Wednesday, September 14, 2011

நாகையில் மீன்வள பல்கலைக் கழகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை:""தமிழகத்தின் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்,'' என்று, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:மீன்வளத் துறையினை நவீனப்படுத்துவதற்கும், கடல் பொருள் ஏற்றுமதியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்கிடவும், அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 1977ம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மீன்வளக் கல்லூரியை, தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர்., நிறுவினார். தமிழகத்தில் மீன்வளத்தை மேம்படுத்தவும், மீன்வளத்தைப் பெருக்குவதில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் மீனவர்களின் வருவாய் மேம்பாடு அடையச் செய்வதற்கும், மீன்வளக் கல்வியை மேலும் ஊக்குவிப்பது அவசியமாகிறது.மீன்வள மேம்பாட்டில் முன்னோடியாக உள்ள நாடுகளில், மீன்வளக் கல்விக்கென பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மீன்வளம் மற்றும் பெருங்கடல் அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
மீன்வளத்திற்கென மீன்வளப் பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவ, அரசு முடிவு செய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் 188 கி.மீ., நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. மீன்பிடித்தல், உலர் மீன் உற்பத்தி மற்றும் இறால் வளர்ப்பு ஆகியவை, அம்மாவட்டத்தின் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள்.இம்மாவட்டத்தில் 9,000 மீன்பிடிக் கலன்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மீன்வளப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு, நாகப்பட்டினம் மிகவும் உகந்த இடமாக உள்ளதால், இந்த மீன்வளப் பல்கலைக் கழகம் நாகப்பட்டினத்தில் நிறுவப்படும்.
நாகப்பட்டினம் தாலுகாவில் பனங்குடி மற்றும் நாகூர் கிராமங்களில், 85 ஏக்கர் நிலப்பரப்பில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மீன்வளப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். முதல் கட்டமாக, தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மீன்வளத் துறையின் ஆராய்ச்சிப் பிரிவு, சென்னையில் உள்ள மீன்வளத் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம், சென்னையில் உள்ள மீன்வளத் தொழில்நுட்ப பயிற்சி நிலையம், சென்னையில் உள்ள மீன்வளப் பணியாளர் பயிற்சி நிலையம், தமிழ்நாடு கடல்சார் கழகம் ஆகியவை, இந்த புதிய பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும்.புதிதாக அமைக்கப்படவுள்ள இந்தப் பல்கலைக் கழகத்தில் இறால் வளர்ப்பு, கெண்டை மீன் வளர்ப்பு, வண்ண மீன்வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் மீன் மதிப்புக்கூட்டிய பொருட்கள் உற்பத்தி, மீன்பிடி படகு மற்றும் இயந்திர பராமரிப்பு, கடலாள் பயிற்சி மற்றும் நீர்வழிப் பயிற்சி ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்படும்.தொழில்நுட்பப் பரிமாற்றம், விரிவாக்கக் கல்வி, மனித வளப்பயிற்சி மற்றும் மீன்வளப் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதில், இந்த பல்கலைக் கழகம் பெரும் பங்கு வகிக்கும். மேலும் இந்தப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெறும் நபர்கள், உள்நாடு மற்றும் உலக அளவில் வேலை வாய்ப்பு பெறவும் இதுவழி வகுக்கும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More