும் என்று வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரைவோலைக்கு கட்டுப்பாடு: வரைவோலை மற்றும் கேட்புக் காசோலை ஆகியவற்றுக்கான தொகை ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் அது வங்கிக் கணக்கு (அக்கவுண்ட் பேயீ) என்றுதான் அளிக்க வேண்டும். நாட்டில் பெருமளவு கறுப்புப்பண புழக்கம் வங்கிகள் மூலமாகத்தான் நடைபெறுவதாக புலனாய்வு அமைப்புகள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தில்லி, மும்பை, குஜராத் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் வங்கிக் காசோலைகள் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஹவாலா ஏஜென்டுகள், வங்கி அதிகாரிகள் சிலரது ஒத்துழைப்போடு போலியான ஆவணங்களைக் காட்டி வரைவோலைகளை பணமாக மாற்றி விடுகின்றனர். இத்தகைய வங்கி வரைவோலைகளுக்கு ஒரு சதவீத வங்கி கமிஷன் அளிக்கப்படுகிறது. இவர்கள் ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை ஆண்டுக்கு இதுபோன்ற பண பரிவர்த்தனை செய்கின்றனர். இந்த வகையில் நடைபெறும் வர்த்தகம் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடியை எட்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
கடற்படைத் தேர்வு: இனி தமிழில் எழுதலாம்
கடற்படைத் தேர்வை ஜனவரி மாதம் முதல் தமிழில் எழுதலாம் கடற்படைத் தேர்வு ஆங்கிலம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டும் இப்போது நடத்தப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடற்படைக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படும்போது உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெறும் இளைஞர்கள், எழுத்துத் தேர்வில் பின்தங்கிவிடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தகுதி இருந்தும் தேர்ச்சி பெறாத நிலை ஏற்பட்டு வந்தது.
இதைக் கருத்தில்கொண்டு கடற்படைத் தேர்வை தமிழகத்தில் 3 மொழிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தமிழகத்தில் இந்திய கடற்படைக்கு இளைஞர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதில் எழுத்துத் தேர்வு 3 மொழிகளில் நடத்தப்படும். ஆங்கிலம்,ஹிந்திக்கு அடுத்தப்படியாக தமிழிலும் வினாத்தாள் வழங்கப்படும்.
இதன் மூலம் தமிழகத்தில் அதிகப்படியாக இளைஞர்கள் கடற்படைக்கு தேர்வாக முடியும். தமிழகத்தில் இருந்து கடற்படைக்கு அதிகளவில் இளைஞர்களை தேர்வாக வேண்டும் என்ற நோகத்தில் இந்த நடவடிக்கையை எடுக்கப் பட்டுள்ளது.





0 comments:
Post a Comment