Thursday, September 15, 2011

கலாநிதி-தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை

Kalanidhi Maran and Dayanidhi Maranடெல்லி: ஏர்செல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டி.வி. நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ்-அஸ்ட்ரோ நிறுவனத்தின் செயல் அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

தயாநிதி மாறன் 2004-2007ம் ஆண்டு காலத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை விரிவாக்கம் செய்ய 2ஜி ஸ்பெக்ட்ரம் கோரி விண்ணப்பித்தது.

ஆனால், அதை வழங்க தயாநிதி மாறன் கால தாமதம் செய்ததார் என்று புகார் கூறப்பட்டது.

இந் நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்கடி தந்ததாக சிபிஐயிடம் ஏர்செல் நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரன் குற்றம்சாட்டினார். இதனால் அதை மேக்சி்ஸ் நிறுவனத்துக்கு விற்றதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார்.

தான் அதை மேக்சி்ஸ் நிறுவனத்துக்கு விற்ற பின், ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இதற்குக் கைமாறாக சன் டிவியின் டிடிஎச் சேவையில் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரோ ரூ. 600 கோடியை முதலீடு செய்தாகக் கூறப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளையடுத்து மத்திய ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தயாநிதி மாறன் கடந்த ஜூலை மாதம் பதவி விலக நேரிட்டது.

இந் நிலையில் கலாநிதி மாறனை நேற்று டெல்லி தலைமையகத்துக்கு வரவழைத்த சிபிஐ அவரிடம் தீவிர விசாரணை நடத்தியது.

அதே போல மலேசியாவின் மேக்சி்ஸ்-அஸ்ட்ரோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ரால்ப் மார்ஷலிடமும் விசாரணை நடத்தியது.

கலாநிதி மற்றும் மார்ஷலிடம் சன் டிவியில், ஆஸ்ட்ரோ நிறுவனம் சார்பில் நடைபெற்ற முதலீடுகள், சிவசங்கரனின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அதே போல முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.

மேலும் தயாநிதி மாறனின் உதவியாளர் நம்பியாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக தயாநிதியை சிபிஐ மீண்டும் விசாரிக்கலாம் என்று தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ அடுத்த சில நாட்களில் தனது 3வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவுள்ள நிலையில் இந்த விசாரணைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More