புதுடில்லி : "2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கிய விவகாரத்தில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களின் நகல்களை, இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள சுப்ரமணியசாமியிடம் அளிக்க வேண்டும்' என, டில்லி சிறப்பு கோர்ட், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், அப்போதைய நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும்'என, ஜனதா கட்சித் தலைவர், சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.இது தொடர்பான நேற்றைய விசாரணையின்போது, சுப்ரமணியசாமி கூறுகையில், "ஒருங்கிணைந்த தொடர்பு சேவை உரிமம் (யு.ஏ.எஸ். எல்.,) கொள்கை குறித்த விவகாரத்தில், பங்குகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை, 2009, அக்டோபரில், சி.பி.ஐ., பறிமுதல் செய்தது. ஆனால், இந்த ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, அந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது. அந்த ஆவணங்களை நகல் எடுக்க, எனக்கு அனுமதி வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, சிறப்பு கோர்ட் நீதிபதி ஒ.பி.ஷைனி, தன் உத்தரவில், "மனு தாக்கல் செய்துள்ள சுப்ரமணியசாமிக்கு, அவர் கேட்ட ஆவணங்களின் ஆதாரத்துடன் கூடிய நகல் படிவங்களை, கூடிய விரைவில் வழங்க வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை, அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
என்ன ஆவணம்? ராஜா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்வான் மற்றும் யுனிடெக் ஒயர்லெஸ் ஆகிய நிறுவனங்களுக்கு, சலுகை காட்டி, ஒருங்கிணைந்த தொடர்பு சேவை உரிமம் வழங்கியதாக குற்றச்சாட்டு உண்டு.தங்களுக்கு உரிமம் கிடைத்தபின், இந்நிறுவனங்கள், தங்கள் பங்குகளை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள், தங்கள் பங்குகளை விற்ற விவகாரத்தில், அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜாவுக்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்ற கடிதங்கள் குறித்த ஆவணங்களைத் தான், சுப்ரமணியசாமி கேட்டிருந்ததாக, கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும், சுப்ரமணியசாமி தன் டிவிட்டர் செய்தியில், "இந்த விவகாரம் தொடர்பான பைல் ஒன்றை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆவணமாகத் தரவில்லை. அதை இப்போது தர முன்வந்திருப்பதால் நகல் எடுக்கலாம். இந்த விவகாரத்தில் சிதம்பரம் தொடர்பை அது உறுதி செய்யும்' என கூறியுள்ளார்.
சிறப்பு கோர்ட்டின் இந்த உத்தரவு சி.பி.ஐ., பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நிறுவனத்திடம் வலியுறுத்தல்: "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெல்வோயர் என்ற நிறுவனம், மறைமுக முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளதை அடுத்து, அந்நிறுவனம் பற்றிய தகவல்களை அளிக்கும்படி, சுவிட்சர்லாந்து அரசுக்கு, சி.பி.ஐ., கடிதம் அனுப்பியுள்ளது.கோர்ட் ஒப்புதலுடன், இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்வான் நிறுவனத்தில், அரசு அதிகாரிகள் சிலருக்கு பங்கு இருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில், சி.பி.ஐ.,யின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, 700 மெகாஹெட்ஜ் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், அரசுக்கு இழப்பீடு ஏற்பட வாய்ப்புள்ளதாக, தொலைத்தொடர்புத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





0 comments:
Post a Comment