Thursday, September 15, 2011

தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வெடுக்கக் கூடாது : விஜயகாந்த்

சென்னை: ""சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த நிலையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வெடுக்காமல் தொகுதிக்கு சென்று, மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்'' என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். தே.மு.தி.க., ஏழாம் ஆண்டு துவக்க விழா, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி கொடியை ஏற்றி வைத்த விஜயகாந்த், அங்கு திரண்டிருந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன், சந்திரகுமார், பார்த்தசாரதி, சேகர் உள்ளிட்ட, 28 தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்குபின், எம்.எல்.ஏ.,க்களிடம் பேசிய விஜயகாந்த், "சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததால், எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வெடுக்கூடாது. தொகுதிக்கு சென்று, மக்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தான் நம்மை தொகுதி மக்கள் தேர்வு செய்துள்ளனர். அதோடு வரும் 25ம்தேதி கோவையில் நடக்கவுள்ள கட்சி ஆண்டு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டும். ஆண்டுவிழாவில் கட்சித் தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக காலையில் தனது சாலிகிராமம் வீட்டிலும், கட்சி கொடியை ஏற்றி வைத்த விஜயகாந்த், அங்கு வந்த மகளிர் அணியினருக்கு இனிப்புகள் வழங்கினார். 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More